அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label ஓய்வு நாள். Show all posts
Showing posts with label ஓய்வு நாள். Show all posts

Monday, June 08, 2009

கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.

இதைத் தான் இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும்போது:

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இந்த வசனத்தில், இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சாராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதனால் எந்தவித கலைப்பும் ஏற்படவில்லை என்றும் - அப்படி ஏற்படும் அளவுக்கு அவன் பலவீனமானவனாகவும் இருக்க மாட்டான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது.

இறைவனின் வல்லமையை பறைசாற்றும் இந்த திருக்குர்ஆனின் வசனத்திற்கு மாற்றமாக, சர்வ வல்லமைப்படைத்த கர்த்தருக்கு, இந்த உலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்ததால், கலைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும், கார்த்தரின் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..' (யாத்திராகமம் 31:17)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். - ஆதியாகமம் 2:2

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார் ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். - யாத்திராகமம் 20:11

கர்த்தர் உலகம் மற்றும் இந்த அண்டசாராசரங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு அதன் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டு பலவீனனான மனிதனைப் போன்று ஓய்வெடுத்ததாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது.

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலவீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு மட்டுமே உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன். எனவே கர்த்தருடைய கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இத்தகைய பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரால் சொல்லப்பட்டிருக்காது, மாறாக கர்த்தருடைய எதிரியான சாத்தானின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தான் திருமறைக்குர்ஆனில் சர்வ வல்லமை பொருந்திய இறைவன் கூறுகின்றான்:

அவர்கள் இறைவனை கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக இறைவன் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

ஓய்வு நாள் ஏன்?

இது ஒருபுறமிருக்க, இப்படி கர்த்தரால் ஓய்வெடுக்கப்பட்ட அந்த நாளைத்தான் யூதர்களும் - பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கிறிஸ்தவர்களும் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். - யாத்திராகமம் 20:9-10

கர்த்தரே ஓய்ந்திருந்த அந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்காமல் எவரேனும் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14

கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், கர்த்தர் ஒய்வு எடுத்ததாகவும், அந்த நாளைத்தான் யூதர்களுக்கு ஓய்வு நாளாக அனுசரிக்கும் படி கட்டடையிடப்பட்டதாகவும் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஓய்வு நாளில் எவரேனும் வேலை செய்தால் அவன் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் குறிப்பிடுகின்றது.

யூதர்கள் ஆசாரிக்கும் 'ஓய்வு நாள்' ஏற்படுத்தப்பட்டதற்கு காரணம் 'கர்த்தர் ஓய்ந்திருந்தது' தான் என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றம் பைபிளின் இந்த வசனங்களின் மூலம் ஏற்படுத்தப்படுன்றது.

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டதற்கு இது தான் காரணமாக இருந்தால் முதல் மனிதன் ஆதாம் காலம் தொட்டே 'ஓய்வு நாள்' என்னும் அந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருப்பாரே? அல்லது அவருக்கு உண்மையான விசுவாசியாக இருந்த ஆபிரகாமின் காலத்திலிருந்தாவது கர்த்தர் அந்த கட்டளையை கொடுத்திருப்பாரே? ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மோசேயின் காலத்தில் இப்படிப்பட்ட ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்படவேண்டும்? காரணம் இஸ்ரவேவலர்கள் செய்த செயல்களின் காரணமாக - அவர்களை சோதிக்கும் பொருட்டு - இறைவன் இந்த ஓய்வு நாள் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தானே அல்லாமல், கர்த்தர் ஓய்திருந்தார் என்பதற்காக அல்ல. அப்படி சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு நாள் யூதர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்ற உன்மையைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்துகின்றது:

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் 7 : 163.)

மேலும், அவர்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம். மேலும் ''(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (அல்குர்ஆன் 4 : 154)

இப்படி எல்லாம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் பொருட்டே யூதர்களுக்கு சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆக்கப்பட்டதே அல்லாமல், பைபிளில் சொல்லப்படுவது போன்று கர்த்தர் ஓய்ந்திருந்தார், அதன் காரணமாகவே அந்த நாளை பரிசுத்தமாக்கும் பொருட்டு ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகின்றது என்று கூறுவது கர்த்தரின் கண்ணியத்தையும் - அவரின் மகத்துவத்தையும் - அவரின் வல்லமையையும் - குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உன்மையில் கர்த்தருக்கு, இது போன்ற கலைப்போ, அதன் காரணமாக ஓய்வோ தேவைப்படாது என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளிலும் ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. -ஏசாயா 40:28

இதை WBTC மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு கூறுகின்றது :

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக கர்த்தரின் வல்லமை பறைசாற்றப்பட்டிருக்க, அவர் ஓய்வு எடுக்க மாட்டார் - அவர் எத்தகையை பெரிய காரியங்களை செய்தாலும் அதனால் அவருக்கு எந்த வித கலைப்பு ஏற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்க - எப்படி கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்றும் அதன் காரணமாகவே ஓய்வு நாள் யூதர்களுக்கு கடமையாக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கூற்று பைபிளுக்கே எதிரான கருத்தில்லையா? யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போன போக்கில் பைபிளின் மற்ற வசனங்ளே முரண்படும் வகையில் தங்கள் வேதத்தில் தங்களுக்கு சாதகமாக விளையாடிவிட்டார்கள் என்பது விளங்குகின்றதா இல்லையா? தங்களுக்கு சோதனையாக கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாள் சட்டத்தின் நோக்கத்தையே திரித்து - அதை மாற்றி, கர்த்தர் ஓய்திருந்தால் தான் தங்களுக்கு அந்த ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்பட்டது என்று ஒரு தவறான கருத்துத் திணிப்பு வேலை பைபிளில் நடைபெற்றுள்ளது என்பது விளங்குகின்றதா இல்லையா?

எனவே கிறிஸ்தவர்களே நீங்கள் உன்மையை உணரவேண்டும். சத்தியத்தை அறியவேண்டும். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை - பைபிளில் இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்திகளை - பிரித்து, உன்மை எது பொய் எது என்று பிரித்தறிவிக்கும் முகமாகத்தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தராகிய அல்லாஹ் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றான். அதைத்தான் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் கூறும் போது:

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மதின்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் - 25 : 1)

எனவே சகோதரர்களே அசத்தியத்தை விட்டு வெளியே வாருங்கள்! சத்தியத்தை அறியுங்கள். ஏக இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக.

தொடரும்!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.