அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, April 30, 2008

விக்கிரக வழிபாட்டை விமர்சிப்பதேன்?

கேள்வி : ஹிந்து கிறிஸ்துவ மதத்தினர் மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகங்களை வைத்துள்ளனர். மற்றபடி விக்கிரகத்தின் வழியே ஏக இறைவனையே வணங்குகின்றனர். அதை ஏன் குறை காண்கிறீர்கள்?

பதில் : பொதுவாக ஆட்களில் அல்லது பொருட்களில் காணக்கூடிய உருவமைப்புகள் வணக்கத்திற்குரிய பொருளாயுள்ள ஒரு சிலை விக்கிரகமாகும். சிலைகளுக்கு முன் வணக்கச் செயல்களை செய்கின்றவர்கள் உண்மையில் தங்கள் வணக்கம் அந்த சிலை குறித்துக் காட்டும் கடவுளுக்குச் செலுத்தப்படுகிறதென சொல்கின்றனர். சிலைகளை இவ்வாறு பயன்படுத்துவது இஸ்லாமல்லாத அனைத்து மதங்களிலும் வழக்கமாயுள்ளது.

கிறிஸ்தவ பழக்கத்தை குறித்து, நியூ கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா (1967 Book VII, Page 372) கூறும் பொழுது: 'ஒரு சிலைக்கு செலுத்தப்படுகிற வணக்கம் அது குறித்து நிற்கும் அந்த ஆளிடம் போய் சேர்ந்துவிடுவதால், அந்த ஆளுக்குச் செலுத்த வேண்டிய அதே வகையான வணக்கத்தை அந்த ஆளைக் குறித்து நிற்கும் அந்த சிலைக்குச் செலுத்தலாம்' என்றுள்ளது.

இறைவனை நினைவில் கொள்ளவும், மனதை ஓர்மைப்படுத்தவும் விக்கிரகங்களை வைத்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார். ஆனால் இது ஏற்புடையவாதமல்ல காரணம்:

1. உலகமத கிரந்தங்களை ஆராய்வோமானால் அவையனைத்தும் ஏக இறைவனை எவரும் கண்டதில்லை என்றே கூறுகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை' (அதர்வவேதம் 32:3)

ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்ல. அசூரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல' (பகவத் கீதை 10:14)
- என்று இந்து வேத இதிகாசங்கள் கூறுகிறது.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1 : 18)
- என்று கிறிஸ்துவ வேதம் கூறுகிறது.

அப்படியிருக்க காணாத ஒரு வஸ்துவுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்?

உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் ஒரு நாயை அல்லது பூனையை போன்ற உருவம் வடித்து வைத்து இது தான் நீங்கள் என்று கூறுவார்களானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய பாரத பிரதமரை காணாத ஒருவர் அவரை நினைவில் நிறுத்த ஒரு குரங்குச் சிலையை வடித்து வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வரா? மாட்டார். ஏன்? குரங்கும், நாயும் மனிதனை விட தரம் தாழ்ந்தது என்று நாம் கருதுவதால் ஆகும்.

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்? படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம்தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா? ஆகவே அது கூடாது என்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறது இஸ்லாம்.

2. விக்கிரங்களுக்கு புனிதம் கற்பிப்பதில்லை. அதன் வழியே ஏக இறைவனையே வணங்குகிறோம் என்று ஒரு சாரார் கூறுவதும் ஏற்புடைய வாதமல்ல. விக்கிரகங்களுக்கு புனிதம் கற்பிக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். விக்கிரகங்களைச் செதுக்கும் போது விரதம் இருப்பதும். விக்கிரகத்தை நிறுவும் போது சிறப்ப வழிபாடுகள் செய்வதும் அதற்கு சந்தனமும், பூவும் சாத்துவதும், பாலாபிஷேகமும், பன்னீர் அபிஷேகமும் செய்வதும், பஞ்சாமிர்தமும், அரவணையும் படைக்கப்படுவதும் புனிதம் கற்பிக்கப்படுவதையே பறைசாற்றுகிறது. அதனால் தான் ஒரு விக்கிரகத்தை மாற்றி மற்றொரு விக்கிரகத்தை நிறுவ எவரும் முன் வராததை நடைமுறை உலகில் காண்கிறோம்.

3. இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதை இறைவன் தான் கற்றுத்தர வேண்டும். ஆனால் உலகில் காணப்படும் எந்தவொரு வேதகிரந்தமும் இறைவனுக்கு விக்கிரகம் வடித்து வைத்து வணங்குங்கள் அது உங்கள் மனதை ஓர்மைப்படுத்த உதவும் என்று கற்பிக்கவேயில்லை.

'யட்சத்து சான பஷ்யதி ஞான சஷ்யம் சிலஸ் யதி
பிரம்மத்துவம் வித்தி நேதம் ஏகிதம் முபாஸதே'


(கண் கொண்டு காண சாத்தியமில்லாதது எவனையோ அவனே படைத்த இறைவனாவன். அவனே கண்களுக்கு பார்வை சக்தியை வழங்குகிறவன். இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு காணும் வஸ்துக்கள் யாவும் இறைவனில்லை) என்று கேனே உபநிஷத் 1 : 6 கூறுகிறது.

'மேலே வானத்திலும கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்குமஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்' என்று பைபிளும் (யாத்திரகாமம் 20:1-5) கூறுகிறது.

எனினும் அவைகள் ஏட்டளவில் இருப்பதாலும் இன்னும் உருவம் கற்பித்து வணங்குவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சலோகங்களையும், வசனங்களையும் அவ்வேதங்கள் இடைச் சொறுகல்களாக உட்கொண்டிருப்பதாலும் இந்து கிறிஸ்தவர்கள் விக்கிரக வழிபாட்டை விட்டுவிடத் தயாரில்லை. ஆனால் இறைவன் தன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் திட்டவட்டமாக கடுமையாக விக்கிரக வழிபாடு கூடாது என்கிறான்.

விக்கிரகம் தான் மனதை ஓர்மைப்படுத்துகிறது என்பது ஏற்புடைய வாதமல்ல முஸ்லிம்கள் எந்த ஒரு விக்கிரகமும் வைக்காமல் மனதை ஒர்மைப்படுத்தியே ஏக இறைவனை நேரடியாக வணங்குகின்றனர். இன்னும் சொல்வதானால் விக்கிரக வழிபாடுடையவர்கள் தாம் தங்கள் வழிபாட்டின் போத மனதைச் சிறகடிக்கும் வகையில் மணி அடித்தும், கொட்டடித்தும் இசைக்கருவிகளை இசைத்தும் கொண்டுதான் விக்கிரகங்களை வணங்குகின்றனர். ஆகவே மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகம் வைத்திருக்கிறோம் என்பதும் ஏற்புடைய விதமல்ல.

இன்னொரு கோனத்திலும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நேற்று வரை ஒரு கல் சாதாரனமாக இருந்துக்கொண்டிருக்கும். அல்லது அது மேல் எத்தனையோ மனிதர்களாலோ அல்லது மிருங்களாலோ அசிங்கம் செய்யப்பட்டிருக்கும். அடுத்த நாள் அந்தக் கல்லை ஒரு சிற்பி எடுத்து இவர்கள் விரும்புவது போல் இவர்கள் விருப்பப்பட்ட சிலையை வடித்துக்கொடுத்ததும் அந்தகல்லுக்கு சக்தி வந்துவிடுவதாகவும், உடனே அதை வணங்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

அந்தக் கல் நேற்றுவரையிலும் கேட்பாறற்று கிடந்ததே! அப்பொழுதெல்லாம் அதை தெய்வமாக பார்க்காத மனிதன், அதை அவர்கள் விரும்புவதுபோல் சிலையாக வடிக்கப்பட்டதும் உடனே வணங்குவதைத்தான் தவறென்று கூறுகிறது இஸ்லாம். அது ஒரு கல் அவ்வளவு தான். அது எந்தவிதத்திலும் வணங்குவதற்கு தகுதியற்றது என்பதே இஸ்லாத்தின் ஆணித்தரமான வாதம்.

இந்த இடத்தில் மனிதனை இந்த விக்கிரக வழிபாடு ஓர்மைப்படுத்துகின்றதா? அல்லது அவனது பகுத்தறிவுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறதா? இதைத்தான் ஒரு கவிஞன் சொன்னான் :

மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது............... என்றான்

உலகத்தில் எல்லா மதக்கிறந்தங்களும் விக்கிரக வழிபாட்டை எதிர்க்கின்றன. ஆனால் அந்த மதங்களால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அது முடியவும் முடியாது. காரணம் அந்த மதங்களில் வேறு ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடுகள் நுழைந்துவிடும். அது இந்துமதமானாலும், கிறிஸ்தவ மதமானாலும் அல்லது புத்தமதமானாலும் இன்னும் எத்தனையோ மதமானாலும் இதே நிலைத்தான். ஆனால் இஸ்லாம் மட்டும் தான் உலகத்தில் வேறு எந்த மதத்தைக் காட்டிலும் விக்கிரக வழிபாட்டை நியாயமான காரணங்களுடன் எதிர்ப்பதுடன் அதை 1400 ஆண்டுகளாக இன்றும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுவே இஸ்லாம் தான் 'சத்திய மார்க்கம்' என்பதற்கு சிறந்த சாண்று.

.
.
.
.

0 comments: