அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, August 06, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்!

- தேங்கை முனீப்


வராலாற்றுச் செய்திகளில் குர்ஆனும் பைபிளும் சில இடங்களில் ஒரே தகவல்களைத் தந்தாலும் பல இடங்களிலும் முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மாறுபாடுகள் குர்ஆனை பைபிளிலிருந்து பிரித்துக் காட்டி அதன் பரிசுத்த தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. அகிலங்களின் இறைவனால் இது இறக்கப்பட்டது என்ற குறிப்பு குர்ஆனில் உள்ளது. பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்ற குறிப்பு பைபிளிலும் உள்ளது. இந்த இரண்டு அடிப்படைகளை வைத்து ஆராயும்போது குர்ஆன் பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம் என்பதைத் தெளிவு பட விளங்க இயலும்.

பைபிள் இறைவேதமல்ல என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் பைபிளிலிருந்தே விவரித்துக் காட்டிய போது அதற்கு மறுப்பளிக்க இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த மிஷினரிகளுக்கு ஆறுதலாக குர்ஆனை விமர்சிக்கும் ஒரு இணைய தளம் கிடைத்தது. இவர்களைப் போன்றே சர்வதேச அறிஞர்களால் பைபிள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாத கிறித்தவ மிஷினரிகளின் மூளையில் உதித்த தந்திரத்தின் வெளிப்பாடே குர்ஆனின் மீதான குற்றச்சாட்டுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மகத்தான அற்புதம்! இவர்கள் எந்தெந்த வசனங்களைக் குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களோ அந்த வசனங்கள் குர்ஆனின் மகத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் அது இறைவேதம் என்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது. குர்ஆனை விமர்சித்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலளிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள் பைபிளை விமர்சிக்க மாட்டார்கள் என்ற இவர்களின் சர்வதேச தந்திரத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார்கள். அல்லாஹ்வின் கிருபையால் அவனது மகத்தான பேரொளிக்கு முன்னால் இவர்கள் வைக்கும் புரட்டு வாதங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்பது நிச்சயம்!

யஹ்யாவும் யோவானும்

குர்ஆனில் 19 ஆம் அத்தியாயத்தில் யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. நெடுங்காலமாகியும் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காத ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு யஹ்யா என்ற ஒரு குழந்தையைக் குறித்து நற்செய்தி கூறினான். இதைப் பற்றிக் கூறும் வசனம்.

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை' ( (19:7)

மேற்கண்ட வசனத்தில் (ஜகரிய்யா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மகனுக்கு வழங்கப்பட்ட பெயரான) யஹ்யா என்ற பெயர் முன்பு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த யஹ்யாவை பைபிள் யோவான் என்று கூறுகிறது. (குர்ஆனில் குறிப்பிடப்படாத) இந்த யோவான் என்ற பெயர் முன்பு பலருக்கும் வழங்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது. எனவே இது குர்ஆனில் உள்ள ஒரு வரலாற்றுப் பிழை. இதுவே மிஷினரிகளின் குற்றச் சாட்டு.

விளக்கம் :

1. பைபிள் கூறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குர்ஆனை ஆராய வேண்டுமெனில் முதலில் பைபிளின் புனிதத் தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். பைபிளில் ஏராளமான வரலாற்று முரண்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் புரோகிதர்கள் தங்கள் விருப்பப்படி எழுதியதால் அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களும் முரண்பாடுகளும் மலிந்துள்ளன என்று நாம் கூறி வருகிறோம். இந்நிலையில் முதலில் பைபிளின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்காமல் பைபிளை அடிப்படையாகக் கொண்டு குர்ஆன் கூறும் தகவலை உரசிப் பார்த்தல் என்ற அடிப்படையே தவறாகும்.

2. குர்ஆனில் ஜாண் என்றோ யோவான் என்றோ யோஹனான் என்றோ ஒரு பெயர் இல்லை, யஹ்யா என்பதும் யோவான் (அல்லது ஜாண் அல்லது யோஹனான்) என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களைக் கொண்ட இரண்டு பெயர்கள் என்று ஒரே வரியில் உள்ள மறுப்பே இதற்குப் போதுமானது. இருப்பினும் இவர்களில் சிலரையேனும் சிந்திக்க வைக்கக் கூடும் என்பதால் இது பற்றிய ஒரு விசாலமான ஆய்வு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது குர்ஆனில் உள்ள யஹ்யா என்ற பெயரும் பைபிளில் உள்ள யோவான் என்ற பெயரும் ஒன்றுதானா? என்பதைப் பற்றியாகும்.

மேற்கண்ட வசனத்திற்கு சில ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் யஹ்யா என்ற இடத்தில் ஜாண் என்று நோரடியாகவும் சிலர் அடைப்புக் குறிக்குள்ளும் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை கிறித்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியிருக்கலாம். தமிழ் தர்ஜமாக்களில் எங்கேனும் யோவான் என்று உள்ளதா என்று துளாவியவர்களுக்கு கிடைத்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் யஹ்யா என்றே உள்ளது. மேலும் ஜலாலைன் தஃப்ஸீர் என்று இவர்கள் மேற்கோள் காட்டியதின் அரபிப் பதிப்பில் யோவான் என்ற பதமே இல்லை. மாறாக யஹ்யா என்றே உள்ளது.




எது எவ்வாறாயினும் குர்ஆனில் சில மொழி பெயர்ப்பாளர்கள் ஜாண் என்று குறிப்பிட்ட பெயரும் குர்ஆனில் காணப்படும் யஹ்யா என்ற பெயரும் முற்றிலும் வேறுபட்ட பொருள் உடைய இரண்டு பெயர்களாகும்.

யஹ்யா - யோவான் இரண்டும் ஒன்றா?
குர்ஆனில் இதற்கு முன்பு இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது யஹ்யா என்ற பெயராகும். யஹ்யா என்பதும் யோவான் என்பதும் ஒரே பதம் என்று தவறாகக் கருதிய சில மொழி பெயர்ப்பாளர்கள் தங்கள் மொழி பெயர்ப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் யோவான் என்ற பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்பதாக இருந்தால் அரபு மொழியில் உள்ள பைபிளிலும் இதே பெயர் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். (இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற பதமே அரபி பைபிளில் உள்ளது என்பதை முன்பு விளக்கியிருந்தோம்). அரபி பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

(எஸ்றா 8:12)

(யோவான் 1:6)

மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள யஹ்யாவும் பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ள யோவானும் ஒன்றல்ல என்பதை விளங்ககிக் கொண்டோம்.

யோவான் (யோஹனான்) என்பது ஹீப்ரு வார்த்தை. யஹ்யா என்பது அரபிப் பதம். யோவான் என்ற ஹீப்ரு பதம். யோவான் என்ற ஹீப்ரு பதத்தின் அரபிப் பதமே யஹ்யா என்றிருப்பின் இரண்டினதும் பொருள் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? யோவான் (யோஹனான்) என்ற ஹீப்ரு பதத்தின் பொருள் யெஹோவாவின் கிருபை அல்லது யெஹோவாவின் இரக்கம் என்பதாகும். அதாவது இரண்டு வார்த்தைகளை உடைய ஒரு வாக்கியம். யூ + ஹனான் = யூஹனான். யூ என்பது யெஹோவாவையும் ஹனான் என்பது கிருபையையும் குறிக்கும். ஹன்னான் என்ற ஹீப்ரு பதம் இரக்கம், கிருபை என்ற பொருளை ஹனான் என்ற அரமாயிக் மூலத்திலிருந்து உருவான பதமாகும்.

யஹ்யா என்ற அரபிப் பதம் ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவானதாகும். இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. முதலாவது அல்-ஹயாத் என்ற பதத்திலிருந்து உருவான 'ஜீவன்' அல்லது 'உயிர்' என்ற பொருளுடையது. இரண்டாவது அல்-ஹயா என்ற மூலப் பதத்திலிருந்து உருவான 'வெட்கம்', 'நாணம்' என்ற பொருளைக் கொண்டதாகும்.

யஹ்யா என்ற பெயரும் யோவான் என்ற பெயரும் முற்றிலும் மாறுபட்ட பெயர்கள் ஆகும் என்பதை விளக்கினோம். மிஷினரிகளின் விமர்சனம் அடிப்படையற்றது என்பதற்கு இவை போதுமான ஆதாரங்களாகும்.

3. குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்தும் இன்னும் சில சான்றுகள்
நாங்கள் யோவான் ஸ்நானனைப் பின்பற்றுபவர்கள் என்றும் அவர் இறுதி இறைதூதர் என்றும் நம்பக்கூடிய ஒரு மதப் பிரிவினர் ஈராக் மற்றும் ஈரானில் இன்றும் காணப்படுகின்றனர். போர்ச்சுகீஸ் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை யேவானுடைய கிறிஸ்தவர்கள் (Christians of John the Baptist) என்று அழைக்கின்றனர். ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றும் இவர்கள் ஞானஸ்நானம் செய்வதை தங்களின் முக்கிய மதச் சடங்காகக் கடைபிடித்து வருகின்றனர். தங்கள் மதத்தைக் குறித்து மந்தாய் என்றும் தங்களை மந்தாயியர்கள் என்றும் இவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமில் உள்ளது போன்று பிரார்த்தனை, நோன்பு, தர்மம் செய்தல் போன்ற சில மதச் சடங்குகளை இவர்களும் கடைபிடித்து வருகின்றனர். அரமேய மொழியுடன் தொடர்புடைய ஸெமிட்டிக் வழக்கைக் கொண்ட மந்தாயி என்னும் மொழியில் (Mandiac language ) இவர்களின் மத கிரந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. கின்ஸா ராபா, த்ராஷா இத் யஹ்யா, ஆதாம் போஹ்ரா, தி கிலெஸ்தா, நியானி முதலானவையே இவர்களுடைய மத புத்தகங்களாகும் (Ref: http://www.mandaeans.org/aboutthemandaeans.htm)

தாங்கள் இறைதூதராகவும் குருவாகவும் ஏற்றுக் கொண்ட யோவான் ஸ்நானனைக் குறித்து இவர்கள் கூறுவது யஹ்யா யூஹனான் என்பதாகும். இவர்களின் ஒரு மதநூலின் பெயரே த்ராஷா இத் யஹ்யா என்பதைக் கவனிக்க. (Drasha id Yahia: It includes the teachings and wise sayings of the prophet Yehia bin Zekaria.) யஹ்யாவின் புத்தகம் என்பது இதன் பொருளாகும். இவர்களுடைய முக்கிய மத நூலாகிய கின்ஸா ராபாவில் (Ginza Raba) 410 வது அத்தியாயத்தின் தலைப்பு யஹ்யாவின் பிரார்த்தனைகள் என்பதாகும். இவற்றின் மூலம் ஜகரிய்யாவின் புதல்வருக்கு யஹ்யா மற்றும் யோஹனான் ஆகிய இரண்டு பெயர்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

மந்தாயி மக்களைப் பற்றியும் அவர்களின் மதச் சடங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராகிய இ.எஸ் ட்ரோவர். இவரும் மார்க்குச் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அகராதி (E.S. Drowoer & R. Marcuch: A MANDAIC DICTIONARY 1963 OXFORD) மந்தாயியர்களின் மத அடிப்படைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். இப்புத்தகத்தின் 185 மற்றும் 190 ஆம் பக்கங்களில் முறையே யஹ்யா மற்றும் யூஹனான் ஆகிய இரு பெயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அவற்றைக் காண்க.





இத்தகைய ஆதாரங்களிலிருது நமக்குச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. அதாவது ஒவ்வொரு மந்தாயியர்களுக்கும் மல்வாஷா பெயர் என்றும் லகப் என்றும் இரண்டு பெயர்கள் வழங்கப் படுகின்றன. எதற்காக இவ்விரு பெயர்கள்? இ.எஸ் ட்ரோவர் எழுதுகிறார்: இரண்டாவது பெயர் பொதுவாக வழங்கப்படும் முஹம்மதிய பெயராகும். இவையே வழக்கமாக உபயோகிக்கப் படுகிறது. முதலாவது பெயர் அவருடைய உண்மையான ஆன்மீகப் பெயராகும். மதம் மற்றும் சடங்குகள் சம்மந்தப் பட்ட காரியங்களில் இப்பெயர் வழங்கப்படும். (E.S. Drower. The Mandaeans of Iraq and Iran (1962-Lieden) Page 81)

யோவான் ஸ்நானனுடைய மால்வாஷா நாமம் (இயற்பெயர்) யஹ்யா என்பதும் அவருடைய லகப் (சிறப்புப்) பெயர் என்றும் இந்தக் குறிப்புகள் கூறுகின்றன. மக்கள் பொதுவாக அவரை யோஹன்னான் என்று அழைத்தார்கள். ஆனால் அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் யஹ்யா என்பதாகும். மத சம்மந்தமான விஷயங்களில் இப் பெயரே புழங்கப் பட்டுள்ளது. யஹ்யாவின் புத்தகங்களில் பெரும்பாலும் இப்பெயரைக் கொண்டே துவங்குகிறது. ஆக யஹ்யா என்பது அவருடைய உண்மைப் பெயராகவும் அதே சமயம் மக்கள் அவரை யோஹன்னான் என்று அழைத்து வந்தனர் என்பதும் புலனாகிறது.

இதற்கு முன் இப்பெயர் வழங்கப்படவில்லை என்ற குர்ஆனின் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற பெயர் குறித்தாகும். அவரது சிறப்புப் பெயராகிய யூஹனான் என்ற பெயர் குறித்து அல்ல. யஹ்யா என்பது இறை கட்டளைப்படி அவரது தாய் தந்தையர்கள் அவருக்கு வழங்கிய பெயராகும். மேலும் அது அவரது உண்மையான ஆன்மீகப் பெயர் என்ற மந்தாயி மக்களின் மத நூல்களில் காணப்படும் குறிப்புகள் குர்ஆன் இறை வாக்கு என்பதை இன்னும் உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்ற வாதத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பிடப் படாத யோஹன்னான் ஸ்நானனின் உண்மைப் பெயராகிய யஹ்யா என்ற நாமம் குர்ஆனில் கூறப்படுள்ளது அது இறைவாக்கு என்பதற்கான ஆதாரம் என்பது மிகப்பெரிய உண்மையாகும். ஆக மிஷினரிகள் குர்ஆனில் சரித்திர தவறு உள்ளது என்பதற்கு கண்டு பிடித்த ஆதாரம் குர்ஆன் இறைவாக்கு என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

4. பைபிளில் ஏன் யோவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது?
பைபிளில் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்த சுவிசேஷங்கள் அவருக்குப் பின்னர் அறுபதோ எழுபதே ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை ஆகும். மேலே குறிப்பிட்டதைப் போல் யோஹன்னான் ஸ்நானனைக் குறித்து அன்றைய மக்கள் வழங்கிய பெயராகிய யோவான் என்பதைக் குறித்த சுவிஷேச எழுத்தர்கள் அவருடைய உண்மைப் பெயராகிய யஹ்யா என்பதை அறியாமல் இருந்து விட்டனர் என்றே கூற வேண்டும். கேள்விப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சுவிசேஷங்களில் யோவான் என்ற அவரது குறிப்புப் பெயர் இயல்பாகவே இடம் பெற்றுவிட்டது.

5. யோஹன்னான் என்ற பதம் குறித்துக் குர்ஆன் என்ன கூறுகிறது?
யூ + ஹன்னான் ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஹீப்ரூ பத மே யூஹன்னான் என்பதையும் கிருபை அல்லது இரக்கம் என்பதே இதன் பொருள் என்பதையும் முன்னர் விளக்கினோம். அரபி, ஹீப்ரு மற்றும் அரமாய மொழி ஆகிய மூன்றும் ஒரே வகையான செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவை. இரக்கம் அல்லது கிருபை என்ற பொருளைத் தரக்கூடிய அரபிப் பதம் ஹனான் என்பதாகும். அற்புதம்! திருக்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் 13 ஆம் வசனத்தைக் காண்க.



மேற்கண்ட வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

'அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்' (19:13)

நம்மிடமிருந்து இரக்கசிந்தனை என்ற வாக்கியத்தின் மூல மொழியில் வ ஹனானன் மின் லதுன்னா என்று உள்ளது.

யூ ஹனானன் என்ற இரண்டு வார்த்தைகளில் உள்ள ஹனான் என்ற பதம். ஆக யூ ஹனான் என்ற பதத்திற்கு என்ன பொருளோ அதே பொருளைக் கொண்ட ஒரு பெயர் குர்ஆனில் யஹ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை அவருக்கு இப்படி ஒரு சிறப்புப் பெயர் இருந்ததைக் காட்டுகிறது.

முடிவுரை:

குர்ஆன் இதற்கு முன்னர் அப்பெயர் வழங்கப்படவில்லை என்று வழங்கியது யஹ்யா என்ற பெயராகும். யோவான் அல்லது யோஹன்னான் என்ற பெயர் அவரது சிறப்புப் பெயராகும். பைபிள் எழுதிய எழுத்தாளர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் எந்தப் பெயரால் பிரபலமடைந்தாரோ அந்த பெயரை எடுத்துக் கொண்டு அவரது இயற்பெயரை விட்டு விட்டனர். காரணம் அது குறித்து அவர்கள் அறியவில்லை. குர்ஆன் இறை கட்டளையால் அவரது தாய் தந்தையர் அவருக்கு வழங்கிய பெயரைக் கூறுகிறது. பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன.


.
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

0 comments: