நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.
கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.
குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.
கடவுள் என்பவர்,
- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.
- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.
- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.
- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,
- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,
- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,
- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.
- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.
இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!
எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.
திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -
Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.
மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?
Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.
இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?
Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.
ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?
Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.
ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?
Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.
சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?
Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.
இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?
Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.
நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)
லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).
தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?
Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் "
மகன்" தன்மை உடையவராகவும் "
தெய்வீகத்" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?
Q 9. "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.
ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,
"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்;
நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?
Q 10. இயேசு கிறிஸ்து "
தேவகுமாரர்" என்றும்
"மேசியா" என்றும்
"இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை
"தேவகுமாரர்கள்" என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி
"தெய்வ மகன்" அல்லது
"தேவகுமாரன்" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)
அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;
கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள்
தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)
ஹிப்ரு மொழியில்
"மேசியா" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு.
"இரட்சகன்" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.
"கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு
ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்" (II இராஜாக்கள் 13:5)
ஆகையால்
"தேவகுமாரர்" (Son of God) அல்லது "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் "தேவன்" அல்லது அவர் மட்டும் தான் "தேவனின் உண்மையான குமாரர்" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?
Q 11. நானும் பிதாவும்
'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில்
'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில்
"ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற
"ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?
Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?
Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .
இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட
"அவருடைய தேவன் நம்முடைய தேவன்" மற்றும்
"அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?
மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?
Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?
Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?
அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.
இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?
மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?
Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -
பிதாவும் (Father) கடவுள்
தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்
பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்
ஆனால்,
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.
எளிமையான கணக்குப்படி,
G என்பது தேவனையும் (God)
F என்பது பிதாவையும் (Father)
S என்பது தேவகுமாரனையும் (Son)
H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.
இதன் படி,
F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,
அதாவது
பிதா என்பவர் தேவன்! (F=G)
தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)
பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)
என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.
ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F
≠ S
≠ H
அதாவது
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F
≠ S)
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S
≠ H)
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H
≠ F)
இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?
Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?
Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து "நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே" என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?
Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?
மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!
Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)
தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?
Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)
Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.
சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல..
Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல..
Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல...
Click here
.