அவதூறுகளும்... விளக்கங்களும்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
.
'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
.
அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.
.
இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)
.
அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
.
சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.
.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
.
'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
.
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
.
இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
.
ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
.
அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
.
ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.
.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
.
இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
.
ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)
.
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
.
'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)
.
ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
.
இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.
.
வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.
.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.
.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
.
முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
.
இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
.
மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.
.
நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
.
ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
.
ஆறாவது காரணம் :
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.
.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
.
'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)
.
'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)
.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)
.
உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)
.
உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)
.
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
.
இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.
.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.
.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.
.
காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.
.
'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)
.
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
.
இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.
.
(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.