அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label நோவா. Show all posts
Showing posts with label நோவா. Show all posts

Thursday, March 05, 2009

நோவா காலத்து வெள்ளப்பிரளயம் : முரண்படும் பைபிள்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக சமீபத்தில் கிறிஸ்தவர்கள் நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுதி தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டனர். அவர்கள் சொல்லவருவது போல் உன்மையில் குர்ஆன் முரண்படுகின்றதா? அல்லது அவர்களது அறியாமையின் வெளிப்பாடா? என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம். அதைப் பின்வரும் தொடுப்புகளின் மூலம் அறியலாம்:


நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி குர்ஆனில் முரண்பாடு என்று எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் எழுதும் உமர் என்ற கிறிஸ்தவர், ஏன் பைபிளில் அதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை கண்டுக்கொள்ள தவறினார்? என்பதற்கு காரணம் என்னவோ இறைவனுக்கே வெளிச்சம்.

ஏனென்றால் அவர் அரைகுறை அறிவுடன் - முரண்பாடே இல்லாமல் குர்ஆனின் மீது குற்றம் சுமத்த முற்படும் போது, அதை விட இமாலயத்தவறுகள் பைபிளில் இருப்பதை ஏன் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றார்? பைபிளில் இதே நோவாவின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகள் இவரது கண்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?



முரண்பாடு - 1



நோவா பேழைக்குள் எப்பொழுது பிரவேசித்தார்?

ஜலப்பிரளயத்திற்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. (ஆதியாகமம் 7:7-10)

இந்த வசனங்கிளில் நோவா பேழைக்குள் பிரவேசித்ததன் பின்னர் ஏழு நாள் கழித்தே ஜலப்பிரலயம் வந்தது என்று செல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக அடுத்த வசனங்களிலேயே ஜலப்பிரளயம் தொடங்கிய அன்றுத்தான் பேழைக்குள் சென்றதாக சொல்லப்படுகின்றது:

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். (ஆதியாகமம் 7:11-13)

இதில் எது சரி? நோவாவும் மற்றவர்களும், உயிரினங்களும் கப்பலுக்குள் சென்றப்பின் ஏழு நாள் கழித்து ஜலப்பிரளயம் ஏற்பட்டதா? அல்லது ஜலப்பிரளயம் தொடங்கிய அன்று தான் பேழைக்குள் பிரவேசித்தார்களா? ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட ஒரே ஆகாமத்தில் எப்படி இந்த முரண்பாடு வந்தது?

முரண்பாடு - 2



எத்தனை ஜோடி உயிரினங்கள் நோவாவுடன் பேழைக்குள் ஏற்றுமாறு கர்த்தரால் சொல்லப்பட்டது?



சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். (ஆதியாகமம் 6:19)

இந்த வசனத்தில் எல்லா உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வோரு ஜோடியாக கப்பலில் ஏற்றிக்கொள்ளுமாறு சொல்லப்படுகின்றது. ஆனால், அதற்கு மாற்றமாக ஆதியாகமம் 7:2 ம் வசனத்தில் ஏழு ஏழு ஜோடிகளாக ஏற்றிக்கொள்ளும் என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது:

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். - (ஆதியாகமம் 7:1-3)

இதில் எது சரி? கப்பலில் ஏற்றச்சொன்னது ஒவ்வொரு ஜோடிகளையா? அல்லது ஏழு ஏழு ஜோடிகளையா? மேலே உள்ள வசனத்தில் அனைத்து உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை மட்டும் ஏற்றச்சொன்னதாக சொல்லபட்பட்டிருக்க அதற்கு மாற்றமாக ஏழு ஏழு ஜோடியை பேழையில் ஏற்றுமாறு கூறியதாக சொல்லப்படுவது எப்படி? இதில் எது சரி?


முரண்பாடு - 3



நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது (கப்பலில் ஏறியவர்களைத் தவிர) பூமியில்இருந்த அனைத்து உயிரினங்களும் அழிந்ததா? இல்லையா?


அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின் நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. – ஆதியாகமம் 7:21-23

இந்த வனங்களின் மூலம் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது கப்பலில் ஏறியவர்களைத் தவிர மற்ற பூமியில் இருந்த அத்தனை உயிரினங்களும் அழிந்துப் போய்விட்டது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக பூமியில் வாழ்ந்த 'இராட்சதர்கள்' என்பவர்கள் நோவாவின் காலத்திற்குப் பிறகும் பல வருடங்கள் கழித்தும் வாந்தார்கள் என்று கூறப்படுகின்றது.

அந்நாட்களில் இராட்சதர் (Nephilium) பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். – ஆதியாகமம் 6:4

இந்த வசனத்தில் நோவாவின் காலத்தில் வெள்ளப் பிரளயம் ஏற்படுவதற்கும் முன்னர் இராட்சதர்கள் (மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் Nephilium என்று மொழிப்பெயர்கப்பட்டுள்ளது) என்பவர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் ஏனேக்கின் வம்சாவழியினர் என்று பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் நோவாவுடன் பேழையில் ஏற்றப்படவில்லை. ஏனெனில் நோவாவுடன் அவரது குடும்பத்தார் மட்டுமே ஏற்றப்பட்டதாக பைபிளில் சொல்லப்படுகின்றது (பார்க்க ஆதியாகமம் 6:18, 7:7,13,14) ஆனால் இந்த Nephilium என்னும் பலவான்கள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்திற்குப் பின்னரும் வாழ்ந்தார்கள் என்று பைபிளில்; சொல்லப்படுகின்றது.

கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திதரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான் அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். (எண்ணாகமம் 13:1-2)

தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும் அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள் தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். (எண்ணாகமம் 13:18-20)

அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். - (எண்ணாகமம் 13:18)

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் (Nephilium) கண்டோம் நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம். (எண்ணாகமம் 13:33)

இந்த வசனங்களில் (Nephilium என்னும்) இராட்சதர்களை தாங்கள் பார்த்ததாக இஸ்ரவேல் தலைவர்கள் சொன்னதை இந்த வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், ஆதியாகமம் 7:21-23ம் வசனத்தில், பேழையில் ஏற்றப்பட்டவர்களைத்தவிர வேறு யாரும் உயிருடன் இருக்கவில்லை. பூமியில் வாழ்ந்து அனைத்து உயிரினங்களும் இறந்துவிட்டது என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டதாக மேலே சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக அவர்களுக்குப் பின்னும் அதே இராட்சத பிறவியான Nephilium என்பவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் அழிக்கப்பட்டார்களா? இல்லையா?

எண்ணாகமத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படுவது சரியா? அல்லது ஆதியாகமத்தில் உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது என்று சொல்லப்படுவது சரியா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
.

இறைவன் நாடினால் தொடரும்...
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Tuesday, March 03, 2009

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மிஷினரிகள் குர்ஆனில் ஏதேனும் முரண்பாடு கிடைக்குமா என்று தேடத்தொடங்கியதன் விளைவு, தற்போது நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுத தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாகத்தான் 'குர்ஆனில் முரண்பாடு - நோவாவின் வயது?' என்று அவர்களால் சமீபத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பதிவு எந்த அளவுக்கு பலவீனமான வாதங்களை கொண்டிருந்தது என்பதை எமது பதில் பதிவான 'நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா? என்ற கட்டுரையின் மூலம் விளக்கமளித்திருந்தோம். அதே போன்று அதே நோவாவின் வரலாற்றில் மற்றுமொரு குழப்பம் இருக்கின்றது என்று மேலும் ஒரு பதிவை ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் எந்த அளவுக்கு பலவீனமான வாதத்தைக் கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்:

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் நூஹ் (அலை) அவர்களின காலத்தில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இன்னும்; நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். -அல்குர்ஆன் 25:37

மற்றோர் வசனத்தில்: நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். - அல்குர்ஆன் 26:105

இந்த வசனங்களில் இறைவன் நூஹ் நபியுடைய காலத்தவர்கள் இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று பன்மையாக கூறுகின்றான்.

இதைப்பற்றி உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது:

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இப்படி குறிப்பிட்டு விட்டு கீழ்கானும் வசனத்தைக் கேடிட்டுக்காட்டி அதன் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார்:

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;. அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். -அல்குர்ஆன் 37:77

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

இது தான் இவரது கேள்வி. இந்தக் கேள்வியின் மூலம் இவரது அறியாமை வெளிக்காட்டப்படுவதுடன் - குர்ஆனை எப்படியேனும் குற்றம் சுமத்தியாகவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது என்பதும் தெளிவாக விளங்கும். எனினும் இவரது இந்தக் கேள்விக்கு பதில் மிக எளிதானது. ஏனெனில் 'தூதர்கள்' என்றால் யார் யார்? தூதர்கள் என்று பன்மையாக சொல்லப்படுவது ஏன்? என்று விளங்கிக் கொண்டால் பதில் கிடைத்துவிடும்.

அதற்கு முன்பாக இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?' என்று கேள்விக்கான பதில், அந்த தூதர்கள் யாரும் வெள்ளத்தில் முழ்கடிக்கப்படவில்லை. காரணம் நூஹ் (அலை) அவர்களின சமுதாயத்திற்கு நூஹ் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் அனுப்பப்படவில்லை. எனவே இந்த கேள்விக்கு வேலையே இல்லை.

அப்படியானால், குர்ஆன் ஏன் பன்மையில் தூதர்கள் என்று குறிப்பிடுகிறது? அவ்வாறு குறிப்பிடப்படும் அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? அதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

குர்ஆனின் ஒரு வசனத்திற்கு அதன் பிற வசனங்கள் விளக்கமாக இருக்கும். அல்லது நபி மொழிகள் அதற்கு விளக்கமாக அமையும். ஆனால் இந்த கிறிஸ்தவரோ இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் அவ்வசனத்தில் கூறப்பட்ட 'தூதர்கள்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு 'பார்த்தீர்களா முரண்பாடு உள்ளது' என்று பிதற்றுவது குர்ஆனில் குறை காணவேண்டும் என்ற குறுமதியின் வெளிப்பாடு மட்டுமே!

இவர் குறிப்பிடும் அந்த வசனத்தில் 'நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த தூதர்கள் என்பவர்கள் யார்? என்பதை மற்ற குர்ஆன் வசனங்களை கவனித்தாலே உன்மை விளங்கும்.

இவ்வாறு பன்மையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னும் சில வசனங்கள்:

நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்। அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது; ''நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' 26:105, 106


ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது 26:123, 124

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:140,141

லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்; ''நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று கூறியபோது, 26:160,161

தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள். ஷுஐப் அவர்களிடம்; ''நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?'' எனக் கூறியபோது 26:176,177

நூஹ் உடைய சமூகத்தவர்கள் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று கூறிய போது அவர்களுக்கிடையே வாழ்ந்திருந்த தூதரைப் பற்றிக் கூறும் போது நூஹ் (அலை) பற்றி மட்டுமே குறிப்பிடுகிறான்.

ஸமூது சமுதயாத்தினர் தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று குறிப்பிட்டு விட்டு அவர்களுக்கிடையே செய்தியைச் சொன்னவரைப் பற்றிக் கூறுகையில் ஸாலிஹ் (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடுகிறான்.

லூத் நபியின் சமூகத்தைப் பற்றியும் மத்யன் வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்தி என்ன? ஒவ்வவொரு சமூகத்தவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரைப் பொய்ப்பிப்பது என்பது மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் பொய்ப்பிப்பதற்கு சமம் என்பதாகும்। இக்கருத்தைத் தான் பிரபல திருமறை விரிவுரையாளரான இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

(Allah destroyed them completely, and similar (awaits) the disbelievers) (47:10). And when the people of Nuh denied him, Allah destroyed them likewise, for whoever denies one Messenger denies all the Messengers, because there is no difference between one Messenger and another. If it had so happened that Allah had sent all His Messengers to them, they would have denied them all. (Tafsir Ibn Kathir – English version – Darusssalam)

இறைதூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கமும் அவர்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒருவரை நிராகரித்தல் மற்ற அனைவரையும் நிராகரிப்பதற்குச் சமமே!

உதாரணமாக, முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு, ஈஸா (அலை) மூஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ள வில்லையானால், இறைவனால் அனுப்பப்பட்ட மொத்த தூதர்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் பொருளாக அமையும். எனவே அவர் முஸ்லீமாக - இறைநம்பிக்கைக் கொண்டவராக முடியாது. அதே போல் முஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டு முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தால் அவர்களும் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீமாக முடியாது. அதே போல் இறைதூதர்களான வானவர்களை (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) ஏற்க மறுத்து நிராகரிப்பவர்களும் இறைநம்பிக்கையுடையவர்களாக ஆக முடியாது. காரணம் இறைவனால் அனுப்பபட்ட தூதர்கள் அனைவரும் ஒரே செய்தியைத்தான் கொண்டுவந்தார்கள். அவர்கள் போதித்ததெல்லாம் ஒரே கொள்கையைத்தான் என்று குர்ஆன் கூறுகின்றது:

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ழைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். 16:36

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. 21:25

இவர்களில் ஒருவரை ஏற்றுக்கொண்டு ஒருவரை நிராகரித்தாலும் அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக முடியாது. அதைத் தான் பின்வரும் வசனங்களின் மூலம் இறைவன் தெளிவுபடுத்தப்படுகின்றது:

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ''நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். – அல்குர்ஆன் 4:150,१५१

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும்விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும் நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின்கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்குமுன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது இன்னும் அது வழிகாட்டியாகவும்,நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (2:97)

எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும்,ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறுநிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:98)

பொதுவாக இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இறை தூதர்களான வானவர்கள் (குர்ஆன் 7:37, 11:69, 11:77,11:81, 81:19) உட்பட அனைத்து இறைத் தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் - 2:285

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக -2:136

இதில் இறைவனின் செய்தியைக் கொண்டுவரும் ஒருவரை நிராகரித்தால் கூட அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்டவர்களாக - முஸ்லீம்களாக முடியாது என்பது தெளிவாக விளங்கும். அவர்களுக்கு அனுப்பபட்ட தூதர்களை ஏற்றுக்கொண்டு மற்ற தூதர்கள் பற்றி சொல்லும் போது அதை ஏற்க முடியாது என்று சொன்னாலும், எனக்குப் பின் இந்த தூதர் வருவார் என்று நம்பமறுத்தாலும், இறைதூதர்களான வானவர்களையும் ஏற்க முடியாது என்று சொன்னாலும் அதுவும் இறைவனின் தூதர்களை நிராகரித்தவர் என்று தான் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் ஒருவர் ஒரு தூதரை நிராகரிக்கின்றார் என்று சொன்னால் அவர் மற்றவர்களையும் நிராகரிக்கின்றார். அந்த மற்றவர்களில் வானவர்களும் அடங்குவர் நபிமார்களான மனிதர்களும் அடங்குவர்.

அது போல் தான் நூஹ் (அலை) அவாகளின் சமுதாயத்தினார் நூஹ் அவர்களை நிராகரித்ததுடன் மற்ற இறைத்தூதர்களான வானவர்கள் உட்பட, மற்ற தூதர்களையும் (அவர்களுக்கு பின்னர் வர இருப்பவர்களையும்) அவர்களும் போலிகள் தான் அவர்களை நம்பமாட்டோம் என்று நிராகரிக்கின்றனர். இதை தான் இறைவன் 'நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது' என்று கூறுகின்றான்। எனவே இவர் கேட்பது போன்று மற்ற தூதர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்கே இங்கு வேலை இல்லை என்பது தெளிவாக விளங்கும்। ஏனெனில் நூஹ் அவர்கள் சமுதாயத்திற்கு அவர்கள் மட்டும் தான் அனுப்பப்பட்டார்கள்।

அடுத்து இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. என்று குறிப்பிடுகின்றார். இது முற்றிலும் தவறான – அறைவேக்காட்டுத்தனமாக வாதம். இவர் சொல்வது போன்று தான் குர்ஆன் குறிப்பிட்டுக் கூறுகின்றதா என்றால் கிடையாது. மாறாக அவரது குடும்பத்தாரையும், அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் காப்பாற்றினோம் என்று தான் குறிப்பிடுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லை. (அல்குர்ஆன் - 11:40) (மேலும் பார்க்க 7:64, 10:73)

எனவே இவர் எந்த அளவுக்கு அறைகுறை ஞானத்துடன் கேள்விகளைக் கேட்கின்றார் என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

உமர் என்ற கிறிஸ்தவர் இப்படி குற்றநோக்குடன் அறியாமையில் ஏன் பதிவுகள் போடுகின்றார் என்றால், பெரும்பாலும் அவர் சுயமாக எதையும் எழுதுவது கிடையாது। ஆன்சரிங் இஸ்லாம் என்றத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழ் மக்களைக் குழப்புவது தான் இவரது தலையாய பணி. இதற்காகவே இவருக்கு வெளிநாட்டிலிருந்து கூலிகள் கிடைக்கின்றது போலும். இவர் மொழிப்பெயர்த்து வெளியிடும் கட்டுரைகள் சரியா அல்லது தவறா? நாம் போடுவது முறையான பதில் தானா? என்றெல்லாம் இவர் பார்ப்பது கிடையாது. இஸ்லாத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதா? குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லப்படுகின்றதா? அது போதும். அது சரியோ அல்லது தவறோ அதை ஒரு பதிவாகப் போட்டுவிட வேண்டியது தான் என்று மனம் போனப் போக்கில் மொழிப்பெயர்த்து வெளியிட்டுவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார். பாவம் அவர் என்ன செய்வார். வாங்கும் கூலிக்கு வேலை செய்துதானே ஆக வேண்டும்.

நோவாவின் வரலாற்றில் முரண்படும் பைபிள் - அடுத்த பதிவில் இறைவன் நாடினால்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Thursday, February 26, 2009

நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
.
.
பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில் ஆங்கிலத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருந்தார். அதாவது குர்ஆன் நோவாவின் வயதை சொல்வதில் முரண்படுகின்றதாம்.

இவர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்த - பலவீனமான விமர்சனங்களை குர்ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒன்றே சரியான சான்று. அவர்கள் கண்டுபிடித்துள்ள அதிபாயங்கரமான - இடியாப்ப சிக்கல் நிறைந்த (?) முரண்பாட்டை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

Quote:

பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.

ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.

சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது

வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள 'அவர்கள் மத்தியில்' என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள 'அவருடைய சமூகத்தாரிடம்' என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.

என்ன அபாரமான கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எப்படி அலசி ஆராய்ந்து முரண்பாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்த்தீர்களா? குர்ஆனில் 29:14ம் வசனத்தில் முரண்பாடாம். எங்கே முரண்பாடு வருகின்றது? இந்த வசனத்திற்கு எதிரான - முரண்பட்ட குர்ஆன் வசனம் எது? ஒன்றுமே கிடையாது. 'காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சல்' என்பது போல, குர்ஆனில் எங்கேயாவது முரண்பாடு கிடைக்குமா? என்று தேடியவருக்கு இந்த வசனம் முரண்பாடாக தெரிந்துவிட்டது போலும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;. ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகின்றான். ஒன்று நூஹ் (அலை) அவர்களின் மொத்த வயது. மற்றொன்று அவர்கள் காலத்தில் நடந்த பெரு வெள்ளம்.

இதில் என்ன முரண்பாட்டை இவர்கள் கண்டுவிட்டனர்? அல்லாஹ் தனது திருமறையில் 'நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் (அதாவது 950 ஆண்டுகள்) தங்கியிருந்தார்' என்கிறான். 'அவருடைய சமூகத்தார்' என்றால் யார்? நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்களையும் குறிக்கும், நிராகரித்தவர்களையும் குறிக்கும், பெருவெள்ளத்திற்கு பின் மீதமிருந்தவர்களையும் குறிக்கும். மொத்தத்தில் அச்சமூகத்தார் என்பது நோவா உயிருடன் இருக்கும் பொழுது அவருடன் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் என்பது பாமரனுக்கும் விளங்கும்.

இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?

இவர்களது அபார கண்டுபிடிப்பு (?) என்ன வென்றால், குர்ஆனின் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள 950 வருடம் என்பது வெள்ளப்பிரளயம் வரையிலும் தான் குறிக்கும், அவர்களின் முழு வயதையும் குறிக்காது. எனவே இது முரண்பாடான வசனம் என்கிறார். இது தான் இவர் சொல்லவரும் கருத்து. அதை மற்றுமொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Quote:

இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்

ஒரு வாதத்திற்காக இவர் விளங்கி இருப்பது போன்றே வைத்துக்கொள்வோம். இவர்களின் அபார கண்டுபிடிப்பின் படி இந்த வசனம் வேறு எந்த குர்ஆன் வசனத்துடன் முரண்படுகின்றது? அதையல்லவா தெரிவித்திருக்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன? ஒரு வசனம் மற்றோர் வசனத்திற்கு முரண்பட வேண்டும்.

ஒரு குர்ஆன் வசனத்தில் நூஹ் (அலை) (நோவா) அவர்களின் மொத்த வயதே 950 என்று சொல்லிவிட்டு மற்றோர் குர்ஆன் வசனத்தில் பெரு வெள்ளம் நிகழ்ந்த பொழுது அவர்களது வயது 950 என்று சொல்லியிருந்தால் முரண்பாடு எனலாம். மாறாக, எந்த ஒரு வசனத்தையும் காட்டாமல் குர்ஆனின் இந்த 29:14ம் வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு, முஹம்மது (ஸல்) அவர்கள் ஞாபக மறதியால் சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? சற்று சிந்திக்க வேண்டாமா? முரண்பாடு என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

உமர் அவர்களே! உன்மையில் முரண்பாடு என்றால் என்னத்தெரியுமா? இதோ உங்கள் பைபிளை வைத்தே நீங்கள் குறிப்பிட்டுள்ள நோவாவின் வயதை வைத்தே விளக்குகின்றேன் படியுங்கள்:

பைபிளில் கர்த்தர் சொல்லுகின்றார்:

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள் மொத்தமே 120 வருடம் தான் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால் நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 120 தான் என்றால், பின்னர் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? இல்லை எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?

அடுத்து அதே ஆதியாகமத்தில் அதற்கடுத்த வசனத்தில் உள்ள முரண்பாடுகளைப் பாருங்கள் உமர் அவர்களே:

பைபிள் கூறுகின்றது : தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:6

கர்த்தர் தான் மனிதனையே படைத்தார். அவன் என்னென்ன செய்வான் உங்களைப் போன்றவர்களெல்லாம் வசனங்களைத் திரித்தும் மாற்றியும் எப்படி எல்லாம் அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவார்கள், முரண்பாடு இல்லாததை எப்படி எல்லாம் முரண்பாடு என்று சொல்லுவார்கள் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கடவுள் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மணஸ்தாபப்படுவாரா? கடவுள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா? ஆனால் அப்படி பலவீனரைப்போன்று தெரியாமல் படைத்துவிட்டோமே என்று மனஸ்தாபப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இந்த வசனத்திற்கு நேர் முரணாக பைபிளில் உள்ள மற்ற வசனங்களைப் பாருங்கள்:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

கர்த்தர் மனஸ்தாபப்படுவாரா? மாட்டாரா? ஆனால் மேலே ஆதியாகமம் 6:6ம் வசனத்தில் அவர் மனிதனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கே உள்ள வசனங்களில் மனஸ்தாபப் பட அவர் என்ன பலவீனங்கள் நிறைந்த மனிதனா என்கிறது? எதுய்யா சரி?

இவைதான் உங்கள் பைபிளின் லட்சனம். (இது வெறும் Sample முரண்பாடுகள் தான். விரைவில் தொடர்ந்து வரும்) இப்படி முரண்பட்ட புத்தகத்தைத் தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த பைபிளை வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு என்கிறீர்கள். முரண்பாடு என்றால் என்னவென்று முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். பின்னர் முரண்பாட்டைப் பற்றி எழுதுங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள்.



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.