அர்த்தமுள்ள இஸ்லாம்
- மௌலவி P.J.
உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.
ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.
'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.
இந்த நிலையில் 'ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?' என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.
மேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.
வலிமையான வாதங்களையும் முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை எனக் கண்டு கொள்ளலாம்.
- அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்.
- நெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்
என்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.
''அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது'' என்று விமர்சனம் செய்யும் போது ''சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது?'' என்று பதில் கூற முடியாது.
விழுந்து விடக் கூடிய கட்டத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.
'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.
எனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.
நாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை.
'மதங்கள் அர்த்தமற்றவை' எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.
.
1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்
மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.
பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.
''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.
- நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்
- நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்
- சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்
- குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்
- வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்
- கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்
- தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்
- படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்
- சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்
- இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்
- ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்
இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?
''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.
இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.
ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.
கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர். (நூல்: புகாரி 1297, 1298, 3519 )
தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.
ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ''ஏன் இவர் நடந்து செல்கிறார்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ''நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரி 1865, 6701)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது ''அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்'' என்று கட்டளை பிறப்பித்தார்கள். (நூல்: புகாரி 6704 )
கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.
பொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மத குருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர். ஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது. கடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஃது பின் அபீ வக்காஸ் கூறுகிறார். (நூல்: புகாரி 5074 )
ஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ''ஏக இறைவனை நம்பியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். (நூல்: புகாரி 4615)
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கும்'' என்பதை விசாரித்து அறிவதற்காக மூன்று பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிடம் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் (எதிர்பார்த்ததை விட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள். ''நபிகள் நாயகம் (ஸல்) எங்கே? நாம் எங்கே? அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானது)'' என்று தமக்குள் கூறிக் கொண்டார்கள். அம்மூவரில் ஒருவர் ''நான் என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன்'' எனக் கூறினார். இன்னொருவர் ''நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்று வருவேன்'' என்றார். மற்றொருவர் ''நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை'' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மூவரிடமும் சென்று ''இப்படியெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா? அறிந்து கொள்ளுங்கள்! நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்) நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். (சிறிது நேரம்) தொழுகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். பெண்களை மணமுடித்து வாழ்கிறேன். எனவே எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 5063 )
திருமணத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிசுகளைப் பெறுவார் என்ற அளவுக்கு அதை ஒரு தவமென இஸ்லாம் கருதுகிறது.
''உங்களில் ஒருவர் தமது மனைவியுடன் இல்லறம் நடத்துவதும் நல்லறங்களில் ஒன்றாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (கடவுளிடம்) பரிசு கிடைக்குமா?'' என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா? அது போல் தான் இறைவன் அனுமதித்த வழியில் அதை அடைந்தால் அதற்குப் பரிசு கிடைக்கும்'' என்று விளக்கமளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1674
இஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.
துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.
இது தான் மனிதனின் இயற்கை என்பதால் துறவறத்தை குற்றச் செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.
சில பேர் இல்லற சுகத்தை மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு 'காடோ செடியோ' என்று சென்று விடுகிறார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் இன்னும் தாழ்ந்தவர்களாவர்.
ஒரு மனிதன் தன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளான். சொர்க்கத்தை அடைவதற்கான வழிகளில் அது தலையாயதாக அமைந்துள்ளது.
'காடோ செடியோ' என்று புறப்பட்டவர்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாத குற்றவாளிகளாவர். அதனால் கிடைக்கின்ற பெரும் பேறுகளையெல்லாம் இழந்தவர்களாவர்.
* பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்
* அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்
* மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்
* தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்
* நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்
* பொது நலத் தொண்டுகள் செய்தல்
என எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.
''எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?'' என்று ''தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?'' என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.
கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்'' என விளக்கமளித்தார்கள். (நூல்: திர்மிதீ 2693, 2718 )
யாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.
மலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
''இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை'' என்று கூறி ஆடையை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்(?) தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.
இந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை
முழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும்
* தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
* தனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்
* தனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்
* தனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்
* மற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்
* உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
என அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.
ஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமைகளில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள். ''இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். (நூல்: புகாரி 1975, 6134 )
கடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.
மதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டிணி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்? இது உடலை வருத்துவதில்லையா?
தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன்? இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.
பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.
நோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.
நோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.
சூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.
உண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை.
தினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.
ஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.
இவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. ((அல்குர்ஆன் 2:183)
மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.
தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான்.
இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.
யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி. (நூல்: புகாரி 1903, 6057 )
''மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு'' என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.
தொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
''இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன்'' என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.
இவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.
''நமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்'' என்ற அச்சம் தான் அவனை இதிலிருந்து தடுத்து நிறுத்தும்.
முதலில் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.
இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது.
எனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.
மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.
மீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு குறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது.
எனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.
அந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான்.
தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.
தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)
தீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.
இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.
பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டிணியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)
இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.
திருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பது அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும்.
தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.
இத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.
* இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்?
* இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன?
இது தான் அந்தக் கேள்விகள்.
''உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்!'' என்று தான் அவனிடம் கூற முடியும்.
அவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.
* நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டு பிடிக்க முடியாது.
* நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.
* நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுகிறார்.
* பல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார்.
* அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன்.
* அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.
* இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.
''திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு'' என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம்.
''இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன?'' என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது.
இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.
''சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான்'' என்று இஸ்லாம் கூறுகிறது.
இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.
ஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.
தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்
தீ மிதித்தல்
தரைகளில் உருளுதல்
துறவறம் பூணுதல்
நிர்வாணமாக அலைதல்
போன்ற எந்த நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.
எனவே ''மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன'' என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது .