அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Sunday, June 08, 2008

ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???

உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது போதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும் கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.

இது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும், தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும், மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டுவைக்கக்கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காரணம் பைபிளின் வசனங்கள் சமாதானத்தையே போதிக்கின்றது என்ற ஒரு மாயை இந்த கிறிஸ்தவமிஷினரிகளால் பாமரமக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டதன் விளைவு, இந்த நம்பிக்கை இந்த மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. நாம் மேலே சொன்ன வசனங்கள் பைபிளில் உன்மையிலேயே இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னால் சமாதானத்தையே பைபிள் போதிக்கின்றது என்று அவர்கள் சொல்லக்கூடிய வசனங்களின் நிலையை பார்த்துவிடுவோம்.

பைபிள் சமாதானத்தையே போதிக்கின்றது என்பதற்கு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் காட்டக்கூடிய முக்கியமான ஆதாரம் மத்தேயு 5:39 ல் வரக்கூடிய

'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு' என்ற வசனமே!

அதாவது ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால் அவனை எதிர்க்காமல் - எந்த மறுபேச்சும் பேசாமல் உடனேயே உனது இடது கன்னத்தைக் காட்டு என்று இயேசு போதித்தார் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த வசனம் சொல்லவருகின்ற கருத்து கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்கு சாத்தியபடுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதில் சொல்லப்படக்கூடிய கருத்து இந்த நடைமுறை உலகிற்;கு சாத்தியப்படுமா? இயேசு சொன்னதாகச் கூறப்படும் இந்த போதனையை யாராவது செயல்படுத்துவார்களா? எந்த ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? கிடையாது. அல்லது இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திகக்காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

ஆனாலும் ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமரமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதில் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இந்த வசனம் ஏதோ 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டும்' என்பதை மட்டும் தான் போதிக்கின்றது என்பது இதன் கருத்தல்ல. கிறிஸ்தவர்கள் இந்த ஒரு கருத்தை மட்டும்தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் இயேசு (?) சொன்னதாக வரும் அந்த வசனத்தின் மூலம் அவர் சொல்ல வரும் செய்தி என்ன என்பதை அதைத்தொடர்ந்து வரக்கூடிய மற்றவசனங்களைக் கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும்.

அதாவது மத்தேயு வசனத்தில் தெளிவாகவே அதன் கருத்து தெரியப்படுத்துகின்றது.

'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41

இந்த வசனங்களின் மூலம் நீ யாரையும் எதிர்த்து நிற்காதே. உன்னை எவனாவது அடித்தால் அவனைத் திருப்பி அடிக்காதே. உனது ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு. உன்னிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்க வேண்டும் என்று விரும்பினால் அதோடு சேர்த்து மற்றொன்றையும் கொடு என்று சொல்வருகின்றார்.

உதாரணமாக ஒரு ரௌடி அடாவடியாக ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டினால் உடனேயே நீ இரண்டு லட்சம் ரூபாய் கொடு என்பது தான் இந்த போதனை (?) சொல்ல வரும் கருத்து.

இதை எந்த மனிதனாவது பின்பற்ற முடியுமா? எந்த கிறிஸ்தவ நாடாவது இதை சட்டமாக்குமா? ஒரு கிறிஸ்தவராவது இதைபின்பற்றுவாரா முடியவே முடியாது. பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக் கொன்டிருக்கலாமேயொழிய இதை செயல்படுத்துவது என்பது அறவே முடியாத காரியமே.

உதாரனமாக இந்த வசனத்தை நம்பக்கூடிய கிறிஸ்தவர் ஒருவனுடைய சகோதரனையோ அல்லது அவரது குழந்தையையோ ஒருவன் கொலைசெய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் தனது மற்றொரு சகோதரனைக் கொலை செய் என்று அந்த கொலைகாரனிடம் கொடுப்பாரா?

சமீபத்தில் ஒரிசாவில் சில கிறிஸ்தவ கன்னியாஸத்திரிகள் சில பயங்கரவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்கள். உடனே இந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இரண்டு பேரை கற்பழித்தாயா? (இயேசுவின் போதனைப்படி) இன்னும் இரண்டு கண்ணியாஸ்திரிகளை எடுத்து கற்பழித்துக்கொள்ளுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதை செய்தார்களா? முடியுமா? மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்பாட்டமும் - போராட்டமும் செய்தார்கள்.

ஓரிசாவில் ஒரு பாதிரியாரும் அவர் மகனும் தாராசிங் என்பவனால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்கள். உடனே கிறிஸ்தவ உலகம் இதை எதிர்த்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டதேயொழிய இன்னொரு பாதிரியாரையும் அவர் மகளையும் தாராசிங்கிடம் கொடுத்து எரிக்கச் சொல்லவில்லை.

சமீபத்தில் ஒரிசாவில் பல சர்ச்சுகள் சங்பரிவார்களால் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் இந்த போதனையை பெயரளவுக்கு பாமரமக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இந்த போதனையை செயல் படுத்துவது போல் மேலும் இரு மடங்காக சர்ச்சுக்களை கொளுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்களா என்றால் இல்லை. மாறாக இந்த கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதை எதிர்த்து வழக்குகளைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார்கள். உலகத்தில் ஒருத்தராவது - ஒரு உன்மையான கிறிஸ்தவராவது பைபிளில் உள்ளதன் படி செயல்படுவோம் என்றார்களா என்றால் கிடையவே கிடையாது. காரணம் இந்த போதனை என்பது யாராலும் செயல்படுத்த முடியாத, இந்த நடைமுறை உலகிற்கு சாத்தியப்படாத ஒரு போதனை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இதை அவர்கள் பெயருக்காவது பிரச்சாரம் செய்யத்தான் செய்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்த போதனையை போதித்ததாகச் சொல்லப்படும் இயேசுவாவது இதை செயல்படுத்தி காட்டிஇருக்க வேண்டுமல்லவா? அவரது வாழ்விலும் அவர் துன்புறுத்தப்படுகின்றார். இது போன்ற பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கின்றார். அதை அவரும் செயல்படுத்தவில்லை என்பது தான் இதில் வேடிக்கையிலும் வேடிக்கை. அது பற்றி பைபிளில் வரக்கூடிய வசனத்தைப் பாருங்கள்:

'இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23

இந்தவசனத்தில் இயேசுவை ஒருவன் அறைந்ததும் அவர் மறுகனமே மற்றொரு இடத்தைக் காட்டி இங்கும் அறை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து அவரோ 'நான் தப்பா பேசினால் என்னை அடி. நான் சரியாக பேசினால் என்னை ஏன் அடிக்கின்றாய்?' என்று எதிர்த்து கேட்கிறார் என்றால் என்ன அர்த்தம்? இந்த வசனம் சாத்தியப்படுமானால் அவராவது செய்து காட்டி இருக்க வேண்டியது தானே.

நாம் மேலே கேள்வி எழுப்பியது போல் அடிதடி சம்பவங்களோ, கற்பழிப்பு சம்பவங்களோ அல்லது தீ எரிப்பு சம்பவங்களோ இங்கே நடைபெறவில்லை. குறைந்தபட்சம் அவர் கன்னத்தில் அறைந்துள்ளார்கள். அவர் மறு கன்னத்தை காட்டி இதோ அடித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? ஆனால் செய்யவில்லை. காரணம் கண்டிப்பாக இது இயேசுவின் போதனையாக இருக்க முடியாது. இரண்டாவது இதை யாராலும் எப்போதும் பின்பற்ற முடியாத செயல்படுத்த முடியாத சாத்தியப்படாத சட்டமும் கூட.

இப்படி இந்த வசனத்தின் மூலம் யாராலும் சாத்தியப்படுத்த முடியாது என்ற பிறகும் இதை வைத்து இந்த மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்களை என்ன வென்று சொல்வது?

யாராலும் செயல்படுத்த முடியாத, இதை போதித்ததாக சொல்லப்படும் இயேசுவாலேயே செயல்படுத்த முடியாத, ஏட்டளவில் இருக்கும் ஒரு போதனையை எதற்காக இந்தக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ மிஷினரிகளும் பிரச்சாரம் செய்யவேண்டும். சிந்திக்க வேண்டாமா?

தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் ஒரு அறிவிப்பு வெளியிடுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று சொல்கின்றார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம் அது சாத்தியப்படாது - கொடுக்கவும் முடியாது. சாத்தியப்படாத ஒன்றை அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்கி ஆஹா.. என்ன அற்புதம் என்று பாராட்டு தெரிவிப்பீர்களா? அல்லது இந்த மடையன் நம்மை ஏமாற்றுகின்றான் என்று குற்றம் சுமத்துவீர்களா? அது போலத்தான் இந்தச் சட்டமும் இந்த சட்டத்தின் கருத்தும். இதை சொன்ன இயேசுவும் பின்பற்ற வில்லை. இதை பிரச்சாரம் செய்யக்கூடிய கிறிஸ்தவர்களும் பின்பற்ற போவதில்லை. ஆனால் இந்த கிறிஸ்தவர்களும் மக்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷினரிகளும்; யாராலும் செயல்படுத்தமுடியாத இது போன்ற போதனைகளை (?) மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மக்களை மடையர்களாக்கவே என்பதை யாராவது மறுக்க முடியுமா?

இதில் இன்னொரு உன்மையையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இது போன்ற சாத்தியமற்ற ஒரு போதனையை குறிப்பாக தனிமனிதர்களுக்கு சொல்லப்பட்ட ஒரு போதனையை இஸ்லாம் சொல்லக்கூடிய ஒரு ஆட்சி நடைபெரும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய குற்றவியல் சட்டங்களோடு ஒப்பிட்டு கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது - மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

எனவே சகோதரர்கள் இது போன்ற பொய்யான பிரச்சாரங்களை முறியடித்து உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Tuesday, April 08, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.
.
.
.

Tuesday, February 19, 2008

காஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா?

'இஸ்லாம்' - அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது' என்ற பிரச்சாரம் இந்து ராஜ்யம்(?) அமைக்கத் திட்டம் வகுத்திருப்பவர்களாலும் அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மறைப்பதற்காக சில கிறிஸ்தவ விஷமிகலாலும் பரப்பப்பட்டும் - எழுதப்பட்டும் வருவதுடன் அப்பாவி இந்துக்களைக்களையும் மற்றும் மாற்றுமதத்தவர்களையும் கவர்ந்திழுக்க முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கிளறி விடப்படுகின்றது.

சமூக அமைதியையே கேள்விக்குறியாக்கி வரும் இப்பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.

'இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் யாவும் பொதுவானதன்று. போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மங்கள்' என்று ஒருவரியில் பதில் கூறுவதே போதுமானதாகும்.

ஆயினும், மாற்றார்கள் ஐயத்திற்கிடமின்றி இதைப்புரிந்து கொள்வதற்காக இதை விபரமாக விளக்குவோம்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்வதுதான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணண், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரணசமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி, ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்படுகின்றனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல் தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலை காரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமாலும் செய்யலாம் என்று நடந்துள்ளனர். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போரிலும் கூட புது நெறி புகுத்தினார்கள்.

மாற்றார்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் குர்ஆன் வசனத்தை விளக்குமுன் அவர்கள் மாற்றாரிடம் நடந்து கொண்ட முறையை மாற்றார்கள் அறிய வேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப் பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.

காஃபிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் மரபாக இருந்திருந்தால் மக்கத்துக் காஃபிர்களைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழிவாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது. இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி விளைநிலங்களுக்குத் தீ வைத்து தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்ற ஒரு சமுதாயத்தினர் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

காஃபிர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்வது இஸ்லாத்தின் கட்டளையாக இருந்திருந்தால் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் பெற்றிருந்த இந்தச் சமயத்தில் அதைச் செய்திருப்பார்களே!

காஃபிர்களுடன் அதாவது மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறைக்கு மற்றொரு சான்றைக் கேளுங்கள்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். 'உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்' என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு 'கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி நடந்துள்ளார்கள் என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்களை வெட்டிக் கொல்வது இஸ்லாமிய கட்டளையாக இருந்திருந்தால் காஃபிரான அந்தப் பெண்மனி மதீனாவில் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும்? இதையும் மாற்று மதத்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தனி நூலாக எழுதப்படும் அளவுக்கு பல சான்றுகள் உள்ளன. காஃபிர்களைக் காஃபிர்கள் என்பதற்காகக் கொல்வது இஸ்லாம் காட்டும் வழியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள இவை போதுமாகும்.

'அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்' என்று குர்ஆன் கூறும் கட்டளையின் கருத்தென்ன? அந்த நியாயமான ஐயத்தையும் நீக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் 191-வது வசனத்தில் இந்தக் கட்டளை இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் தவறான முடிவுக்கு வரமாட்டார்கள்.

உங்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்2:190)

எவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் போருக்கு வருகிறார்களோ அவர்களுடன் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள் என்று கூறிவிட்டுத்தான் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுகிறது.
எதிரிகள் போருக்கு வரும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறும் வசனத்தைத் தான் பொதுவானதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த விஷமிகள் கனவு காண்பது போல் இந்து ராஜ்யம் ஏற்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி இந்துராஜ்யம் அமைந்த பிறகு அண்டை நாடு ஒன்று போருக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அகிம்சை பேசுவார்களா? அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார்களா?

உலகில் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் கட்டத்திலும் கைகட்டி வாய்பொத்தி நிற்குமா?

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாக சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

இன்று நாள்தோரும் அமெரிக்காவும் அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் செய்யும் அக்கிரமமான - கொடுமையான - அப்பாவிமக்களை கொண்று குவித்துக்கொண்டிருக்கக்கூடிய போர்களையோ அல்லது ஒருபுறம் வந்தேரி யூதர்களுக்காக அப்பாவி பாலஸ்தீன் மக்களை கருவறுத்துக் கொணடும், மற்றொரு புறம் ஈராக், ஆஃப்கானிஸ்தான் மக்களை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கும் சில மதவெறி - ஆதிக்க வெறி நாடுகள் செய்யும் போர்கள் போல் இஸ்லாம் கூறும் போர் தர்மங்கள் அமையவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக் கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவே இல்லை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச் சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

Saturday, February 16, 2008

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர் என்றும் இஸ்லாம், பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கும் அருவாள் முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றுகளாக உள்ளன என்பது முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியுள்ளதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததும் உண்மை.

ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவர்கள் கூறுகின்ற காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணத்துக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவதுதான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதுண்டு.

அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனி நாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு. மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தை திணித்த வரலாறும் உண்டு. பலநாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு. தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பும்.

முஸ்லிம் படையெடுப்புகள் :

வெண்ணி, வாகை, புள்ளலுர் பரியலம், மணி மங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தௌ;ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம், மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவைதாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர். இந்து மதத்தை அவர்கள் அழிக்க நினைத்திருந்தால் அதற்கு 800 ஆண்டுகள் மிகவும் அதிகமாகும். அதற்கு குறைவான ஆண்டுகளிலேயே அழித்திருக்க முடியும்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களை பெருமவு நியமிருத்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்களா? நடுநிலையாக யோசிக்க வேண்டும்.

இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாயவுணர்வுடைய எவருமே கூறத்துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் ஆள்பலமே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிதத்துக்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும், ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்துக்களின் போர்களுக்கெல்லாம் இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படி கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாமே தூண்டிவிட்டது எனக் கூறமுடியாது.

சுருக்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்பமுடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே! இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றியே நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சந்தித்த போர்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

தனது நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர் நடத்தினார்களா? நிச்சயமாக இல்லை. இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் 'பத்ர்' எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஒடலாயிற்று. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும். விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலை நகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகி விடக் கூடிய அருமையான சூழ்நிலை வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அதுதான்.

'பத்ர்' எல்லையத் தாண்டி அவர்கள் ஒரடியும் எடுத்து வைக்க வில்லை என்றால் நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விடவேறு என்ன சான்று வேண்டும்?

'உம்ரா' எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹூதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்கு பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகி இருக்கும். ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறுதான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா! எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக இல்லை. 'தாயிப்' நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதீனாவை விட வளமானதாக இருந்ததில்லை. போர் நோக்கமாக அது இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டால் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஸலாமை-(சமாதானத்தை) கூறியவரிடம் (அவரிடம் உள்ள) இவ்வுலக சாதனங்களை (கைப்பற்ற)நாடி 'நீர் விசுவாசி அல்ல' எனக் கூறாதீர்கள் அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா? எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றிவீராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழி வாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலைச் செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்களை நாடு துறத்தக் காரணமானவர்கள், தோழர்களை கொன்றவர்கள், இஸ்லாத்தை ஏற்றதற்காக சுமையா என்ற பெண்ணின் மர்ம உறுப்பில் ஈட்டியை நுழைத்து கொன்றவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படி பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொது மன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்குப் போதுமான சான்றாகும்.

ஒரு கூட்டத்தினர் மீது உங்களுக்குள்ள வெறுப்பு நீதியுடன் நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)

போர்க்களத்தில் எந்த தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு அவர்களின் உள்ளம் விசாலமானது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாதது.

மத மாற்றம் செய்வதற்காகவா? மற்றவர்களை மத மாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம் மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது. (அல்குர்ஆன் 2:256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்தச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு அவர்களின் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யாவரி என்றால் என்ன? அது சரியா என்பது பற்றி பின்னர் வரும் கேள்விகளில் வர உள்ளது)

இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?

மேற்கண்ட காரணங்களுக்காக போர் நடக்கவில்லை என்றால் அவர்கள் போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விகளுக்கு வருவோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்று நாம் சொல்லவில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் (உணவுக்காக) என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு கீழ்கண்ட காரணங்கள் இருந்தன. இது சரியா தவறா என்று நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

முதலாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கூண்டோடு கறுவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி(ஸல்) அவர்கள் போர்களை சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காணமாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

'உஹதுப் போர்' என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் 'உஹத்' எனும் மலை அடிவாரத்தில் நடந்ததால் 'உஹதுப் போர்' என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்துவிட்டனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்களைக் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்திக்க நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும் இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்களின் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

'பத்ருப் போர்' என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப்போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இருப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்து விட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?) (அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள்தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டவை.

இரண்டாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால்தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபணைக்கிணங்கத் திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வப்போது குறிக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்து மீறுபவர்களை வழி மறிக்கவும் அவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் இவ்வப்போது சிறுசிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழி மறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தம் விஷயத்தில் எதிர்மறையான நிலைய மேற்கொள்ளக்கூடியவர்களிடம், இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் தத்தமது நாடுகளில் அனுமதிப்பார்களா என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை (சொந்த நாட்டை) மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிக் கொண்டனர்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு(அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து 'எங்கள் இறைவன் அல்லாஹ்' என்று கூறியதற்காக அநியாயமாக வெறியேற்றப்பட்டனர்.

தங்கள் தாயகத்தை மீட்டிதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.

நான்காவது காரணம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின் தலைவர்களுக்கு எப்படி சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அதுபோலவே மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்பட) நபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.

இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர். சில்லரை விஷமங்களையும் செய்து வந்தனர். மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜண்டுகளாகச் செயல்பட்டனர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச் சென்று கோரமாகக் கொலை செய்தனர். நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர். இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும் நபியவர்கள் போர் செய்துள்ளனர். யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்த காரணத்துக்காக நிகழ்த்தப்பட்டவையே.

இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காக போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று மாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லை. நாம் வாழும் நாட்டுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம். இவையல்லாத மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஐந்தாவது காரணம்

ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளது. உலகில் அமைதி நிலவிட இந்த கொள்கை அவசியமானதுதான். ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின் விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான். அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளை அடிக்கிறான் அப்போதும் அடுத்த விட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். அவளைப் பட்டினிபோடுகிறான், அப்போதும் கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம். கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப்போகிறான். அப்போதும் அடுத்த வீட்டு விவகாரம் என்று போசாமல் எவரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. அடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும் பொருந்தக் கூடியது தான்.

ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான் தாங்க முடியாத அளவுக்கு கொடுமை அதிகரிக்கின்றது. அவனை எதிர்ப்பதற்கான துணிவோ, பலமோ அம்மக்களுக்கு இல்லை. அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலையமாட்டானா? இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறிவிடுவோமா? என்று ஏங்குகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் 'எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.

மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, நிற்பதற்கு வரி, நடப்பதற்குவரி, பேசுவதற்கு வரி, எழுதவரி, திருமணவரி, சாவு வரி, வியாபார விரி, விவசாயவரி, வாகனத்துக்கு வரி, குழந்தை பிறப்பதற்கு வரி, என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்தி, இப்படிப்பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் நாடுகள் மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர். அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர். அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.

பங்களாதேஷ் என்று அறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள், ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர். அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து முஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்தது. அவரால் இந்தியாவின் உதவியும் கோரப்பட்டது. அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தை அனுப்பியது. அவர்களை மீட்டது.
விடுதலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகி விட்டாலும், அவர்கள் வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்டபோது இந்தியாவின் விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.

மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போர் இந்திய அதிரப்படை சென்று அதை மீட்டுக் கொடுத்தது.

இவற்றை நியாயப் படுத்துவோர் நியாயமான முறையில் நபியவர்கள் நடத்திய போர்களைக் குறை கூறுவது தான் வியப்பாக உள்ளது.

நபிகள் நாயகத்தின் போர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனமான போர்கள் போன்றவை அல்ல.

அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்ற காரணங்களுக்காகவே நபியவர்களும் போர் செய்துள்ளனர். இஸ்லாத்தைக் குறை கூற வேண்டுமென்பதற்காகவே இது சம்பந்தமாக தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

உருவ வழிபாட்டை அனுமதிக்காத இஸ்லாம், அதே நேரத்தில் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கக்கூடாது எனக் கூறுகிறது என்றால் அதிலிருந்து இஸ்லாத்தை அவர்கள் விளங்கட்டும்.

மக்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால், கிறித்துவ, யூத, ஆலயங்கள் மற்றும் இறைவனின் பெயர் அதிகமாகக் கூறப்படும் பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 24:40)

எந்த ஆலயமும் இடிக்கப்படக் கூடாது என்பதை இதன் மூலம் இறைவன் கூறுகின்றான்.

மற்றவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்களும் அறியாமையினால் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

ஏகத்துவக் கொள்கைளை உயிர் மூச்சாகக்கொண்டுள்ள இஸ்லாம், மற்ற மதத்தவர்களுக்கு அநீதி இழைக்க நாடியிருந்தால் இந்த இரண்டு போதனைகளையும் கூறியிருக்காது.

இதுபோலவே, மற்ற விஷயங்களில் இஸ்லாம் எவ்வளவு தாராளத்துடன் நடந்திருக்கும் என்பதை நடுநிலையான பார்வை இருப்பவர்கள் விளங்கலாம்.