அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label அன்டைவீட்டார். Show all posts
Showing posts with label அன்டைவீட்டார். Show all posts

Wednesday, February 27, 2008

அண்டை வீட்டாரின் உரிமைகள்!

'இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது.

'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்: 'தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை'

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே!'


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்

விளக்கம் : தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.

நான் அண்ணலாம் பெருமானார் கூறக்கேட்டேன்:

'எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது?' அண்ணலார் பதிலளித்தார்கள். 'எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு!'

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி

விளக்கம் :அக்கம் பக்கத்திலுள்ள நாற்பது வீடுகள் வரை அண்டை வீடுகள் என்று கருதப்படும். அவர்களில் எவருடைய வீடு மிக அருகில் உள்ளதோ அவரே நம்மீது மற்ற அனைவரையும்விட அதிக உரிமையுள்ளவர் ஆவார்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

'எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! '

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி), நூல் : மிஷ்காத்

ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: 'இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், நஃபில் (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், ஸதகா (தர்மம்) கொடுக்கின்றாள், இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்.

'இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் 'அவள் நரகம் புகுவாள்' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் மீண்டும கூறினார் : 'அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான ) நோன்புகள் நோற்கின்றாள், மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள், ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.'

இதற்கு அண்ணலார், 'இவள் சுவனம் புகுவாள்' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), மிஷ்காத்

விளக்கம் : முதல் பெண் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டாள் என்பதற்காக நரகம் புகுவாள். அண்டை வீட்டார் துன்புறுத்தப்படக்கூடாது. இது அவர்களின் உரிமையாகும். அவள் இந்த உரிமையை நிறைவேற்றவில்லை. உலகில் தன் அண்டை வீட்டாரிடம் அவள் மன்னிப்பும் கேட்கவில்லை, ஆகவே, அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'இறுதித் தீர்ப்புநாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.'

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி), மிஷ்காத்

விளக்கம் : மறுமைநாளில் மக்களின் உரிமைகள் தொடர்பாக அனைத்துக்கும் முதலாக இறைவனின் முன் இரு மனிதர்கள் வருவார்கள். உலகில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அண்டை வீட்டாராய் இருந்திருப்பார்கள், ஒருவர், மற்றவருக்குத் தொல்லை கொடுத்து அநீதியிழைத்திருப்பார். இந்த இருவரின் வழக்கு அனைத்துக்கும் முதலாக விசாரணைக்குவரும்.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! அண்டை வீட்டினருக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரலாகாது என இந்நபிமொழிகள் வலியுறுத்துகின்றது. பக்கத்து வீட்டுக்காரர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளர் அல்ல என்பதும் நபிமொழி! அவர்களுக்கு தீங்கு செய்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அக்கம் பக்கத்தவரின் நலன் பேணாது வாழ்பவர் சுயநலவாதி ஆவார். ஒருவர் இறந்து ஒருவாரகாலமாய்யும் அக்கம்பக்கத்தவருக்கு தெரியாததால் துர்நாற்றம் எடுத்த பின்னர் வீட்டுக்கதவை உடைத்து எடுத்தார்கள் என்கின்ற மேலை நாட்டு நடப்புகளை தின இதழ்களில் பார்க்கின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் சுயநலப்போக்குடனும், சுகபோக வாழ்வையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதாலேயே இந்த இழிநிலை! இது போண்ற அவல நிலை நீங்க நபிமொழியைப் பின்பற்றி நடப்போமா?
.
.
.