அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label இம்மானுவேல். Show all posts
Showing posts with label இம்மானுவேல். Show all posts

Wednesday, August 19, 2009

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?


இயேசுவின் வருகையும் - பொருத்தமற்ற முன்னறிவிப்புகளும்! (பாகம் 1)


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாக சொல்லப்படும் புதிய ஏறபாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் அவரைப் பற்றிய உன்மையான செய்திகளுக்கு பதிலாக, பல பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, முரண்பாடான செய்திகளே அதிகமதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் பல கட்டுரைகள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக, இயேசுவின் பெயரால் இன்னும் என்னென்ன வகையிலான பொய்ச்செய்திகள் சுவிசேஷ எழுத்தாளர்கள் மூலம் பைபிளில் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொரு ஆதாரமே இயேசுவின் பெயரால் கூறப்பட்டுள்ள பொருத்தமற்ற முன்னறிவிப்புகள்.

குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் பல சம்பவங்கள், முந்தைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டு அது நிறைவேறும் வகையில் நடந்ததாகவும், அதன் மூலம் இயேசுவின் வருகை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம், சுவிசேஷ எழுத்தாளர்களால் ஏற்படுத்தப்படுகின்றது.

உண்மையிலேயே இயேசுவைப் பற்றித்தான் அந்த முன்னறிவிப்புகள் குறிப்பிடுகின்றது என்றால் அதை எடுத்துக்கூறுவதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கபோவதில்லை. ஆனால், இயேசுவுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத - அவரது காலத்தில் நடந்த நிக்ழ்சிகளுடன் எந்தவகையிலும் ஒத்துப்போகாத - இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் முன்னறிவிப்பாவே சொல்லப்படாத பல வசனங்களை இயேசுவோடு சம்பந்தப்படுத்தி, 'அவரது வருகையின் மூலம் இது நிறைவேறியது' என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? அதன் மூலம் அவரின் வருகையையே பலர் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு தவறான கண்னோட்டத்தை ஏன் உருவாக்க வேண்டும்? என்பது தான் பலராலும் எழுப்பப்பட்டு வரும் நியாயமான கேள்வி என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பைபிளில் எப்படிப்பட்ட பொய்யான, இயேசுவுக்கு சற்றும் சம்பந்தமில்லாத, தவறான முன்னறிவிப்புகளை இயேசுவின் பெயரால் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதையும், அதை எந்த அளவுக்கு கிறிஸ்தவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இனி தொடராக பார்ப்போம்:

இயேசுவா? அல்லது இம்மானுவேலா?

இயேசுவின் தாய் மரியாள் இறை அதிசயத்தின் மூலம் இயேசுவைக் கருவுற்றிருக்கும் பொழுது, அவருக்கு கணவனாக நிச்சயிக்கப்பட்டிருந்த யோசேப்பு, மரியாளுடைய கர்ப்பத்தைக் குறித்து சந்தேகித்ததாகவும், அதன் காரணமாக, அவரை தள்ளிவிட யோசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு கணவில் தோன்றி, நடந்த உன்மைகளைக் கூறியதுடன் அவரை தள்ளிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது கர்த்தருடைய தூதன் யோசேப்பினிடத்தில், பின்வரும் ஒரு செய்தியையும் கூறியதாக மத்தேயு பதிவு செய்கின்றார்:

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். - மத்தேயு 1:21

இத்துடன் கர்த்தருடைய தூதன் கணவின் மூலம் யோசேப்பிடம் கூறிய செய்தி முடிவடைந்து விடுகின்றது.

ஆனால், இந்த சுவிசேஷத்தை எழுதிய மத்தேயுவோ, இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கருத்தை - அதுவும் மேலே நாம் எடுத்துக்காட்டிய மத்தேயு 1:21ம் வசனத்திற்கு மாற்றமான ஒரு கருத்தை, அதன் அடுத்தடுத்த வசனங்களிலேயே பதிவு செய்கின்றார்:

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:22-23

அதாவது முன்னர் வந்த தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட செய்தி ஒன்று நிறைவேறும் வகையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக இந்த வசனத்தின் மூலம் மத்தேயு குறிப்பிடுகின்றார்.

ஆனால், இந்த சம்பவத்திற்கும், மத்தேயு எடுத்துக்காட்டும் இந்த முன்னறிவிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? என்றால் ஒன்றும் கிடையாது.

ஏனெனில் கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் கூறியதாக சொல்லப்படும் செய்தியில், 'மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவாயாக' என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, மத்தேயுவால் எடுத்துக்காட்டப்படும் முன்னறிவிப்பிலோ, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்றிருக்கின்றது. இந்த வசனத்தின் படி பார்த்தால், இயேசு பிறந்ததும் அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்துவதாக அமையும். அதைத்தான் இந்த வசனமும் குறிப்பிடுகின்றது. ஆனால், அவ்வாறு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்களா? என்றால் கிடையாது.

மத்தேயுவால் முன்னறிவிப்பாக எடுத்துக் காட்டப்படும் இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, 'கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்' என்று கூறப்படுகின்றது. ஆனால் இயேசுவுக்கு 'இம்மானுவேல்' என்று பெயர் சூட்டப்பட்டாக பைபிளில் எந்த ஒரு வசனமும் கிடையாது. இதை எடுத்துக்கூறும் மத்தேயு தனது சுவிசேஷத்தில் கூட, அப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டதாக எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவும் இல்லை. அப்படி பெயர் சூட்டப்பட்டதாக முழு பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் யாராலும் காட்ட முடியாது. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயரை அவரது தாயார் சூட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது காலத்தில் - அந்தப் பெயரை வைத்து வேறு யாராவது அவரை 'இம்மானுவேல்' என்று அழைத்துள்ளார்களா? என்றால் அதுவும் கிடையாது. மொத்த பைபிளிலும் அப்படி அழைத்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அப்படி இருக்க இந்த இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு, இயேசுவுவைப் பற்றி சொல்லப்பட்டதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இதை முதலில் கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அடுத்து, மத்தேயுவால் சுட்டிக்காட்டப்படும் இந்த 'இம்மானுவேல்' என்ற முன்னறிவிப்பு, பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றான ஏசாயாவின் 7:14ம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் இதோ:

அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள் நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். - ஏசாயா 7:13-14

இந்த வசனத்தைத் தான் மத்தேயு தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் மூலமாக இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதாக எழுதுகின்றார். இவர் குறிப்பிடுவது போன்று இந்த முன்னறிவிப்பு இயேசுவைத்தான் குறிக்குமா என்றால் கண்டிப்பாக குறிக்காது. ஏனெனில், இங்கே முன்னறிவிக்கப்படும் 'இம்மானுவேல்' என்பவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்வது? அவர் என்னென்ன செய்வார்? அவர் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வார்? அவரது காலத்தில் என்னென்ன அiடாயளங்கள் நடக்கும்? என்பதை இதே ஏசாயா 7 ம் அதிகாரத்தின் 15-25ம் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது. அந்த அடையாளங்களில் ஒன்று கூட இயேசுவுக்குப் பொருந்திப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப்பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான். தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக்கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான். - ஏசாயா 7:15-25

இந்த வசனங்களில் சொல்லப்படக்கூடிய எந்த அடையாளமாவது இயேசுவிற்கு பொருந்துகின்றதா? இங்கே குறிப்பிடப்படும் அடையாளங்களில் எந்த ஒரு அடையாளமாவது அவரது காலத்தில நடந்ததாக ஒரு பைபிள் வசனமாவது இருக்கின்றதா? என்றால் முழு பைபிளிலும் - ஒரு இடத்திலும் கிடையாது. இப்படி எந்த வகையிலும் இம்மானுவேலைக் குறித்த இந்த அடையாளங்கள் இயேசுவுக்குப் பொருந்திப்போகாமல் இருக்கும் நிலையில், எப்படி இந்த முன்னறிவிப்பு அவரைக் குறித்து சொல்லப்பட்டதாக இருக்க முடியும்? எனவே இம்மானுவேல் என்ற இந்த முன்னறிவிப்பை பொறுத்தவரை, மத்தேயு போதிய ஞானமின்றி - தவறாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது சுவிசேஷத்தில் இயேசுவின் பெயரால் வேறு யாராவது இந்த வசனத்தை திணித்திருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த முன்னறிவிப்பு இயேசுவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்து, மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்படும் 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பு இயேசுவிற்கு எந்த வகையிலும் பொருந்தாது என்பதுடன், அப்படிப்பட்ட பெயர் அவருக்கு சூட்டப்பட்டதாகவோ அல்லது அந்தப் பெயரில் அவரை யாரும் அழைத்ததாகவோ பைபிளில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்பதையும், போதுமான ஆதாரங்களுடன் மேலே நாம் பார்த்தோம். இது ஒரு புறமிருக்க, இந்த ஏசாயா 7:14ம் வசனத்தில் கூறப்படும் 'கன்னிகை' என்ற வார்த்தை இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற ஒரு வாதத்தையும் கிறிஸ்தவர்கள் முன்வைக்கின்றனர்.

இதுவும் சரியான வாதமன்று. ஏனெனில், 'இம்மானுவேல்' பற்றி முன்னறிவிக்கப்படும் ஏசாயா 7:14ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார் இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.- ஏசாயா 7:14

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.
இந்த வசனத்தில் இடம் பெரும் 'கன்னிகை' (virgin) என்ற சொல்லிற்கு, பழைய ஏற்பாட்டின் மூலமொழியாகக் கருதப்படும் எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ள வார்த்தை Almah (עלמה) என்பதாகும். இந்த Almah (עלמה) என்ற வார்த்தைக்கு Young Woman - இளம் பெண்' என்ற பொருள்தானே தவிர, கிறிஸ்தவ பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது போல் 'virgin - கன்னிகை' என்ற பொருள் வராது. அப்படியே இந்த இடத்தில் 'virgin - கன்னிகை' என்று மொழிப்பெயர்ப்பதாக இருந்தால், உன்மையில் மூலமொழியில் இடம்பெற்றிருக்க வேண்டிய எபிரேயுச் சொல் Bethulah ("בתולה"), என்பதாகும்.

ஆனால், அவ்வாறு Bethulah ("בתולה") என்ற வார்த்தை இடம்பெறாமல், 'Young woman - இளம் பெண்' என்ற பொருள் தரும் Almah (עלמה) என்ற சொல்லே எபிரேயு பைபிளில் இடம்பெற்றுள்ளதால், இந்த வார்த்தை மரியாளை மட்டும் பிரத்யோகமாக குறிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இந்த Almah (עלמה) என்ற Young woman - இளம் பெண் என்பவள் திருமணம் முடித்து உடலுறவுக் கொள்ளப்பட்ட பெண்ணாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் முடிக்காத இளம் பெண்ணாகவும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு பொதுவான பருவ வயதை அடைந்த பெண்ணைதான் குறிக்குமே தவிர, பிரத்யோகமாக கண்ணிப்பெண்ணை மட்டும் குறிக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை ஏன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் என்றால், மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மானுவேல் என்ற முன்னறிவிப்பு இயேசுவுக்கு அறவே பொருந்தாது என்பதால், அதை வேறு எந்த வகையிலாவது இயேசுவோடு சம்பந்தப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக, Almah (עלמה) என்ற வார்த்தையை 'கன்னிகை - Virgin' என்று (கிறிஸ்தவ பைபிள்களில்) மொழிப்பெயர்த்து - அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். காரணம், அன்றைய காலத்தில் எந்த ஒரு பெண்ணும் ஆண் துணையின்றி கர்ப்பமடைய முடியாது. இறைவனின் அற்புதம் நிகழ்ந்தாலே தவிர. ஆனால், அன்றைய காலத்தில் ஒரு பெண் - ஒரே ஒரு பெண் - கன்னி கழியாமல் - உடளுறவுக் கொள்ளப்படாமல் (இறை அதிசயத்துடன்) கர்ப்பமடைந்தார் என்றால் அவர் மரியாள் மட்டுமே. எனவே இந்த இடத்தில் Virgin - கன்னிகை என்று மொழிப்பெயர்த்து விட்டால், அது இயேசுவின் தாய் மரியாளையே குறிக்கும் என்ற கருத்தைத் தினிப்பதற்காக இங்கே இவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர். ஆனால் அதற்கும் இங்கே வழி இல்லை என்பது தான் மூல மொழியாகக் நம்பப்படும் எபிரேயு பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கும் சான்றுகள் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, ஏசாயா 7:14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மரியாளை பற்றியதாக இருக்குமானால், அந்த அடையாளத்தைக் கொடுத்த கர்த்தர் அதில் 'கன்னிகை - Virgin' என்பதை மட்டும் பிரத்யோகமாகக் குறிக்கும் Bethulah ("בתולה") என்ற சொல்லை உபயோகிக்காமல் பொதுவான இளம் பெண்களைக் குறிப்பிடும் Almah (עלמה) என்ற சொல்லை உபயோகித்திருப்பாரா என்பதை சிந்தித்துப் பார்த்தாலே, இந்த முன்னறிவிப்பு இயேசுவின் தாயை எந்த வகையிலும் குறிக்காது என்பதை தெளிவாக உணரலாம்.

இன்னும் சொல்லப்போனால், கிறிஸ்தவர்களிடத்தில் பிரபலமாக விளங்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பான Revised Standard Version (RSV, NRSV) போன்ற பைபிள்களிலும், யூதர்களால் வெளியிடப்பட்ட Jewish Publication Society of America Version (JPS) மொழிப்பெயர்ப்புகளிலும், இன்னும் வேறு சில பைபிள் மொழிப்பெயர்ப்புகளிலும் இந்த Almah (עלמה) என்ற சொல்லிற்கு 'Young woman - இளம் பெண்' என்றே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஏசாயா 7:14ம் வசனம் இயேசுவை எந்தவகையிலும் குறிக்காது என்பதுடன், மத்தேயு போன்றவர்கள் போதிய ஞானமின்றி தவறாக எழுதிய புத்தகங்களையே கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகங்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்ற உன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை அறியும் நல்லதொரு பாக்கியத்தை தந்தருள்வாராக!

குறிப்பு: மத்தேயு சுவிசேஷத்தில் தவறாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள 'இம்மானுவேல்' என்ற இந்த முன்னறிவிப்பில் இன்னும் பல குளறுபடிகளும் இருக்கின்றது என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் பல விளக்கங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அந்த குளறுபடிகளும் விளக்கப்படும்.


இறைவன் நாடினால், பைபிளின் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here