திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 2
- எம்.எம். அக்பர்
ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?
இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம்.
அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்'
அல்குர்ஆன் - 19:17-21: அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார். ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார். ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.
மர்யம் (அலை) அவர்களின் வாழ்கையில் நடந்த இரண்டு சம்பவங்களையே குர்ஆன் வசனங்கள் கூறுகிறது என்பதை மிகத் தெளிவாக விளங்களாம்.
மர்யம் (அலை) அவர்களின் வாழ்வில், ஒரேயொரு முறை மட்டுமே மலக்குகளுடன் உடையாடல் நடந்தது என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. குர்ஆன் அப்படிக் கூறியிருந்தால் அவ்விரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்னும் வாதம் சரியானது எனலாம்.
உன்மையில் சூரத்துல் ஆல இம்ரானின் வசனம் (3:42-45) கூறும் மலக்குகளுடைய உரையாடல் ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்தல் - அதாவது நன்மாராயங்கூறல் மட்டுமேயாகும். அதைச் செய்தது மலக்குகளுடைய ஒரு கூட்டமாகும். அந்த கூட்டத்தில் எந்தெந்த மலக்குகள் உட்பட்டிருந்தார்கள் என்பதை அவ்வசனம் கூறவுமில்லை.
இந்த சந்தோஷ செய்தி அறிவிக்கப்பட்ட பின் அதை நிவைறவேற்றவே பரிசுத்த ஆத்மா என்றழைக்கப்படும், ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் மர்யத்தின் பக்கம் அனுப்பி வைத்தான். அவர் ஜனங்களிடமிருந்து தனித்திருந்து, இறைபணி செய்து வரும் மர்யம் (அலை) அவர்களை நோக்கி இறைவனின் கட்டளையை பூர்த்திசெய்ய வந்த போது நடந்த உரையாடலே அல்குர்ஆனின் 19:17-21 விரை உள்ள வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரீலின் வரவு மலக்குகள் செய்தது போல சந்தோஷ வார்த்தையை அறிவிக்க அல்ல, நிறைவேற்றுவதற்கேயாகும். பரிசுத்தமான ஒரு ஆண் குழந்தையை தானம் செய்வதற்கே யாகும். இறைவனின் முன்னறிவிப்பை நிறைவேறுவதற்கான வகையில் மர்யம் (அலை) அவர்களின் உடலில் உண்டாகக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கமே ஜிப்ரீலின் வரவின் நோக்கம் என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.
எவ்வாறாயினும் இவ்விரு வசனங்களும் விவரிப்பது இரு வேறு நிகழ்வுகளையாகும்.
1. மலக்குகளுடைய சந்தோஷ வார்த்தை குறித்த அறிவிப்பாகும்.
2. சந்தோஷ வார்த்தையை நிறைவேற்றுவதற்கான ஜிப்ரீலின் வரவும் அது பற்றிய உரையாடலுமாகும்.
இரண்டும் இரண்டு நிகழ்வுகள், இரண்டு நிகழ்விலும் இரண்டு விதமான உரையாடல்கள், இரண்டு நிகழ்விலும் உரையாடுபவர்கள் வித்தியாசமானவர்கள். அப்படியிருக்க இரு வசனங்களுக்குமிடையே முரண்பாடு உள்ளது என்று எப்படி கூற முடியும்?
இறைவன் நாடினால் விளக்கங்கள் தொடரும்...
0 comments:
Post a Comment