- எம்.எம். அக்பர்
குர்ஆனில் உள்ளவை, ஏதோ ஒரு விஷயங்களைக் குறித்த உரையாடல்களோ, சில சம்பவங்களின் விவரங்களோ அல்ல. மாறாக, அது கூறும் விஷயங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறைவனின் ஏகத்துவத்தைக் குறித்த விஷயங்கள், படைப்புகளை வணங்குவது பற்றிய அர்த்தமற்ற கதைகளின் விவரங்கள், மரணத்திற்கு பிந்தைய வாழ்வு குறித்த திட்டவட்டமான முன்னறிவிப்புகள், பிரபஞ்ச வஸ்துக்களை பற்றிய விவரங்கள், தூதர்களின் வரலாறுகள், வரலாற்று படிப்பினைகள், தார்மீக உபதேசங்கள், தனி மனித – குடும்ப, சமூகக்கடமைகள், பொருளாதார - அரசியல் சட்டங்கள் போன்றவைகள் உட்கொள்ளும் கண்ணியத்திற்குறிய நூலாகும் இந்த திருக்குர்ஆன்.
இருபத்தி மூன்று வருடங்களாக மாறுபட்டச் சூழ்நிலையில் மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு இறங்கியதாகும் இந்த குர்ஆன். இறக்கியருளப்பட்ட உடனுடனே அவ்வசனங்கள் நம்பிக்கைக்கைகுரிய எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டது. இன்னும் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்கள், அவ்வப்போது இறங்கிய ஒவ்வொரு வசனங்களையும் முன்பு இறங்கிய வசனங்களோடு ஒத்துநோக்கி அவைகளோடு பொருத்திப் போகிறதா? இல்லையா என்று பார்த்து பதிக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நிகழ்வுகளுக்கும் தொடர்புடைய, ஏற்புடைய, தேவையுடைய வசனங்களே இறக்கியருளப்பட்டது. இறக்கியருளப்பட்ட அதேவகையில் அப்படியே பதிக்கப்படவும் செய்யப்பட்டது. ஒரே காலகட்டதிலும், சூழ்நிலையிலும் எழுதப்பட்ட நூல்களில் கூட முரண்பாடுகள் காணப்படுவதுண்டு. ஆனால் குர்ஆன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். குர்ஆனில் எந்தவொரு வசனமும் மற்றோரு வசனத்தோடு முரண்படுவதில்லை. மாறுபட்ட சூழ்நிலையில் ஒரு மனிதர் கற்பித்த கற்பனை விவரங்களே குர்ஆனில் உள்ளதென்றால் அதில் பல முரண்பாடுகள் ஏற்பட வழியுண்டு. ஆனால், இதில் யாதொரு முரண்பாடும் இல்லாததே இது யாவற்றிலும் மிகைத்தவனான படைத்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதை தெளிவாக்குகிறது. இதனை திட்டவட்டமாக குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' – அல்குர்ஆன் 4:32
வித்தியாசங்களும், வேறுபாடுகளும்
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் குர்ஆனில் சில முரண்பாடுகள் உண்டு என்று எடுத்துக்காட்டுகின்றார்களே? இதன் உண்மை நிலை என்ன?
குர்ஆன் இறைவனின் வாக்கு ஆகும். அதில் எந்தவொறு முரண்பாடும் இல்லை. மனித கற்பனையில் உருவான ஒரு வசனமாவது குர்ஆனில் நுழைக்கப்பட்டிருக்குமானால் அது நிச்சயமாக மற்ற வசனங்களோடு முரண்பட்டிருக்கும். மனித கையூடல் எதுவும் ஏற்படாத வண்ணம் இறைவன் தன் இறுதி வேதத்தை காத்து அருள்கின்றான். இது இறுதி நாள் வரைக்கும் பாதுகாக்கப்படவே செய்யும். இது இறைவனின் வாக்குறுதியாகும். அதை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:
'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். – அல்குர்ஆன் 15:7
மனிதர்களுடைய கையூடல் ஏற்பட்டதாலே முந்தைய வேதங்கள் பரிசுத்த தன்மையை இழந்தது. இயலாமையிலிருந்து ஒழிந்தோட முடியாதவைகளே முரண்பாடுகள். இருவேறு நபர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து விளக்குவதில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பாகும். பைபிளிலும் மற்ற வேதக்கிரந்தங்களிலும் காணப்படும் முரண்பாடுகள், இவ்வகையிலுள்ள முரண்பாடுகளாகும். முரண்பாடற்ற பரிசுத்த வேத கிரந்தங்களின் சொந்தக்காரர்கள், நாங்கள் என்று உரிமை கொண்டாடுபவர்கள் கூட தங்கள் மதகிரந்தத்தின் முரண்பாடுகளை மறைத்து வைக்கவும் அதிலிருந்து கவனத்தைத் திருப்பவும் வேண்டி, குர்ஆனிலே முரண்பாடு உள்ளது என்று கூறி வீதிக்கு வந்துள்ளனர்.
குர்ஆனிலே 'முரண்பாடுகள்' ஒன்றுமில்லை என்று கூறுவதால் 'வித்தியாசம்' ஒன்றுமில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. வித்தியாசமும் முரண்பாடும் ஒன்றல்ல, வேறுவேறு ஆகும். வித்தியாசங்களை முரண்பாடாக எடுத்துக்கொண்டே குர்ஆனில் முரண்பாடுகள் உண்டென்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதை புரிந்துக்கொள்ள ஒரு எடுத்துக்காட்டு: பைபிள் புதிய ஏற்பட்டிலுள்ள முக்கியமான ஒரு முரண்பாடு இயேசுவின் வம்சவரலாறு பற்றிய முரண்பாடு. மத்தேயுவும் (1:6-16) லூக்காவும் (3:23-31) கூறும் இயேசுவின் வம்சாவழி பற்றிய விவரங்களில் பெரும் முரண்பாடுகள் உண்டு. அதன் காரணம் மத்தேயு – தாவீதின் குமாரனாகிய சாலமோனின் புத்திர பரம்பரையிலும், லூக்கா – தாவீதின் குமாரனாகிய நாத்தானின் புத்திர பரம்பரையிலும், இயேசுவை கொண்டு வர முயற்சித்ததாகும். (இது குறித்து விரிவாக காண இங்கே அழுத்தவும்)
மத்தேயு கூறும் பரம்பரை பட்டியலில் தாவீது முதல் இயேசு வரை 28 நபர்கள் வருகின்றனர். லூக்கா கூறும் பரம்பரை பட்டியலிலோ தாவீது முதல் இயேசு வரை 42 நபர்கள் வருகின்றனர். இயேசுவின் தந்தையாக கூறப்படும் யோசேப்பின் தந்தை யார் என்று கூறும்பிரச்சனைகள் துவங்கி முரண்பாடுகளும் துவங்குகிறது. யோசேப்பின் தந்தை பற்றி மத்தேயு கூறும்போது 'யாக்கோபு' என்றும் லூக்கா 'ஏலி' என்றும் கூறுகின்றனர். ஒருவருக்கு ஒரு தந்தையே இருக்க முடியும். ஆனால் இங்கேயோ ஒருவருக்கு தந்தையாக இரண்டு நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால் இதுவொரு தெளிவான முரண்பாடு அல்லவா? ஆனால், மத்தேயுவும் லூக்காவும் யோசேப்பின் சகோதரனின் பெயரை கூறியிருந்தாலோ - மத்தேயு 'யோசேப்பின் சகோதரன் 'யாக்கோபு' என்றும், லூக்கா யோசேப்பின் சகோதரன் 'ஏலி' என்றும் கூறியதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விவரங்கள் மத்தியில் முரண்பாடு இருக்கின்றதா? என்றால் இல்லை. ஏனெனில், ஒருவருக்கு இரண்டு சகோதரன் இருப்பது இயல்பான ஒன்றாகும். மத்தேயு யோசேப்பின் சகோதரன் யாக்கோபைக் குறித்தும், லூக்கா யோசேப்பின் மற்றொரு சகோதரன் 'ஏலி'யைக் குறித்தும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். இது இரண்டு பேர்கள் கூறிய விவரங்களில் ஏற்பட்ட வித்தியாசத்தின் உதாரணம். இந்த வகையான வித்தியாசம் முரண்பாடு அல்ல என்பதை நாம் விளங்க வேண்டும்.
குர்ஆன் ஒரு வரலாற்று நூல் அல்ல. எனினும், வரலாற்று சம்பவங்களைக் கூறும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் உண்டு. ஆனால் பைபிளில் காணப்படும் வகையில் சம்பவங்கள் தெடராக வரிசைப்படியாக இருப்பதில்லை. அதற்கு காரணமுண்டு. இஸ்ரவேல் சமுதாயத்தின் வரலாறே பழைய ஏற்பட்டில் உள்ளது. பிரபஞ்ச உற்பத்தி துவங்கி மோசேயின் மரணம் வரையுள்ள சம்பவங்களே முதல் ஐந்து ஆகாமங்களில் உள்ளது. மற்ற நூல்களில் மற்ற தீர்க்கதரிசிகளின் கதைகளே உள்ளது. புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களிலேயும் இயேசுவின் கதையையே நமக்கு காணமுடியும். இவையெல்லாம் வரலாற்று நூல்களில் அமைக்கப்படும் முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குர்ஆன் இந்த முறையில் வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கவேயில்லை. குர்ஆன் உபதேசிக்கும் தார்மீக கடமைகளுக்கும், படிப்பினைகளுக்கும், முன் காலச் சம்பவங்களை ஆதாரமாக உடன் எடுத்து வைக்க மட்டுமே செய்கிறது. அதனாலேயே உபதேசங்களுக்கு ஆதாரம் சேர்க்க அவசியமான சம்வங்களை மட்டும் எடுத்து கூறும் பாணியை குர்ஆன் கையாண்டுள்ளது. இப்படி கூறும் போது வரலாற்று காலத்தொடர்பைப் பற்றி அக்கரை எடுத்துக் கொள்வதேயில்லை. அதனுடைய அவசியமும் இல்லை.
வரலாற்றுக் குறிப்புகளை குர்ஆன் கூறும் முறையை மறைத்து காட்டிக்கொண்டு, இது முரண்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகின்றது. மோசேயுடைய வரலாற்றுச் சம்பவங்களை கூறிய பிறகே, சில இடங்களில் இப்ராஹீமின் வரலாற்று சம்பவங்களைக் கூறும். இதனால் இப்ராஹீமுக்கு முன்போ மோசே வாழ்ந்தார் என்று குர்ஆன் கருதவில்லை. மோசேயுடைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்து வைக்கும் போது அது தொடர்பான படிப்பினைகள் இப்ராஹீமின் வரலாற்றில் இருக்கும்போது அதையும் உடன் எடுத்து வைக்கிறது. அதுபோல் இப்ராஹீமின் வரலற்றிலுள்ள படிப்பினைகளை எடுத்துவைக்கும் போது தொடர்புடைய மோசேவின் வரலாற்றிலுள்ள படிப்பினை சம்பவங்களை எடுத்து வைக்கிறது. இதனால் இதை வரிசைப்படியாக எடுக்கக்கூடாது. வரிசைப்படியாக எடுக்கும்படி குர்ஆனில் ஒரு இடத்திலும் கூறப்படவும் இல்லை. அதனால், அத்தகைய சம்பவ விவரங்கள் முரண்பாடுகளுக்கு உட்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி அவர்கள் குர்ஆனில் எதை எதையெல்லாம் முரண்பாடுகள் என்று கூறுகிறார்கள் - அவற்றுக்கான விளக்கம் என்ன? குர்ஆனில் முரண்பாடுகள் இருக்கின்றது என்று கூறி அவர்கள் எந்த வகையில் தவறு செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...