சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட பாஜக, அதிமுக முதலான கட்சிகள் ராமர் பாலம் கடலுக்குள் இருப்பதால், அதை இடிக்கக் கூடாது என கூக்குரலிடுகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூச்சலிடக் காரணம், குரங்குகள் உதவியோடு, அணிலின் ஒத்துழைப்போடு, 'கடத்திச் செல்லப்பட்டத் தனது மனைவி சீதையை' மீட்க, ராமன் கடல் மீது பாலம் போட்ட தாக ராமாயணக் கதையில் வருகிறது.
சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறி னால் அந்தப் பாலத்திற்கு பாதிப்பு வரும்? ஆகவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
வெளிநாட்டுக்காரர்கள் இந்த கதை களையும் காரணங்களையும் கேட்டால், வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, மக்கள் பணம் 2,500 கோடியை இத்திட்டத்திற்காக கடலில் போட்டுள்ளது மத்திய அரசு.
அது முதலில் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ''ராமாயணம் என்பது நடந்த ஒரு வரலாறு அல்ல. கற்பனைக் கதை'' என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.
ராமரை முதலீடாக வைத்துக் கட்சி நடத்தி வரும் பாஜக சும்மா விடுமா? நாட்டை ரணகளமாக்க போவதாக மிரட்டி, மத்திய அரசை, பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வைத்தது.
மறுபடி, இப்போது ஒரு பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு, சேதுக்கால்வாய் தொடர்பாக தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பராமாயணப்படி, ராமர் கட்டிய பாலத்தை ராமரே இடித்து விட்டதாகவும், இப்போது அங்கே பாலம் ஏதும் இல்லையென்றும் கூறியுள்ளது.
உடனே, ஆன்மீக தமிழறிஞர்கள் சில பேர் இது தவறான வாதம். ராமர், பாலத்தை இடிக்கவில்லை, மத்திய அரசு குறிப்பிடும் கருத்து ''மிகைப் பாடல்கள்'' என்ற பகுதியில் தான் உள்ளன. அவை ஆதாரப் பூர்வமான (ஸஹீஹான) செய்தி (?) இல்லை என்று கூறியுள்ளனர். அவர் களின் கருத்தை ஆங்கில ஏடுகள் சில பெரிதுபடுத்திக்காட்டின.
சேதுக்கால்வாய் திட்ட எதிர்ப்பாளர் களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ் பவரும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளரும் மிகச் சிறந்த தமிழ் மேதையுமான சுபவீயிடம் நாம் இது பற்றிக்கேட்டோம். அவர் கூறியதாவது.
'கம்பராமாயணம், யுத்த காண்டம், மீட்சிப் படலத்தின் 117வது பாடலில், ராமன், 'படகுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், தான் கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை கீறி, அதாவது உடைத்து, படகுப் போக்குவரத்துக்கு உதவிய செய்தி இடம் பெறுகிறது.
ராமர்பாலம் ஒன்று இருக்கிறது என நாம் வாதத்துக்காக வைத்துக் கொண்டா லும், படகுப் போக்குவரத்துக்காக, ராமர் கொஞ்சம் இடித்தது போல, கப்பல் போக்குவரத்துக்காக இன்னும் கொஞ்சம் இடித்தால் என்ன தவறு? இது ராமன் தொடங்கி வைத்த செயல்தானே?
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளுக்கெதிராக பாலத்தை இடிக்கக் கூடாது? என ஜெயலலிதா கொந்தளிக்கிறார்.
அவருக்கு ஏன் இந்த கொதிப்பு? அவர் தன்னை சரியாக அடையாளம் காட்டுகிறார்.
வைகை நீர்த்தேக்கம் கட்டும் போது, நூற்றுக்கணக்கான சிறு தெய்வக் கோவில் கள், மதுரை வீரன், சுடலை மாடன், மாரியாத்தா கோவில்கள் இடிபட்டனவே, அப்போது இவர்கள் கூக்குரலிட்டார்களா?
அவை இந்துக் கோவில்கள் இல்லையா? சாதாரணத் தமிழ் மக்கள் வழிபடும் கோவில்களுக்கு அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள். ராமன் அவாள்களின் தெய்வம். ஆகவே, கோடிக்கணக்கான இந்துக்கள் என்று கூட்டம் சேர்ப்பார்கள்'. என்று தனக்கே உரிய பாணியில் நெத்தியடி பதில் கூறினார் சுபவீ.
பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவற்றிற்காகக் கடலை ஆழப்படுத் தும் போது, அங்கும் மணற்திட்டுகள் இருந்தன. அங்கும் ராமர்தான் போய் பாலம் கட்டினாரா என்று அறிவார்ந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ராமர் பாலத்தை இடிக்க முயன்றால் அதை அதிமுக சகிக்காது, எல்லா வகையிலும் (?) அதை எதிர்க்கும் என்று முழங்குகிறார். ஆரிய நாரிமணி ஜெயலலிதா அம்மையார்.
அண்ணா திமுக என்பது அண்ணா வின் கனவுத் திட்டம் சேதுக்கால்வாய் திட்டம், அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு அண்ணாவின் திட்டத்தை எதிர்ப்பது துரோகமில்லையா?
ராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்து என்ன? ஜெயலலிதாவிற்கு விளக்கம் தேவையானால் அண்ணா எழுதிய 'கம்பரசம்' என்ற புத்தகத்தை அவர் படிக்கட்டும்.
அண்ணாவின் கொள்கைகளை அடியோடு எதிர்ப்பவர் தனது கட்சிப் பெயரை இனியும் அண்ணா திமுக என்று வைக்காமல் அத்வானி திமுக என்று மாற்றிக் கொள்ளட்டும்.
ராமர் பாலத்தை ராமரே இடித்து விட்டார் என்று கம்ப ராமாயணத்தில் இருப்பதால், அதை ஓர் உண்மை வரலாறு போல, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்திருப்பது, மடமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது.
கம்ப ராமாயணம் ஒரு கட்டுக்கதை ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் நாட்டில் உள்ளன. ஒரு ராமாயணத்தில் ராமனுக்கு சீதை சகோதரி.
வால்மீகி ராமாயணத்தில் ராவணன் சீதையின் கூந்தலை பிடித்திழுத்து மடியில் அமர்த்திக் கடத்திச் சென்றதாக உள்ளது. கம்பராமாயணத்தில் வீட்டோடு நிலத்தைப் பெயர்த்து சீதையைக் கடத்திச் சென்றதாக உள்ளது.
ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்று ராஜாஜி போன்றவர்களே அடித்துச் சொல்லியுள்ளனர்.
இந்தப் புராண புளுகுகளை அரசின் பிரமாணத்தில் ஆதாரம் காட்டுவது அபத்தமானது.
மாற்றுப் பாதையைப் பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியிருப்பதும் கடமை தவறும் மடமைச் செயலே.
சேதுக்கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இந்நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்த துரோகமாகவே அது அமையும்.