அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, February 15, 2008

இஸ்லாம்

இஸ்லாம் பற்றி தெளிவாக அறிந்துக்கொள்ள .....

.

.
இஸ்லாமும் விஞ்ஞானமும்!


அர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 2)

அர்த்தமுள்ள இஸ்லாம் - பாகம் 1 செல்ல இங்கே அழுத்தவும்
.
.
2. மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்

'மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் ''மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன'' என்பதாகும்.
  • அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.
  • ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.

தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் ''மதங்கள் அர்த்தமற்றவை'' என்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.

கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

ஒன்று உடலால் செய்வது.

மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.

தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.

உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

''மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்'' என்ற விமர்சனம் இதில் எழாது.

பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.

வறுமையில் உழல்கிறார்கள்.

மன நிம்மதியை இழக்கிறார்கள்.

குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.

இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது ''கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உணக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்'' என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.

ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது. மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.

''கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்'' என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.

கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் ''கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே'' என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.

கடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.
''ஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது'' எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.

''இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்'' என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.

நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.
''மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை'' என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். ''என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?'' என்று மனிதன் பதிலளிப்பான். ''எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 4661 )

''மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்'' என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.

வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.

இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா?

செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.

செலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.

''கடவுளை மற! மனிதனை நினை!'' என்பார்கள்.

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

திருமறைக் குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 4:8)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! (திருக்குர்ஆன் 17:26)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 24:22)

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன் 30:38)

அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) (திருக்குர்ஆன் 76:8,9,10)

குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று (நல்லோர்) விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள். (திருக்குர்ஆன் 74:40 41, 42, 43, 44)

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும். (திருக்குர்ஆன் 70:24)

எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்! (திருக்குர்ஆன் 93:10)

(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 2:280)
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:245)

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:265)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:272)

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு. (திருக்குர்ஆன் 57:18)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர்ஆன் 2:177)

மனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.

எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

3. கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்

மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடை முறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.

கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.

முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

* தொட்டாலும், பட்டாலும் தீட்டு

* சில வீதிகளில் நடமாடத் தடை

* தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்

* செருப்பணியத் தடை

* பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை
என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.

''கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்'' என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.
இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு 'மதங்கள் அர்த்தமுள்ளவை' என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.

ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49:13)

இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.

ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை 'பிறப்பால் உயர்ந்தவன்' என்றும் மற்றவனை 'பிறப்பால் தாழ்ந்தவன்' என்றும் எவரும் கூற மாட்டோம்.

இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

''மனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது'' என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.

இதை வெறும் வரட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

''மனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள்'' என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.

ஆனாலும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவலாயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.

நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.

முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.

குர்ஆனையும் நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிரிந்துள்ளனர்.

ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும்.

ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது.

மேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம்.

மக்காவில் உள்ள கஃபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

மேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்.

இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.
குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.

''குடியரசுத் தலைவர் வந்து விட்டார்'' என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும் ''என்னை முன் வரிசைக்கு அனுப்புங்கள்'' என்று கேட்டதும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

கடையநல்லூர் மஜித், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு.

காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு 'பராக்' சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை.
பள்ளிவாச­லும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை.

எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு சகோரத்துவத்தை இஸ்லாம் பேணுகிறது.

4. சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்


கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.

மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.

எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.

இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.

முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.

எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.

தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.

''எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்'' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.

இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் ''நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு'' என்றார்கள். (நூல்: புகாரி 4001, 5147 )

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ''இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ''நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். ''மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) ; நூல்: அபூதாவூத் 1828 )

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ''எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மரியாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.

''எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே'' என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: அஹ்மத்: 7054 )

எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449 )

யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 1330, 1390, 4441 )

பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை.

மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.

சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.

தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.

இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.

அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.

அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.

அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.

எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.

காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ''அமருங்கள்!'' என்றனர். ''தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள். (நூல்கள்: திர்மிதி 2769 அபூதாவூத் 4552 )

''உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்'' என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678 )

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ''பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 624 )

யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள்.

அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது ''நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது'' என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.

தமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை.
எனவே மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.

சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்கு சிலை வடித்து மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.

கற்சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவரின் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்?

வழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

எனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமரியாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது.

மத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.

ஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது. எனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.

5. புரோகிதமும் சுரண்டலும்


'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.

கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல் நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.

மேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள் ''தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள்'' என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.
ஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.
ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.

மேலும் ''மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை'' என இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் காலத்தில் அப்துர் ரஹ்மான் என்ற செல்வந்தர் இருந்தார். நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பத்து தோழர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நாள் நறுமணம் பூசியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ''ஏன் நறுமணம் பூசியுள்ளீர்கள்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ''நேற்று எனக்குத் திருமணம் ஆகி விட்டது'' என்று அவர் விடையளித்தார். ''அப்படியானால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து அளிப்பீராக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி 2048, 2049, 3781, 3937, 5072, 5153, )

''நான் மதகுரு இருக்கும் போது என்னை அழைக்காமல், எனக்குச் சொல்லாமல் எப்படி நீர் திருமணம் செய்யலாம்?'' என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கவில்லை. என்னை அழைக்காததால் திருமணம் செல்லாது எனவும் கூறவில்லை.

''திருமணத்தை நடத்தி வைக்க மதகுரு அவசியம் இல்லை'' என்பதை இதிலிருந்து அறியலாம்.

''என் மகளை அவளது சம்மதத்துடன் உனக்கு மணமுடித்துத் தருகிறேன்'' என்று பெண்ணைப் பெற்றவர் (அல்லது வேறு பொறுப்பாளர்) கேட்க, ''நான் இதை மனமாற ஒப்புக் கொள்கிறேன்'' என்று மணமகன் கூறினால் திருமணம் முடிந்து விட்டது.

நாளைக்குப் பிரச்சினைகள் வந்தால் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல குறைந்தது இரண்டு சாட்சிகள். மணமகன் மணமகளுக்கு மஹர் எனும் மணக் கொடை அளித்தல் ஆகியவை தான் இஸ்லாமியத் திருமணம்.

மந்திரங்களோ, வேறு எந்தச் சடங்குகளோ இல்லை.

அது போல் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், வீடு கட்டுதல் போன்ற காரியங்களிலும் புரோகிதருக்கு வேலை இல்லை.

இறந்தவருக்காக அவரது நெருங்கிய உறவினர் தான் பிரார்த்தனையை முன்னின்று நடத்த வேண்டும். இங்கேயும் புரோகிதருக்கு வேலையில்லை.
வியாபாரமோ, தொழிலோ, வீடோ எதை ஆரம்பித்தாலும் ''இறைவா! எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை!'' என்று ஒவ்வொருவரும் உளமுருகி இறைவனை வேண்டி விட்டு ஆரம்பிக்கலாம். மதகுருமார்கள் யாரையும் அழைக்கத் தேவையில்லை என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

மேலும் பேய், பிசாசு, பில்லி சூனியம், மாயம் மந்திரம், சாஸ்திரம், சகுணம், சோதிடம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள் என்று புரோகிதர்களின் வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் அறவே இஸ்லாம் மறுக்கிறது.

எந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பது தான் இஸ்லாம் காட்டும் நெறி.

எனவே அர்த்தமற்ற தத்துவம் ஏதும் இஸ்லாத்தில் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Thursday, February 14, 2008

அர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)

அர்த்தமுள்ள இஸ்லாம்
- மௌலவி P.J.

உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.

ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.

'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் 'ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?' என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.

மேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.

வலிமையான வாதங்களையும் முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை எனக் கண்டு கொள்ளலாம்.
  • அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்.
  • நெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்
என்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.
''அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது'' என்று விமர்சனம் செய்யும் போது ''சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது?'' என்று பதில் கூற முடியாது.

விழுந்து விடக் கூடிய கட்டத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.

'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.

எனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.

நாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை.

'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.
.
1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்
மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.

பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.

''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.
  • நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்
  • நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்
  • சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்
  • குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்
  • வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்
  • கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்
  • தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்
  • படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்
  • சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்
  • இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்
  • ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்
இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?

''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.

இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.

கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர். (நூல்: புகாரி 1297, 1298, 3519 )

தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.

ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ''ஏன் இவர் நடந்து செல்கிறார்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ''நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரி 1865, 6701)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது ''அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்'' என்று கட்டளை பிறப்பித்தார்கள். (நூல்: புகாரி 6704 )

கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.

பொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மத குருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர். ஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது. கடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஃது பின் அபீ வக்காஸ் கூறுகிறார். (நூல்: புகாரி 5074 )

ஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ''ஏக இறைவனை நம்பியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். (நூல்: புகாரி 4615)
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கும்'' என்பதை விசாரித்து அறிவதற்காக மூன்று பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிடம் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் (எதிர்பார்த்ததை விட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள். ''நபிகள் நாயகம் (ஸல்) எங்கே? நாம் எங்கே? அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானது)'' என்று தமக்குள் கூறிக் கொண்டார்கள். அம்மூவரில் ஒருவர் ''நான் என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன்'' எனக் கூறினார். இன்னொருவர் ''நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்று வருவேன்'' என்றார். மற்றொருவர் ''நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை'' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மூவரிடமும் சென்று ''இப்படியெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா? அறிந்து கொள்ளுங்கள்! நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்) நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். (சிறிது நேரம்) தொழுகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். பெண்களை மணமுடித்து வாழ்கிறேன். எனவே எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 5063 )

திருமணத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிசுகளைப் பெறுவார் என்ற அளவுக்கு அதை ஒரு தவமென இஸ்லாம் கருதுகிறது.

''உங்களில் ஒருவர் தமது மனைவியுடன் இல்லறம் நடத்துவதும் நல்லறங்களில் ஒன்றாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (கடவுளிடம்) பரிசு கிடைக்குமா?'' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா? அது போல் தான் இறைவன் அனுமதித்த வழியில் அதை அடைந்தால் அதற்குப் பரிசு கிடைக்கும்'' என்று விளக்கமளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1674

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.

துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.
இது தான் மனிதனின் இயற்கை என்பதால் துறவறத்தை குற்றச் செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.

சில பேர் இல்லற சுகத்தை மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு 'காடோ செடியோ' என்று சென்று விடுகிறார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் இன்னும் தாழ்ந்தவர்களாவர்.

ஒரு மனிதன் தன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளான். சொர்க்கத்தை அடைவதற்கான வழிகளில் அது தலையாயதாக அமைந்துள்ளது.

'காடோ செடியோ' என்று புறப்பட்டவர்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாத குற்றவாளிகளாவர். அதனால் கிடைக்கின்ற பெரும் பேறுகளையெல்லாம் இழந்தவர்களாவர்.

* பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்
* அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்
* மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்
* தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்
* நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்
* பொது நலத் தொண்டுகள் செய்தல்

என எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.

''எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?'' என்று ''தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?'' என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்'' என விளக்கமளித்தார்கள். (நூல்: திர்மிதீ 2693, 2718 )

யாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.

மலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

''இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை'' என்று கூறி ஆடையை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்(?) தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.

இந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை
முழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும்

* தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
* தனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்
* தனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்
* தனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்
* மற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்
* உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

என அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.
ஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமைகளில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். ''இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். (நூல்: புகாரி 1975, 6134 )

கடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

மதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டிணி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்? இது உடலை வருத்துவதில்லையா?

தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன்? இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.

நோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.

நோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.

சூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.

உண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை.

தினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.

ஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.

இவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. ((அல்குர்ஆன் 2:183)

மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.

தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான்.

இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.

யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி. (நூல்: புகாரி 1903, 6057 )

''மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு'' என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

தொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

''இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன்'' என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.

இவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.

''நமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்'' என்ற அச்சம் தான் அவனை இதிலிருந்து தடுத்து நிறுத்தும்.

முதலில் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.

இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது.

எனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.
மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.

மீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு குறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது.

எனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.

அந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான்.

தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.

தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

தீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.
இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.

பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டிணியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும்.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.

திருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பது அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும்.

தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.
இத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.

* இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்?
* இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன?
இது தான் அந்தக் கேள்விகள்.
''உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்!'' என்று தான் அவனிடம் கூற முடியும்.

அவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.

* நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது.
* நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.
* நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுகிறார்.
* பல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார்.
* அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன்.
* அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.
* இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.

''திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு'' என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம்.
''இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன?'' என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது.

இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.

''சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான்'' என்று இஸ்லாம் கூறுகிறது.
இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.

ஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.
தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்

தீ மிதித்தல்

தரைகளில் உருளுதல்

துறவறம் பூணுதல்

நிர்வாணமாக அலைதல்

போன்ற எந்த நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.

எனவே ''மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன'' என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது .

Tuesday, February 12, 2008

விதியை நம்ப வேண்டுமா?

கேள்வி:

''அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?''

பதில்:

விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகûளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.
நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.

நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.
அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள்.
(நூல்: அஹ்மத் 6381)

இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.
அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.

அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.

''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை.

மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.

எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.

எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம்.

இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(திருக்குர்ஆன் 57:23)

விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.
''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.

''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான்.
இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.
.

அல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்?

கேள்வி:

வானத்தையும், பூமியையும் படைக்க அல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்?

பதில்:

சரியான முறையில் புரிந்து கொண்டால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள். ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் நினைத்தால் இரண்டே மாதத்தில் கட்டி விடக்கூடிய அளவுக்குச் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் சக்தி இருந்தும் ஒரு வீட்டை இரண்டு வருடங்களில் கட்டுகிறீர்கள் என்றால் இரண்டு மாதங்களில் உங்களால் கட்ட முடியாது என்று கூற மாட்டோம்.

ஒரு நாளில் நம்மால் செய்ய முடியும் காரியத்தை ஐந்து நாட்களில் செய்தால் ஒரு நாளில் செய்ய நமக்குச் சக்தியில்லை என்று கூற முடியாது.

ஐம்பது கிலோ எடையைத் தூக்க முடிந்த நீங்கள் ஐந்து கிலோவாக பத்து தடவை தூக்கினால், உங்களுக்கு ஐம்பது கிலோவைத் தூக்க முடியாது என்று யாரும் கருத மாட்டார்கள்.

எந்த மனிதரும் தனக்கு எதையெல்லாம் செய்ய சக்தியுள்ளதோ அதையெல்லாம் செய்ய மாட்டார். தனக்கு எது விருப்பமானதோ அதைத் தான் செய்வார்.

அது போல தான் இறைவன் ஒரு பொருளை உருவாக்க எண்ணினால் ஆகு என்றாலே போதும்; அது ஆகிவிடும் என்பது அவனது சக்தியையும் ஆற்றலையும் கூறுகிறது. ஒவ்வொரு பொருளையும் ஆகு என்று கூறித் தான் படைத்தான் என்பது இதன் கருத்தல்ல. படைக்க அவனுக்கு முடியும் என்பது தான் இதன் கருத்து.

ஆயினும் ஒரு மனிதனை உருவாக்க அவன் பத்து மாதங்கள் எடுத்துக் கொள்வான். வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்களை எடுத்துக் கொள்வான். இதை விட அதிகமான கால அவகாசத்திலோ, குறைவான கால அவகாசத்திலோ வேறுசில காரியங்களைச் செய்வான். இப்படிச் செய்வதால் ஆகு எனக் கூறினால் ஆகும் என்ற அவனது வல்லமையை மறுத்ததாக ஆகாது.

இறைவன் தேவையற்றவன் என்றால்....?

கேள்வி:

அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ''தொழு! அறுத்துப் பலியிடு'' என்ற கட்டளையும் உள்ளதே?

பதில் :

அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.
இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது. (நூல்: முஸ்லிம் 4674)

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!
''மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்'' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

.

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி:

'அவன்' என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


பதில்

இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

'அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் 'ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

'அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு 'ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக 'ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் 'ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் 'ஹூவ''என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

'ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது ''பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது'' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் 'He' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு 'They' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக 'They' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.
ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி 'அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.
மரியாதை கொடுக்காத போது அவன் எனவும், மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும், அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் 'அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான்

கம்பன் கூறுகிறான்

ராமன் வில்லை ஒடித்தான்

என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது 'அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது 'நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.
மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்கûளைக் குறிப்பிடும் போது 'அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.

கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

கடவுளை 'அவன்' என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை 'அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

''அல்லாஹ் கூறினார்கள்'' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வை 'அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.
மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை 'அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை 'அவர்' என்றோ 'நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் 'அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

Monday, February 11, 2008

ஃபர்தா... ஏன்?

கேள்வி:
இஸ்லாமிய பெண்கள் ஃபர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

பதில்:
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.
பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

a) பாபிலோனிய நாகரீகம்:
பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

b) கிரேக்க நாகரீகம்:
பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி 'பெருமைக்குரிய' நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். 'பண்டோரா' என்றழைக்கப்பட்ட 'கற்பனைப் பெண்மணி' யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

c) ரோமானிய நாகரீகம்:

ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

d) எகிப்திய நாகரீகம்:

எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

e) இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய 'ஹிஜாப்'

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் 'ஹிஜாப்' முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1. ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.
3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - உரத்த ஆடையாக இருக்க வேண்டும்
4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் - பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.
6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் - கருப்பு நிறம் - போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

5. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.
பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். 'கலை' மற்றும் 'கலாச்சாரம்' என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் 'தீவிரமாக' வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய 'ஹிஜாப்' முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.
.

பலதாரமணம் - பெண்களுக்கு....?

கேள்வி :

ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?

பதில்:
.
இஸ்லாமியர்கள் உட்பட - ஏராளமான பேர்கள் - ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் - சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் - பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் - பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் - இயல்புகளையும் கொடுத்தான். உடல் ரீதியாகவும் - உள ரீதியாகவும் ஆண்களும் - பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் - பொறுப்புகளும் உள்ளன. இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களும் - பெண்களும் சமமானவர்களேத் (Equal) தவிர - ஒரே மாதிரியானவர்கள் (Identical) அல்ல.

அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 22வது வசனம் துவங்கி 24வது வசனம் வரை ஆண்கள் யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் - யார் யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை பட்டியலிடுகிறது. யார் யாரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியலில் 'கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டள்ளது'.(அல்-குர்ஆன் 4:24) எனக்கூறி ஆண்கள் திருமணம் ஆன பெண்களை மணமுடிப்பதை தடை செய்கிறது.

இஸ்லாம் - பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதை ஏன் தடை செய்கிறது - என்பதை கீழ்க்காணும் குறிப்புகள் இன்னும் விளக்கமாக நமக்கத் தெரிவிக்கின்றன.

1. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனiவிக்கும் பிறக்கும் குழந்தைகள் இவருக்குத்தான் பிறந்தது என்பதை அடையாளம் காண்பது எளிது. இவர்தான் இந்தக் குழந்தையின் தந்தை என்று அடையாளம் காண்பதும் - இவர்தான் இந்த குழந்தையின் தாய் என அடையாளம் காண்பதும் மிக எளிது. அதே சமயத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் - குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று. குழந்தைகளின் தாயும் - தந்தையும் - இன்னார்தான் என்று அடையாளம் - கண்டு கொள்ளும் விஷயத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்குகிறது. தனது பெற்றோர் இன்னார்தான் என்று அறியாத குழந்தைகள் - குறிப்பாக தனது தந்தை இன்னார்தான் என அறியாத குழந்தைகள் - மனோநலம் குன்றியவர்களாக மாறுகிறார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை. மேற் கூறப்பட்ட காரணங்களினால்தான் விலைமாதுகளுக்குப் பிறந்த குழந்தைகளின் - குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு - அதனால் பிறந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது - ஒரே குழந்தைக்கு - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகப்பனாரின் - பெயர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகலாம். ஆனால் சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக - மரபணுச் சோதனை செய்து - ஒரு குழந்தையின் தாய் இன்னார்தான் என்றும் - ஒரு குழந்தையின் தந்தை இன்னர்தான் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதும் நான் அறிந்தவிஷயம். எனவே நான் எடுத்து வைத்த இந்த வாதம் கடந்த காலத்துக்குப் பொருந்துமேத் தவிர - இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது.

2. ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

3. ஓரு ஆண் - பல பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளை செய்ய உடலியல் ரீதியாக ஆணுக்கு அந்த பணி மிக எளிதானதாகும். பல ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஓரு பெண் - மாதவிலக்காகும் கால கட்டங்களில் - மனோ ரீதியாகவும் - நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் - ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

4. பல கணவர்களை கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடல்உறவு கொள்வதால் - பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் - எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்னை பல பெண்களை மணந்து கொள்ளும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை தடை செய்த அல்லாஹ்தான் மற்றுமுள்ள காரணங்களை அனைத்தையும் அறிந்தவன். எனவேதான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

.