அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, February 23, 2008

பெற்றோரைப் பேணுவோம்

இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் :


'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல்குர்ஆன் 17 : 23

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : திர்மிதீ, இப்னு ஹிப்பான், ஹாம்மில்

''தாய்மார்களைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (அல்லாஹ்வீன் கட்டளையை) நிறைவேற்றாமல் இருப்பதையும் (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும், வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், சொத்துக்களை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது; மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரீ, முஸ்லிம்

''இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு, நூல்: திர்மிதீ

நபியவர்களின் சமூகத்திற்கு வந்த ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா? என வினவிய போது நபியவர்கள், ''உமக்கு தாய், தந்தையார் உண்டா? என (திருப்பி) கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்ற போது நபியவர்கள், ''அவ்விருவருக்கும் (பணிவிடை செய்வதன் மூலமாக) அறப்போர் செய்யும்'' என்றுரைத்தார்கள்.
.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு (நூல்: ஸஹீஹ் அபூதாவூத் -2529)


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார் :'அல்லாவின் தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்?'
.
நாயகம் (ஸல்) அவர்கள் 'உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள்' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் 'அவருக்குப் பிறகு யார்?' என்று கேட்டார்.
.
நாயகம் அவர்கள் 'உம்முடைய அன்னைதான்!' என்று பதிலளித்தார்கள்.
.
அம்மனிதர் 'பிறகு யார்?' என்று மீண்டும் வினவினார். 'உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்'என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்
.
நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)'இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'தாய் தந்தையருடன் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும், பேராசையையும், கஞ்சத்தனத்தையும் இறைவன் உங்கள் மீது ஹராமாக்கியுள்ளான். நீங்கள் வீண் பேச்சு பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கின்றான்.'
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நாங்கள் அண்ணலாரின் அவையில் அமர்ந்து கொண்டிருந்த போது, பனூஸலமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் தந்தையர் இறந்துபோன பின்னாலும் நான் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா?' எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் அவர்கள், 'ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோருங்கள். அவர்கள் செய்துவிட்டுச் சென்ற ( அனுமதிக்கப்பட்ட) மரண சாஸனத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் தாய், தந்தையர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். தாய், தந்தையின் உறவினர்களுக்கு கண்ணியம் அளியுங்கள், அவர்களை உபசரியுங்கள்.'
அறிவிப்பாளர் : அபூ உஸைத்தினில் ஸாஇதி (ரலி), நூல் : அபூதாவூத்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஜிஈரானா என்னுமிடத்தில் இறைச்சி பங்கிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அங்கே ஒரு பெண்மணி வந்தார். நபிகள் நாயகத்திற்கு அருகில் சென்றார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் தம் போர்வையைத் தரையில் விரித்தார்கள். அதில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொண்டார். 'இவர் யார்?' என்று நான் வினவினேன். 'இவர் அண்ணலாருக்கு அமுதூட்டிய செவிலித்தாய்!' என்று மக்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : அபூதாவூத்

1 comments:

Unknown said...

Good Work.