அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, July 14, 2008

பைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்

மறுப்பும்... விளக்கமும்...

இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,


இவை போன்ற எண்ணற்ற தவறான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் உன்மைகளை தெரியப்படுத்தும் முகமாகத்தான் வல்ல இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனை இறுதி நபி மூலம் இறக்கி வைத்து சத்தியத்தை வெளிப்படுத்தினான்.

இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட உன்மைகளில் ஒன்றுதான் பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் குழந்தை அற்புதம். அதை திருக்குர்ஆன் அதன் பல்வேறு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றது.

இயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான ஒரு சம்பவம். அதுவும் இயேசுவின் பரிசுத்த தாயான கன்னிப்பெண் மரியாள், தான் திருமணம் முடிக்காத நிலையில் - அவரை எந்த ஒரு ஆணும் தீண்டாதிருக்கும் பொழுது இறை அதிசயத்தின் மூலம் இயேசுவை பெற்றெடுக்கின்றார். அதுவரை இந்த உன்மை இறைவனையும் (அவனால் அறிவிக்கப்பட்டவர்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், அன்றைய கால மக்கள் முன் திடீரென திருமணமாகாத ஒரு கண்ணிப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வரும் பொழுது என்ன நினைப்பர்? அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்? சிந்தித்துப் பாருங்கள்!

விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்தாயா? என்றிருப்பார்கள். அதற்கான தண்டனை வழங்கியே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்டிருப்பார்கள். காரணம் இயேசுவின் காலத்தில் ஒரு பெண் விபச்சார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. (பார்க்க யோவான் 8:3-5) அவ்வளவு ஏன்? விஞ்ஞானம் வளர்ந்த இன்றை காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டாலும் இது தான் நடக்கும். இந்த சந்தேகம் தான் வரும். இது இயல்பான ஒன்று. ஆனால் மரியாள் அவர்கள் அது போன்ற தண்டனையிலிருந்தும், இப்படிப்பட்ட அவதூறு பேச்சுகளிலிருந்தும் தப்பித்துள்ளார் என்றால் அது எப்படி சாத்தியமானது?

பைபிளில் இயேசுவைப் பெற்றெடுத்த பிறகு மேற்கூறப்பட்ட எந்தப் பிரச்சனையையும் மரியாள் சந்திக்கவில்லை என்று ஒத்துக்கொள்கின்றது. அவர் மேறகூறப்பட்ட பிரச்சனைகள் எதையும் சந்தித்ததாக பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், திருமணம் முடிக்கப்படாத - கண்ணிப்பெண்ணான அவர் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்த வரலாற்றை பைபிளில் சொல்லப்படவில்லையே அது ஏன்? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன? இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே! அது சொல்லப்படவில்லையே! அது ஏன்? இது தான் நியாய சிந்தனையுடைய எல்லோருக்கும் ஏற்படும் கேள்வி.

அப்படிப்பட்ட மிக முக்கியமான - பைபிளில் சொல்லப்படாத இந்த வரலாற்று உன்மையை -நமக்கெல்லாம் ஏற்படும் அந்த நியாயமான கேள்விக்கான விடையை திருக்குர்ஆனின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தான் திருக்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசம். விளக்கத்திற்கு வருவோம்:

அல்லாஹ் கூறுகின்றான் :

வானவர்கள் மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)

அதாவது திருமணம் முடிக்காத கண்ணிப்பெண்ணான மரியாளிடம் இறைவன் புறத்திலிருந்து இந்த சுபச் செய்தி சொல்லப்படுகின்றது. இந்த செய்திகுறித்து அதிர்ச்சியுற்ற பரிசுத்த மரியாள் 'இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகின்றார். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெரிவிக்கின்றது :

(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

இந்த உறையாடல் நடந்தப் பிறகு மரியாள் கர்ப்பம் அடைகின்றார். இறைவனின் வல்லமையை அவரது கருவறை உணர்கிறது. அதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். -அல்குர்ஆன் 19:22

பின்னர் மரியாள் குறிப்பிட்ட காலத்தில் இயேசு அவர்களைப் பெற்றெடுக்கின்றார்.

அதன் பிறகு குழந்தையுடன் தன் சமூகத்து மக்களிடத்தில் வருகின்றார். அதன் பிறகு நடந்தது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.


'ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?' என்று கூறினார்கள்.
'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்' என்று (அக்குழந்தை) கூறியது.
- அல்குர்ஆன் 19:28-33

அவரது சமூகத்துமக்களுக்கு ஏற்பட்ட இயல்பான அந்த சந்தேகத்தை, குழந்தையாக இருந்த இயேசுவைப் பேச வைத்ததன் மூலம் அவர்களுக்கு உன்மையை உணர்த்தினான் இறைவன். ஆதனால் தான் மரியாளையும் அந்தக் குழந்தையையும் அந்த சமூகம் அங்கீகரிக்கின்றது.

குர்ஆன் சொல்லக்கூடிய இந்த சம்பவம் பைபிளில் சொல்லப்படவில்லையானாலும் நியாயமாக சிந்தித்தால் குர்ஆனில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும் - நடந்திருக்க வேண்டும் என்பதை நியாய சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. காரணம், ஒரு கண்ணிப்பெண், அதுவும் திருமணமாகாதவர் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த சமூகம்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்காது? கண்டிப்பாக குர்ஆன் சொல்வது போல் இந்த சம்பவம் நடந்தே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற இக்கட்டான நிலையிலிருந்த மரியாள் தப்பித்திருக்கின்றார். அது எப்படி?

இதற்கு பைபிளில் விடையிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.

பைபிளில் சொல்லப்படாத - மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிவிட்டு இறைவன் சொல்கின்றான்:

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). - அல்குர்ஆன் 19:34
இது போண்ற இயேசுவின் உன்மைநிலை பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான விடை திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது சகோதரர்களே.


இது ஒருபுறமிருக்க இந்த சத்தியமான வரலாற்று உன்மை பைபிளில் சொல்லப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் இதற்கு மிகத் தெளிவாக விளக்கமளித்து உள்ளதையும் ஏற்க மறுக்கும் சில கூலிக்கு மாறடிக்கும் கும்பல் தங்களைச் சார்ந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக மறுப்பு என்றப் பெயரால் சில மடத்தனங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அதற்கான மறுப்பையும் தெளிவான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

கிறிஸ்தவர் எழுதுகிறார்:

// 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். //

நமது பதில்:
ஒரு அதிசயம் நடக்கும் போது அதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்களா அல்லது இவர் சொல்வது போல் பயந்து ஓடிப்போய் ஒளிவார்களா? இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள் சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா? குழந்தை அதிசயம் என்ன! இயேசு மரணித்தவரையே இறைவனின் உதவி கொண்டு உயிர்பித்ததாக பைபிள் சொல்கின்றதே. அப்பொழுது எல்லா மக்களும் ஆ! பேய்! பேய்! என்றல்லவா ஓடி இருக்க வேண்டும். அப்படி ஓடினார்களா? ஒடிப்போய் ஒளிந்து கொண்டார்களா? அல்லது யாரும் இதயம் நின்றநிலையில் இருந்தார்களா? இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார்? சிந்திக்க வேண்டாமா? எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக உளறி வைக்கக்கூடாது நண்பர்களே!

கிறிஸ்தவர்:

//2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். //

நமது பதில்:

என்ன மடத்தனமான கேள்வி இது. பைபிளைபற்றி தெரியாதவர் கேட்பது போல் கேள்வி கேட்டுள்ளார். இயேசு சிறுவயதில் செய்த அற்புதத்தை விட்டுவிடுவோம். அவரது 30 வயதிற்குப் பிறகு இறந்தவனையே உயிரோடு எழுப்பினாரே! அதற்கு மேலும் எத்தனையோ அதிசயங்களை மக்கள் முன் செய்துக் காட்டினாரே. அப்படி நடந்தும் தானே அவரை பைபிளின் படி துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.

'காணிக்கை, பணம், மதிப்பு மரியாதைஎல்லாம் வந்திருக்கவேண்டுமே' என்று கேட்கின்றார். அவர் செய்த அதிசயங்களை நேரடியாக பார்த்தவர்களான இயேசு வோடிருந்த சீடர்களே சரியான முறையில் விசுவாசிக்காமல் இருந்ததாக பைபிளே சொல்லும் பொழுது, இந்த அதிசயத்தை எல்லாம் நேராக பார்த்தவர்களில் ஒருவரான யூதாசே நன்றி இன்றி அவரைக் காட்டிக்கொடுத்ததாக பைபிளே ஒத்துக்கொள்ளும்பொழுது இந்தக் கேள்வி கேட்க எப்படி மனம் வருகின்றது உங்களுக்கு? அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா? உங்கள் நம்பிக்கைக்கு உட்பட்டு மறுப்பெழுதுங்கள். எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி மாட்டிக்கொள்ளாதீர்கள்!

கிறிஸ்தவர்:

//நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. //
நமது பதில்:

அதாவது குழந்தை அற்புதத்தை மறுப்பதற்காக என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என்று புரிகின்றதா சகோதரர்களே! இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா? அவர் வசதியாக வாழவில்லை என்பதற்காக அவர் அதிசயம் செய்யவே இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

ஒரு வாதத்திற்காக மாற்கு 6:1-3 ல் சொல்லப்பட்ட வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும் அதுவும் இவரது கருத்துக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், இந்த மாற்கு வசனத்தின் படி எவர்கள் ஆச்சரியப்பட்டதாக இவர் எடுத்துக்காட்டுகின்றாரோ அவர்கள் தான் அவரை கொலைசெய்ய துடித்தார்கள். காரணம் அவர்கள் இயேசு செய்த எந்த அதிசயத்தையும் இறைவன் புறத்திலிருந்து வந்த அதிசயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. அவரை இறைவன் புறத்திலிருந்து வந்தவராகவும் நம்பத் தயாராக இல்லை. நம்பத் தயாராகாதவர்களிடம் புதுசு பழசு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு எத்தனை அதிசயம் செய்து காட்டினாலும் அவர்கள் நம்பப்போதில்லை. இவ்வளவு அதிசயங்களை செய்தப் பிறகுத்தான் இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றது.

கிறிஸ்தவர்:

//இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை//

நமது பதில்:

பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேங்களை எழுதியது இயேசுவின் சீடர்கள் என்று யார் சொன்னது? சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா? அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா? பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா? மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா? பவுலும் பலுலைச் சார்ந்தவர்களும் இட்டுக்கட்டி எழுதியதே இன்றைய புதிய ஏற்பாடு என்பதை மறந்துவிடாதீர்கள். அவரின் உன்மையான வரலாற்றை மறைத்து விட்டு அவர் மீது இட்டுக்கட்டிய பொய்யான பல தகவல்களைக் கொண்டது தான் இன்றைய பைபிள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விளக்கக்கட்டுரை விரைவில் நமது தளத்தில்...

அடுத்து சகோதரர் தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்த்து இஸ்லாம் கல்வியில் வெளியிட்ட கட்டுரையில் கிறிஸ்தவர்களில் ஒரு சிலர் செல்லிவரும் பொய்களில் ஒன்றான பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கபட்டது என்பதற்கு பல ஆதரங்களை முன்வைத்து மறுப்பெழுதியிருந்தார். (இன்ஷா அல்லாஹ் குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான மிகத் தெளிவான விளக்கம் விரைவில் நமது தளத்திலும் வர இருக்கின்றது) அவர் கொடுத்திருந்த எத்தனையோ ஆதரங்களில் இந்த 'குழந்தை அதிசயம்' என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதே என்று மறுப்பெழுதி இருந்தனர். அது எந்த அளவுக்கு மடத்தனமானது என்பதை சற்று அலசுவோம்:

குர்ஆனில் சொல்லப்பட்ட குழந்தை அற்புதம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பைபிளின் தள்ளுபடி ஆகாமங்களில் ஒன்றான (Gospel of Thomas) 'தோமாவின் சுவிஷேஷத்தில்' உள்ளதாகவும் அதிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்து எழுதினார்களே யொழிய இறைவனின் புறத்திலிருந்து ஒன்றும் புதிதாகச் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்கிறார். அதை பின்வருமாறு எழுதுகின்றார்:

//இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.//
இது எவ்வளவு மடத்தனமான வாதம் என்பதை சாதாரணமாகவே நமக்கு விளங்கும். இயேசுவின் குழந்தை அதிசயம் இடம்பெறாத, கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு பின்புதான் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் போது தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகளில் இன்றுவரையில் மொழிபெயர்க்கப்படாத தள்ளுபடி ஆகமங்களை பார்த்து காப்பிஅடிக்கபட்டது என்ற வாதம் எப்படி சரியாகும்? இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும்? அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள்? ஒருவேளை நபி (ஸல்) காலத்தில் இன்று நீங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்கள் தான் கிறிஸ்தவர்களின் வேதமாக இருந்தது என்று சொல்லவருகின்றீர்களா?

அடுத்து, இன்னொன்றையும் நாம் புரிந்துக்கொண்டாக வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ குருமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள். அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டும் படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும் அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாதவர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டும் துன்புறுத்தப்பட்டனர் என்று கிறிஸ்தவ வரலாறே நமக்கு சான்று பகர்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த அவதூறு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 'ப்ரொட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்களை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மட்டும் எப்படி காப்பி அடித்திருப்பார்கள்? யோசிக்க வேண்டாமா?

எனவே உங்களது வரட்டு வாதங்கள் எல்லாம் உங்களைப் போன்ற குருட்டு நம்பிக்கை உடைய குறுமதியாளர்களைத் திருப்தி படுத்தவே உதவும் என்று சொல்லி முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

4 comments:

Unknown said...

மிக அருமையான பதில்கள். தெளிவான விளக்கங்கள்.

அவதூறு பேசுவதற்கென்றே ப்ளாக் திறந்திருப்பவர்களுக்கு இது புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கும்.

அவர்கள் புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரி நடிக்க வேண்டியது வரும். இல்லையென்றால் சம்பளம் கொடுப்பவன் நிறுத்தி விடுவான்.

Anonymous said...

//அவதூறு பேசுவதற்கென்றே ப்ளாக் திறந்திருப்பவர்களுக்கு இது புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கும்.

அவர்கள் புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரி நடிக்க வேண்டியது வரும். இல்லையென்றால் சம்பளம் கொடுப்பவன் நிறுத்தி விடுவான்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் சுல்தான் அவர்களே! நீங்கள் சொல்வதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

அவர்கள் உன்மையை புரிந்துக்கொண்டால் வெளிநாட்டுப்பணம் வாபஸ் ஆகிவிடாதா? அப்புரம் நம் சகோதரர்களைப் போண்று உழைத்து உண்ண வேண்டுமே! எவனால உழைக்க முடியும்?

அவர்களைக் கேட்டால்: '' ச்.. சே.. நாங்களாவது உன்மையைப் புரிஞ்சிக்கிறதாவது. நடக்கவே நடக்காது''

Felix said...

மத்தேயு 1:24 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். ஆனால் மரியாள் தன மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு எனப் பெயரிட்டான்.

ஏகத்துவம் said...

சகோதரர் felixonline கவனத்திற்கு,

இந்த கருத்தை பதித்ததன் மூலம் நீங்கள் சொல்லவரும் விளக்கம் என்ன என்பதை தெளிவாக சொன்னால் புரிந்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று கருதுகின்றேன். உங்களின் உடன் பதிலை எதிர்பார்க்கின்றேன்.