அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label சாஸ்திரிகள். Show all posts
Showing posts with label சாஸ்திரிகள். Show all posts

Friday, August 07, 2009

இயேசுவின் பிறப்பும் - நட்சத்திரக் கணிப்பும்!


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்



புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3

முரண்பாடு 3:

இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட வரலாற்றை பைபிளில் குறிப்பிடும் பொழுது - அவருக்கு புகழ் சேர்க்கின்றோம் என்றப் பெயரில் பல பொய்யான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சுவிசேஷங்களில் எழுதிவைத்துள்ளனர். குறிப்பாக இந்துமதத்தில் புறையோடிப்போயிருக்கும் போலி கலாச்சாரமான சோதிடம் மற்றும் நாள் நட்சத்திரக் கலாச்சாரத்தையும் மிஞ்சும் வகையில் கதை கட்டியுள்ளது தான் இங்கே கவனிக்கப்படவேண்டிய 'ஹைலைட்' சமாச்சாரம். குறிப்பாக பழைய ஏற்பாட்டு வசனங்களில் கூறப்பட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தை - தனது சுயக்கருத்தை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியுள்ளார் சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து (Magi) சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். - மத்தேயு 2:1-2

அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள் நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:7-11

இந்த வசனங்களின் மூலம், இயேசு என்னும் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை 'Magi' என்னும் சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும், அந்த நட்சத்திரம் எங்கே சென்று நின்றதோ அதை வைத்து அவர்கள் இயேசுவின் வீட்டை கண்டடைந்ததாகவும் மத்தேயு குறிப்பிடுகின்றார். இந்த கதையின் காரணமாகவே 'கிறிஸ்துமஸ்' கொண்டாட்டங்களில் நட்சத்திர அடையாளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மத்தேயு குறிப்பிடுவது போன்று, இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருக்குமா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது - நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஏனெனில், இந்த சம்பவத்தைப் பற்றி மத்தேயு குறிப்பிடும் போது 'கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டதாகவும், 'கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' என்று கூறியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இது உன்மையாக இருந்தால், இந்த சாஸ்திரிகள் நட்சத்திரம் தோன்றிய அடையாளத்தை வைத்து இயேசு பிறந்திருக்கின்றார் என்பதை எப்படி கண்டுபிடித்தனர்? குறிப்பாக யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரின் அடையாளமான நட்சத்திரம் இது தான் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? இதற்கு ஏதாவது பழைய ஏற்பாட்டு வசனங்களில் ஆதாரம் இருக்கின்றதா? அல்லது இயேசுவின் பிறப்பின் போது இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்ற முன்னறிவிப்பு ஏதாவது பழைய ஏற்பாட்டில் இருக்கின்றதா? என்றால் ஒரு இடத்திலும் கிடையாது. பழைய ஏற்பாட்டில், இயேசுவின் பிறப்பின் போது, இப்படிப்பட்ட ஒரு அடையாளம் தோன்றும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. அப்படி இருக்க சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் உதயமாவதின் மூலம் இயேசு பிறப்பார் என்பது எப்படித் தெரிந்தது? இதை முதலாவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, இப்படி எந்த வகையிலும் இதற்கு ஆதாரமான வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இல்லாதது மட்டுமல்லாமல், இதற்கு எதிரான கருத்தே அதிகமதிகம் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக நட்சத்திரத்தை வைத்து ஒருவன் எதையேனும் கணித்தானேயானால் அவன் கர்த்தரால் சபிக்கப்பட்டவன் என்றும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கர்த்தருக்கு அருவருப்பானது என்றும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால், மத்தேயு குறிப்பிடும் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் கர்த்தரால் முற்றிலும் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளின் பிரதான வேலையோ, ஜோதிடம் சொல்வது, நட்சத்திரத்தின் மூலம் நல்லது கெட்டதைக் கணிப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது போன்ற கர்த்தரால் தடை செய்யப்ப்டட செயல்களைச் செய்பவர்கள் என்று பைபிள் அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.

தமிழ் பைபிளில் 'சாஸ்திரிகள்' என்று குறிப்பிடப்படும் சொல்லிற்கு கிரேக்க பைபிளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை μαγοι (magos) என்பதாகும். இதற்கு மந்திரவாதிகள், சூனியம் செய்பவர்கள், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து ஜோதிடம் கூறுபவர்கள் என்று பொருள்படும். இப்படிப்பட்டர்களின் செயல்கள் எந்த அளவுக்குத் கர்த்தரால் தடுக்கப்பட்டது என்பதை பின்வரும் பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றது:

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும் அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை அது குளிர்காயத்தக்க தழலுமல்ல எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. - ஏசாயா 47:13-14

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். - எரேமியா 10:2

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். - உபாகமம் 18:10-13

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக - லேவியராகமம் 19:26

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக நட்சத்திரங்களின் மூலம் கணிப்பது மிக மிகத் தவறு என்பதுடன், அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - என்றும் அது கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக மத்தேயுவோ, நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் சாஸ்திரிகள் - ஞானிகள் என்றும், அவர்கள் இயேசுவின் பிறப்பை நட்சத்திரத்தின் மூலம் அறிந்து, அதை வைத்து பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து இயேசுவையும் அவரது தாயாரையும் பணிந்துக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

அது மட்டுமல்ல, இந்த சம்பவத்தின் மூலம் மற்றொரு பாரதூரமான கருத்தையும் மத்தேயு பதிவு செய்கின்றார். அதாவது, 'Magi' என்னும் சாஸ்திரிகளின் இந்த தவறான செயலை கர்த்தர் அங்கீகரித்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார். எப்படியெனில், இயேசு பிறந்தபோது மரியாளின் புருசனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் கணவில் தோன்றி ஏரோது ராஜாவிடமிருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்றும் முகமாக, எகிப்துக்கு ஓடிப்போய்விடும்படி எச்சரித்தது போன்று, இந்த 'Magi' என்னும் சாஸ்திரிகளையும் கர்த்தர் எச்சரித்ததாக எழுதுகின்றார்:

பின்பு, அவர்கள் (சாஸ்திரிகள்) ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். - மத்தேயு 2:12

அதாவது இந்த சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்து இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொண்டதன் பின் கர்த்தர் அவர்களுக்கு சொப்பனத்தில் தோன்றி, நீங்கள் கண்டவைகளை குறித்து ஏரோது ராஜவிடம் தெரிவித்து விடாத வண்ணம் வேறு வழியில் சென்று விடுமாறு கூறியதாக எழுதுகின்றார். இதன் மூலம் அவர்களின் செயலுக்கு கர்த்தரின் அங்கீகாரம் கிடைத்தது என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கே ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இது உன்மையா? இப்படி கர்த்தர் அவர்களிடம் சொப்பனத்தில் தோன்றி பேசியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக நடந்திருக்காது.

ஏனெனில் நாம் முன்பு ஏடுத்துக்காட்டிய பைபிள் வசனங்களிலோ இப்படி நட்சத்திரங்களின் மூலம் கணிப்பவர்கள் அஞ்ஞானிகள் - அவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவர்கள் செயல்கள் கர்த்தரின் கட்டளைக்கு எதிரானது - கர்த்தர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் என்பதை தெளிவாக கூறியிருக்க, பின்னர் எப்படி இந்த சாஸ்திரிகளிடம் கர்த்தர் கணவின் மூலம் பேசி, அவர்களை எச்சரித்திருப்பார்? இது இவர்களின் செயல்களை நியாயப்படுத்தியது போன்று ஆகிவிடாதா?

இயேசுவின் பிறப்பின் போது இது போன்ற ஒரு நட்சத்திரம் தோன்றும் - அதன் மூலம் இயேசுவின் பிறப்பை அறிந்துக்கொள்ளலாம் என்று எந்த ஒரு வசனமும் பைபிளில் முன்னறிவிக்கப்படாததுடன், நட்சத்திரங்களைப் பார்த்து கணிப்பவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களின் செயல்களை நீங்களும் கற்றுக்கொள்ளாதீர்கள் என்றும் கர்த்தரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்க, எப்படி இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும்? அதுவும் சத்தியத்தை மக்களுக்கு போதிக்க வந்த இயேசுவின் வாழ்வில் நடைபெற்றிருக்குமா? இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இயேசுவைப் பற்றிய உன்மையான வரலாற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறக்கூடியது ஒரே ஒரு இறைவேதம் திருக்குர்ஆன் மட்டுமே என்ற உன்மையை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு சத்தியத்தை விளங்கும் பாக்கியத்தை தந்தருள்வாராக!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்....


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click heree

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.