அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, February 04, 2008

குர்ஆன் ஓர் அறிமுகம்

வேதங்கள் என கூறப்படுபவை

உலகிலுள்ள அனைத்து மதங்களும் தங்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜுர், சாம, அதர்வணம், பகவத்கீதை. மனுஸ்மிரிதி போன்றவைகளையும், கிறிஸ்தவமதம் பைபிளையும் சீக்கிய மதம் குரு கிரந்தத்தையும் தங்கள் வேதங்களாக கூறுகின்றன. குர்ஆன் உலகத்தில் வாழும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு அருளப்பட்டிருந்தாலும் அது முஸ்லீம்களுக்கு மாத்திரம் வேத நூல் என்று பிற மதத்தினர் கருதும் நிலையும் குர்ஆன் எங்களுடைய வேத நூல் அது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சில முஸ்லீம்களும் கூறும் நிலையையும் இன்று நாம் காண்கிறோம்.

ஒப்பீடு

பிற மதங்களின் வேதங்களுடன் குர்ஆனை ஒப்பிட்டு நோக்கும் போது நாம் அறியும் சில விஷயங்கள்:

1. குர்ஆனை யாரும் படித்துப் பயன் பெறலாம்.

2. ஒரு சாரார் மட்டுமே வேதத்தைக் கற்றுப் பயன்பெற முடியும் என்ற தடை இஸ்லாத்தில் இல்லை.

3. எல்லாத்துறைகளிலும் எல்லா நேரங்களிலும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு குர்ஆனில் உண்டு, இது பிற வேதநூல்களில் இல்லாத தனிச்சிறப்பு.

4. குடும்பத்தாருடன் இருந்து குர்ஆனை ஓதி பயன் பெறலாம். நேர்வழி அடையலாம். பைபிளின் ஒரு ஆகமத்தை (இசக்கியேல்) நம் சகோதரிகளுடனோ குடும்பத்தாருடனோ படிக்கவியலாத ஆபாச நடை இறைவேதமா? இப்படி இருக்கிறது என வியப்பூட்டும் விரசமான நிலை.

5. 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட இக்குர்ஆனின் கூற்றுக்கள் இன்றளவும் அறிவுலக ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்து கூறும் விஞ்ஞான விந்தைகளுடன் முரண்படாதிருப்பது. இந்த விந்தை பிற வேதங்களில் இல்லை.

6. மனிதக் கரங்களால் கால சூழ்நிலைகளுக்கேற்ப சில கருத்துக்களைச் சேர்த்தும், நீக்கியும், மாற்றியும், உண்மை நிலையை இழந்து சீரழியும் பிற வேதங்களைப் போல் இல்லாமல் அதன் மூல மொழியில் அது எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமுமில்லாமல் இன்றளவும் திகழ்வது குர்ஆனின் தனிச் சிறப்பு.

7. குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துகிறது.(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். ஆதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். (3:3)

8. இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். இச்சிறப்புகள் பிற வேதங்களுக்கு இல்லை.''நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9)''

9. குர்ஆன் இறைவேதமே எனப்பிரகடனம் செய்கிறது.''இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.(2:23)''

''அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா! (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(4:82)''

இதுபோன்று தம்மை இறைவேதம்தான் என்று எந்த வேதங்களும் உறுதியாகப் பிரகடனம் செய்யவில்லை. குர்ஆனின் இந்த சவாலை இன்றையளவும் யாராலும் எதிர் கொள்ளவியலவில்லை. இதுபோன்று ஒப்பீடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:32)'' ''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (முஸ்லீம் - இப்னு மஸ்வூத்(ரலி))

2. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும் - அபூதாவூத் - அபூஹுரைரா(ரலி)

3. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். (புகாரி - உஸ்மான்(ரலி)

4. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைகளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (நூல்: தப்ரானி - அபூஹுரைரா(ரலி)

5. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்)வின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். (நூல்: முஸ்லீம்)

6. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (நூல்: முஸ்லீம்- உமர்(ரலி))7. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. (திர்மிதி - இப்னு அப்பாஸ்(ரலி)

8. குர்ஆனில் யார் ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை அதனைப் போன்று பத்து நன்மையாகிறது. (திர்மிதி - இப்னு மஸ்வூத்(ரலி)

9. யார் குர்ஆனை மனனம் செய்து விட்டு மறந்து விடுவார்களோ அவர்கள் மறுமையில் முகத்தில் சதை இல்லாமல் வருவார்கள்.

10. யார் குர்ஆனை இராகமாக (தஜ்வீத்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்: அபூதாவூத் - பசீர் பின் அப்துல் முன்திர் (ரலி)

11. குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் குர்ஆனை மரணித்தவர்களுக்கு அதனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.''(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.(36:70)''

குர்ஆன் பற்றிய சில குறிப்புகள்

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய முதல் வசனம் 96வது அத்தியாயத்தில் 1 முதல் 5 வசனங்கள் வரை

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய இறுதி வசனம் 2: 281

முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹா

இறுதி அத்தியாயம் சூரத்துன் நாஸ்

மக்கீ அத்தியாயங்கள் - ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை பற்றி விவரிக்க கூடியது

மதனீ அத்தியாயங்கள் - சட்டதிட்டங்கள், சமுதாயப் பிரச்சினைகள், வாரிசுரிமை, ஆட்சி முதலியனகுர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது

மக்கத்து மாந்தர்களின் மூடப்பழக்க வழக்கங்களால் வெறுப்புற்று அமைதியை நாடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஹிரா மலைக் குகையில் இறைவனைத் தியானித்துக் கொண்டிருக்கும் போது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து வஹீ (தூதுச்செய்தி) கொண்டு வந்து நபிகளிடம் நீர் ஓதுவீராக எனக் கூற நபிகளார் எனக்கு ஓதத் தெரியாது எனக் கூறினார்கள். மீண்டும் ஜிப்ரீல்(அலை) நபி(ஸல்) அவர்களிடம் உமதிரட்சகனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! என நபிகளை இறுகக் கட்டியணைத்துக் கூற நபிகளார் ஓதினார்கள். இவ்வாறு குர்ஆனின் 96: 1 முதல் 5 வசனங்கள் முதலில் இறங்கின. வஹீ அருளப் பெற்ற நபிகளார் மிகுந்த பயத்துடன் வீடு திரும்பினார்கள். அவர்களை மனைவி கதீஜா(ரலி) அவர்கள் நீங்கள் நாதியற்றவர்களை சுமக்கிறீர்கள், தேவையுள்ளோருக்கு உதவி புரிகிறீர்கள், பசித்தோருக்கு உணவளிக்கிறீர்கள், உற்றார் உறவினரை உபசரிக்கிறீர்கள். எனவே இறைவன் உங்களை கைவிட மாட்டான் என ஆறுதல் கூறி தேற்றிய பின் தம் உறவினர்களில் ஒருவரான வரகா என்ற முதியவரிடம் (முன் வேதங்களை கற்றரிந்தவர்) அழைத்துச் சென்று கூற வரகா நபிகளை நோக்கி, நீர் நபிதான். என உறுதிப்படுத்திக் கூறினார். மேலும் பின்னர் ஒரு காலம் வரும் அக்காலத்தில் நீர் உம் ஊரை விட்டு விரட்டப்படுவீர் என முன்னறிவிப்புச் செய்தார். இது குர்ஆன் அருளப்பட்ட விதம்.

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட விதம்

1. நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

2. நபித்தோழர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

3. காத்திப் வஹி என்னும் எழுத்தாளர்கள் ஏடுகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர்.

குர்ஆன் திரட்டப்பட்ட விதம்

ஒன்றன் பின் ஒன்றாக நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிக் கொண்டிருக்க அவற்றை அவ்வப்போது நபி(ஸல்) அவர்கள் காதிப் வஹி வாசிகளை அழைத்து எந்த வசனங்களை எத்துடன் இணைத்து எழுதவேண்டும் என்ற ஒழுங்கு முறைப்படி வரிசைக் கிரமமாக எழுதுமாறு பணித்தார்கள். மேலும், குர்ஆனைத் தவிர நான் கூறும் எதையும் எழுதிவிடாதீர்கள் என நபிகளார்(ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள். ஆக குர்ஆனைத் இப்பொழுதுள்ள நிலையில் ஒழங்கு படுத்தி திரட்டித் தந்தது நபி(ஸல்) அவர்களே. இன்று மக்கள் மத்தியில் சிலர் குர்ஆனை தொகுத்தவர் அபூபக்கர்(ரலி) ஈமானில் நிறைந்தவர் உஸ்மான்(ரலி) என்று புகழ் பாடும் கூற்று சரியல்ல. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் உமர்(ரலி) அவர்கள் ஆலோசனையின் பேரில் ஜைது இப்னுஸாபித்(ரலி) அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு குழு காதிப் வஹி, குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தோர், ஆகியோரை அழைத்து அவர்களின் ஏடுகளில் உள்ள வசனங்களை முழுவதும் சரிபார்க்கப்பட்டு அதனை ஒரு பிரதியாக ஆக்கி அது உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. உமர்(ரலி) அதனை தன் மகள் ஹப்ஸா(ரலி) (நபிகளாரின் மனைவி) அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்கள். பின்னர் உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்தில் ஹப்ஸா(ரலி) விடமிருந்து குர்ஆனின் அப்பிரதியைப் பெற்று பல பிரதிகளாக அதனை எழுதி உலகின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அப்பிரதிகளில் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இன்னும் உள்ளது.

சில ஐயங்களும் தெளிவும்

1. குர்ஆனின் முதல் வசனம் 96:1 முதல் 5 வரை இறுதி வசனம் 2:281 என்று இருந்தும் லவ்ஹுல் மஃஹுபூலில் உள்ள ஒழுங்கு முறைப்படியுள்ள குர்ஆனின் முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாவும் இறுதி அத்தியாயம் சூரத்துன்னாஸும் இருப்பது ஏன்? என்ற ஐயம் நமக்கு வருவதுண்டு.

குர்ஆனின் வசனங்கள் கால சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குகேற்ப ஒன்றன்பின் ஒன்றாக இறங்கியவைகளாகும். இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.இந்திய அரசியல் சாசன சட்டம் 1, 2, 3 எனத்துவங்கி அநேக சட்டப் பிரிவுகள் உள்ளன. ஒரு கொலை நடந்து விட்டால் அதற்கு 302, 307 சட்டப்பிரிவுகள் கொலையாளி மீது சுமத்தப்படுகின்றது. அதன் படி அவன் தண்டனை பெறுகிறான். இதுபோல களவு, வழிப்பறி, கற்பழிப்பு, விபச்சாரம் என பல குற்றங்களுக்கு வௌ;வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. அரசியல் சட்டம் இயற்றிய பின் முதலில் கொலை நடந்தால் கொலைக்குறிய சட்டப்பிரிவே நடைமுறைக்கு வரும் 1வது சட்டப்பிரிவு நடைமுறைக்கு வராது. இதனைப் புரிந்து கொண்டால் மேற் கூறிய ஐயம் எழுவதில்லை.

2. குர்ஆனின் வசனங்கள் சிலர் 6666 என்றும் சிலர் 6236 என்றும் சிலர் வேறு எண்ணையும் கூறுவர். அப்படியானால் ஏன் இப்படி வேறுபாடு? என்ற ஐயம் நமக்கு வருவது உண்டு. சில இடங்களில் ஒரு வசனத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு வசனம் எனவும் சில இடங்களில் இரண்டு வசனத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு வசனம் எனவும் எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான், தவிர குர்ஆனில் எந்த மாறுபாடும் இல்லை. 6666 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுதான் குர்ஆன், 6236 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுவே குர்ஆன்.

3. இஸ்தான்புல்லில் இன்று காணப்படும் குர்ஆனின் பிரதி உஸ்மான்(ரலி) ஆட்சி காலத்தில் விநியோகிக்கப்பட்டது. தற்பொழுது நம்மிடம் உள்ள குர்ஆனின் பிரதியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது அதனை நம்மால் படிக்க இயலாமல் குறியீடுகளின்றி காணப்படுகின்றது. அப்படியானால் எந்த மாற்றமும் இல்லாமல் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? என்ற ஐயம் நமக்கு எழும்.

இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அன்று ஓலைச்சுவடிகளில் எழுதியிருந்தார். திருக்குறளின் மூலப் பிரதி சரஸ்வதி மகாலில் உள்ளது. அதனை நாம் படிக்க முயன்றால் படிக்க வியலாது. காரணம் அந்நாளில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவம் மாறுதலடைந்து இன்று தமிழ் மொழியின் வரி வடிவம் வேறு நிலையில் உள்ளது. ஆனால் ஒலி வடிவம் ஒன்றே. தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துக்களின் னை, ணை, லை போன்ற எழத்துக்கள் சிறிது காலத்துக்கு முன்பு வேறு வடிவத்தில் இருந்ததை யாவரும் அறிவர். ஆக எழுத்துக்களின் வரி வடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருப்பதைப் போல் குர்ஆனின் அரபி மொழி வரிவடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருக்கின்றது. குர்ஆனின் அகர, உகர, இகர குறியீடுகள் இட்டவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னும் வட்டமிட்டிருப்பது பிந்திய காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், குர்ஆனை 30 தினங்களில் ஓதுவதற்கு ஏதுவாக சமமாக 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஜுஸ்உ (பாகம்) எனப் பெயரிடப்பட்டது. 7 நாட்களில் ஓதுவதற்கு வசதியாக மன்ஸில் என 7 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டது இவையெல்லாம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளே.

அல்குர்ஆனின் சிறப்புகள்

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் தான் விரும்புவது போல் வாழ்ந்து கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுக்கின்றான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வேதமாக அல்குர்ஆனையும் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை நாம் நினைப்பது போன்றெல்லாம் அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லீமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் எதிர்பார்ப்புகளும் ஆகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது. இதனை சற்று விரிவாகக் காண்போம்.

1. அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை

சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலக்கிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது. இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லீம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன் அல்குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான். எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளவேண்டும். அதுவே அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை புரிந்து கொள்வதற்கு சாதாரண அறிவே போதுமானது. ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54:32, 47:24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?(54:32)''

''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

2. அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனைப் ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக்காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.''(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக!'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால்தான் குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே! நாளை மறுமை நாளில் ஒரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலங்கோலப்பட்டு அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.

திருக்குர்ஆனை தினமும் படித்து பயனடைவோமாக!

0 comments: