அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, February 04, 2008

இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்...

ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.


சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக


1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.


2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.


இவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.


x] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.


x] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.


x] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.


x] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.


இன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.


ஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.


இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!


x] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.


அடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.


x] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)


இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.


இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.


அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)


ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.


இன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.


x] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


x] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).


இவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.


அன்றைய காலத்தில் நபி அவர்களை பற்றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.


இப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.


இவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா? இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா? இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா? என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.


இவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.


சில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.


சில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.


இப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.


இப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.


கெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.


அறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்து வைத்து இருக்கின்றோம்.


எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.


1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

4. ளயீப் (பலவீனமானது)


எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.


ஆதாரப்பூர்வமானவை


தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.


உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். "தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.


1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ


2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர்மிதீ


1) -> அபூ அவானா -> குதைபா ->


2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->


ஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.


1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.


2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.


4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.


அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.


மேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.


இங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில், ஹதீஸ் புத்தகங்களில், வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா? என்று கேட்கலாம்.


இல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது சிலர் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.


நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.


திர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.


இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.


தப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.


ஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.


இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும். இந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும்.


தொகுப்பு: - அப்துல்லாஹ்

குர்ஆன் ஓர் அறிமுகம்

வேதங்கள் என கூறப்படுபவை

உலகிலுள்ள அனைத்து மதங்களும் தங்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜுர், சாம, அதர்வணம், பகவத்கீதை. மனுஸ்மிரிதி போன்றவைகளையும், கிறிஸ்தவமதம் பைபிளையும் சீக்கிய மதம் குரு கிரந்தத்தையும் தங்கள் வேதங்களாக கூறுகின்றன. குர்ஆன் உலகத்தில் வாழும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு அருளப்பட்டிருந்தாலும் அது முஸ்லீம்களுக்கு மாத்திரம் வேத நூல் என்று பிற மதத்தினர் கருதும் நிலையும் குர்ஆன் எங்களுடைய வேத நூல் அது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சில முஸ்லீம்களும் கூறும் நிலையையும் இன்று நாம் காண்கிறோம்.

ஒப்பீடு

பிற மதங்களின் வேதங்களுடன் குர்ஆனை ஒப்பிட்டு நோக்கும் போது நாம் அறியும் சில விஷயங்கள்:

1. குர்ஆனை யாரும் படித்துப் பயன் பெறலாம்.

2. ஒரு சாரார் மட்டுமே வேதத்தைக் கற்றுப் பயன்பெற முடியும் என்ற தடை இஸ்லாத்தில் இல்லை.

3. எல்லாத்துறைகளிலும் எல்லா நேரங்களிலும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு குர்ஆனில் உண்டு, இது பிற வேதநூல்களில் இல்லாத தனிச்சிறப்பு.

4. குடும்பத்தாருடன் இருந்து குர்ஆனை ஓதி பயன் பெறலாம். நேர்வழி அடையலாம். பைபிளின் ஒரு ஆகமத்தை (இசக்கியேல்) நம் சகோதரிகளுடனோ குடும்பத்தாருடனோ படிக்கவியலாத ஆபாச நடை இறைவேதமா? இப்படி இருக்கிறது என வியப்பூட்டும் விரசமான நிலை.

5. 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட இக்குர்ஆனின் கூற்றுக்கள் இன்றளவும் அறிவுலக ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்து கூறும் விஞ்ஞான விந்தைகளுடன் முரண்படாதிருப்பது. இந்த விந்தை பிற வேதங்களில் இல்லை.

6. மனிதக் கரங்களால் கால சூழ்நிலைகளுக்கேற்ப சில கருத்துக்களைச் சேர்த்தும், நீக்கியும், மாற்றியும், உண்மை நிலையை இழந்து சீரழியும் பிற வேதங்களைப் போல் இல்லாமல் அதன் மூல மொழியில் அது எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே எந்த மாற்றமுமில்லாமல் இன்றளவும் திகழ்வது குர்ஆனின் தனிச் சிறப்பு.

7. குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துகிறது.(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். ஆதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். (3:3)

8. இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான். இச்சிறப்புகள் பிற வேதங்களுக்கு இல்லை.''நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9)''

9. குர்ஆன் இறைவேதமே எனப்பிரகடனம் செய்கிறது.''இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.(2:23)''

''அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா! (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(4:82)''

இதுபோன்று தம்மை இறைவேதம்தான் என்று எந்த வேதங்களும் உறுதியாகப் பிரகடனம் செய்யவில்லை. குர்ஆனின் இந்த சவாலை இன்றையளவும் யாராலும் எதிர் கொள்ளவியலவில்லை. இதுபோன்று ஒப்பீடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம் எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:32)'' ''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது

1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (முஸ்லீம் - இப்னு மஸ்வூத்(ரலி))

2. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும் - அபூதாவூத் - அபூஹுரைரா(ரலி)

3. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். (புகாரி - உஸ்மான்(ரலி)

4. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைகளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (நூல்: தப்ரானி - அபூஹுரைரா(ரலி)

5. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்)வின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித் அத்தும் வழிகேடாகும். (நூல்: முஸ்லீம்)

6. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. (நூல்: முஸ்லீம்- உமர்(ரலி))7. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. (திர்மிதி - இப்னு அப்பாஸ்(ரலி)

8. குர்ஆனில் யார் ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை அதனைப் போன்று பத்து நன்மையாகிறது. (திர்மிதி - இப்னு மஸ்வூத்(ரலி)

9. யார் குர்ஆனை மனனம் செய்து விட்டு மறந்து விடுவார்களோ அவர்கள் மறுமையில் முகத்தில் சதை இல்லாமல் வருவார்கள்.

10. யார் குர்ஆனை இராகமாக (தஜ்வீத்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (நூல்: அபூதாவூத் - பசீர் பின் அப்துல் முன்திர் (ரலி)

11. குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் குர்ஆனை மரணித்தவர்களுக்கு அதனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.''(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.(36:70)''

குர்ஆன் பற்றிய சில குறிப்புகள்

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய முதல் வசனம் 96வது அத்தியாயத்தில் 1 முதல் 5 வசனங்கள் வரை

குர்ஆன் அருளப்பட்டபோது இறங்கிய இறுதி வசனம் 2: 281

முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹா

இறுதி அத்தியாயம் சூரத்துன் நாஸ்

மக்கீ அத்தியாயங்கள் - ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை பற்றி விவரிக்க கூடியது

மதனீ அத்தியாயங்கள் - சட்டதிட்டங்கள், சமுதாயப் பிரச்சினைகள், வாரிசுரிமை, ஆட்சி முதலியனகுர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது

மக்கத்து மாந்தர்களின் மூடப்பழக்க வழக்கங்களால் வெறுப்புற்று அமைதியை நாடி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஹிரா மலைக் குகையில் இறைவனைத் தியானித்துக் கொண்டிருக்கும் போது வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து வஹீ (தூதுச்செய்தி) கொண்டு வந்து நபிகளிடம் நீர் ஓதுவீராக எனக் கூற நபிகளார் எனக்கு ஓதத் தெரியாது எனக் கூறினார்கள். மீண்டும் ஜிப்ரீல்(அலை) நபி(ஸல்) அவர்களிடம் உமதிரட்சகனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! என நபிகளை இறுகக் கட்டியணைத்துக் கூற நபிகளார் ஓதினார்கள். இவ்வாறு குர்ஆனின் 96: 1 முதல் 5 வசனங்கள் முதலில் இறங்கின. வஹீ அருளப் பெற்ற நபிகளார் மிகுந்த பயத்துடன் வீடு திரும்பினார்கள். அவர்களை மனைவி கதீஜா(ரலி) அவர்கள் நீங்கள் நாதியற்றவர்களை சுமக்கிறீர்கள், தேவையுள்ளோருக்கு உதவி புரிகிறீர்கள், பசித்தோருக்கு உணவளிக்கிறீர்கள், உற்றார் உறவினரை உபசரிக்கிறீர்கள். எனவே இறைவன் உங்களை கைவிட மாட்டான் என ஆறுதல் கூறி தேற்றிய பின் தம் உறவினர்களில் ஒருவரான வரகா என்ற முதியவரிடம் (முன் வேதங்களை கற்றரிந்தவர்) அழைத்துச் சென்று கூற வரகா நபிகளை நோக்கி, நீர் நபிதான். என உறுதிப்படுத்திக் கூறினார். மேலும் பின்னர் ஒரு காலம் வரும் அக்காலத்தில் நீர் உம் ஊரை விட்டு விரட்டப்படுவீர் என முன்னறிவிப்புச் செய்தார். இது குர்ஆன் அருளப்பட்ட விதம்.

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட விதம்

1. நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

2. நபித்தோழர்கள் தம் மனதில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

3. காத்திப் வஹி என்னும் எழுத்தாளர்கள் ஏடுகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர்.

குர்ஆன் திரட்டப்பட்ட விதம்

ஒன்றன் பின் ஒன்றாக நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிக் கொண்டிருக்க அவற்றை அவ்வப்போது நபி(ஸல்) அவர்கள் காதிப் வஹி வாசிகளை அழைத்து எந்த வசனங்களை எத்துடன் இணைத்து எழுதவேண்டும் என்ற ஒழுங்கு முறைப்படி வரிசைக் கிரமமாக எழுதுமாறு பணித்தார்கள். மேலும், குர்ஆனைத் தவிர நான் கூறும் எதையும் எழுதிவிடாதீர்கள் என நபிகளார்(ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள். ஆக குர்ஆனைத் இப்பொழுதுள்ள நிலையில் ஒழங்கு படுத்தி திரட்டித் தந்தது நபி(ஸல்) அவர்களே. இன்று மக்கள் மத்தியில் சிலர் குர்ஆனை தொகுத்தவர் அபூபக்கர்(ரலி) ஈமானில் நிறைந்தவர் உஸ்மான்(ரலி) என்று புகழ் பாடும் கூற்று சரியல்ல. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் உமர்(ரலி) அவர்கள் ஆலோசனையின் பேரில் ஜைது இப்னுஸாபித்(ரலி) அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு குழு காதிப் வஹி, குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தோர், ஆகியோரை அழைத்து அவர்களின் ஏடுகளில் உள்ள வசனங்களை முழுவதும் சரிபார்க்கப்பட்டு அதனை ஒரு பிரதியாக ஆக்கி அது உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. உமர்(ரலி) அதனை தன் மகள் ஹப்ஸா(ரலி) (நபிகளாரின் மனைவி) அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்கள். பின்னர் உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்தில் ஹப்ஸா(ரலி) விடமிருந்து குர்ஆனின் அப்பிரதியைப் பெற்று பல பிரதிகளாக அதனை எழுதி உலகின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அப்பிரதிகளில் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இன்னும் உள்ளது.

சில ஐயங்களும் தெளிவும்

1. குர்ஆனின் முதல் வசனம் 96:1 முதல் 5 வரை இறுதி வசனம் 2:281 என்று இருந்தும் லவ்ஹுல் மஃஹுபூலில் உள்ள ஒழுங்கு முறைப்படியுள்ள குர்ஆனின் முதல் அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாவும் இறுதி அத்தியாயம் சூரத்துன்னாஸும் இருப்பது ஏன்? என்ற ஐயம் நமக்கு வருவதுண்டு.

குர்ஆனின் வசனங்கள் கால சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குகேற்ப ஒன்றன்பின் ஒன்றாக இறங்கியவைகளாகும். இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.இந்திய அரசியல் சாசன சட்டம் 1, 2, 3 எனத்துவங்கி அநேக சட்டப் பிரிவுகள் உள்ளன. ஒரு கொலை நடந்து விட்டால் அதற்கு 302, 307 சட்டப்பிரிவுகள் கொலையாளி மீது சுமத்தப்படுகின்றது. அதன் படி அவன் தண்டனை பெறுகிறான். இதுபோல களவு, வழிப்பறி, கற்பழிப்பு, விபச்சாரம் என பல குற்றங்களுக்கு வௌ;வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. அரசியல் சட்டம் இயற்றிய பின் முதலில் கொலை நடந்தால் கொலைக்குறிய சட்டப்பிரிவே நடைமுறைக்கு வரும் 1வது சட்டப்பிரிவு நடைமுறைக்கு வராது. இதனைப் புரிந்து கொண்டால் மேற் கூறிய ஐயம் எழுவதில்லை.

2. குர்ஆனின் வசனங்கள் சிலர் 6666 என்றும் சிலர் 6236 என்றும் சிலர் வேறு எண்ணையும் கூறுவர். அப்படியானால் ஏன் இப்படி வேறுபாடு? என்ற ஐயம் நமக்கு வருவது உண்டு. சில இடங்களில் ஒரு வசனத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு வசனம் எனவும் சில இடங்களில் இரண்டு வசனத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு வசனம் எனவும் எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான், தவிர குர்ஆனில் எந்த மாறுபாடும் இல்லை. 6666 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுதான் குர்ஆன், 6236 வசனங்கள் எனக் கூறுபவருக்கும் அதுவே குர்ஆன்.

3. இஸ்தான்புல்லில் இன்று காணப்படும் குர்ஆனின் பிரதி உஸ்மான்(ரலி) ஆட்சி காலத்தில் விநியோகிக்கப்பட்டது. தற்பொழுது நம்மிடம் உள்ள குர்ஆனின் பிரதியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது அதனை நம்மால் படிக்க இயலாமல் குறியீடுகளின்றி காணப்படுகின்றது. அப்படியானால் எந்த மாற்றமும் இல்லாமல் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? என்ற ஐயம் நமக்கு எழும்.

இதனை நாம் விளங்க உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் அன்று ஓலைச்சுவடிகளில் எழுதியிருந்தார். திருக்குறளின் மூலப் பிரதி சரஸ்வதி மகாலில் உள்ளது. அதனை நாம் படிக்க முயன்றால் படிக்க வியலாது. காரணம் அந்நாளில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவம் மாறுதலடைந்து இன்று தமிழ் மொழியின் வரி வடிவம் வேறு நிலையில் உள்ளது. ஆனால் ஒலி வடிவம் ஒன்றே. தற்பொழுது நடைமுறையில் உள்ள தமிழ் எழுத்துக்களின் னை, ணை, லை போன்ற எழத்துக்கள் சிறிது காலத்துக்கு முன்பு வேறு வடிவத்தில் இருந்ததை யாவரும் அறிவர். ஆக எழுத்துக்களின் வரி வடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருப்பதைப் போல் குர்ஆனின் அரபி மொழி வரிவடிவம் மாறி ஒலி வடிவம் மாறாதிருக்கின்றது. குர்ஆனின் அகர, உகர, இகர குறியீடுகள் இட்டவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர். குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னும் வட்டமிட்டிருப்பது பிந்திய காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், குர்ஆனை 30 தினங்களில் ஓதுவதற்கு ஏதுவாக சமமாக 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஜுஸ்உ (பாகம்) எனப் பெயரிடப்பட்டது. 7 நாட்களில் ஓதுவதற்கு வசதியாக மன்ஸில் என 7 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டது இவையெல்லாம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளே.

அல்குர்ஆனின் சிறப்புகள்

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் தான் விரும்புவது போல் வாழ்ந்து கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுக்கின்றான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வேதமாக அல்குர்ஆனையும் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை நாம் நினைப்பது போன்றெல்லாம் அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லீமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் எதிர்பார்ப்புகளும் ஆகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது. இதனை சற்று விரிவாகக் காண்போம்.

1. அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பதுதிருமறையை

சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலக்கிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது. இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லீம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன் அல்குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான். எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளவேண்டும். அதுவே அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை புரிந்து கொள்வதற்கு சாதாரண அறிவே போதுமானது. ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54:32, 47:24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?(54:32)''

''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''

2. அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனைப் ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக்காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.''(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக!'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால்தான் குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே! நாளை மறுமை நாளில் ஒரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலங்கோலப்பட்டு அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.

திருக்குர்ஆனை தினமும் படித்து பயனடைவோமாக!

Saturday, February 02, 2008

திருக்குர்ஆனை படிப்பதற்கு முன்...

திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?
  • அதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.
செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.
இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.
தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.
முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.
அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.
அதற்கும் மறு நாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.
இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப் படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.
இது போலவே திருக் குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.
எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் காணலாம். முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.
பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.
எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! ''இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென ''உன்னை'' என்று முன்னிலைக்கு மாறுவார்.
'இவர்' என்பதும் 'உன்னை' என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.
இது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.
''உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று ''இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.
ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.
'நீங்கள்' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து 'அவர்கள்' என்று படர்க்கைக்கு மாறும்.
திருக்குர்ஆன் பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதே இதற்குக் காணரம்.
அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.
நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது ''வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் ''வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.
இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இரு வேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.
குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே 'நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் 'நாம்' என்றே கூறுகிறான்.
தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல் வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.
'இது என் வீடு' என்று கூறும் இடத்தில் 'இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.
சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது 'நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் 'நாம்', 'நம்மை', 'நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)

அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.

முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலை சிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் எழுத்து வடிவமாக எழுதி வைத்துச் சென்றார்களே; இரண்டாவதாகத் தொகுப்பதற்கு என்ன அவசியம்? என்று சந்தேகம் எழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவத்தில் பதிவு செய்தார்கள் என்றாலும், அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்று புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு அதனை நபித்தோழர்கள் மனனம் செய்து கொள்வார்கள். ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் அடுத்தது எது என்பதை மனனம் செய்தவர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள்.

மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள்.

தாம், மனனம் செய்ததன் அடிப்படையிலும் மற்றவர்களின் மனனத்தை அடிப்படையாகக் கொண்டும் ''இது இந்த அத்தியாயத்தைச் சேர்ந்தது; இது இந்த வசனத்திற்கு அடுத்து வரவேண்டியது; இது இந்த வசனத்திற்கு முன்னால் வைக்க வேண்டியது'' என்று வரிசைப்படுத்தினார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் வசனங்களையும் வரிசைப்படுத்தி அத்தியாயங்களை தொகுத்தார்களே தவிர, இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது, இது மூன்றாவது அத்தியாயம் என்று வரிசைப்படுத்தவில்லை.
இந்த பாதுகாக்கப்பட்ட மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களுடைய மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில்...
.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய அந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் ''இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
.
குர்ஆனுடைய அத்தியாயங்களை ''இது முதல் அத்தியாயம்; இது இரண்டாவது அத்தியாயம்; இது மூன்றாவது அத்தியாயம்'' என்று வரிசைப்படுத்துகின்ற பணியை அவர்கள் தான் செய்தார்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை. எது முதலில் இருந்தாலும், எது இடையில் இருந்தாலும், எது இறுதியில் இருந்தாலும் அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதே இதற்குக் காரணம். (நூல்: புகாரி லி 4993)

உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். ''இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி னார்கள்.

சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.

இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதி எடுத்தல்
.
மேலும் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படைலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப் படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் ''இஸ்தன்புல்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் ''தாஷ்கண்ட்'' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.
.
அத்தியாயங்களை உஸ்மான்(ரலி) தான் வரிசைப்படுத்தினார்
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் பைஹகீ என்ற அறிஞர் முக்கியமானவர். ஆனால் இவர் தனது கூற்றுக்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.

அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது இப்போதைய குர்ஆனில் இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்படி இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவர்களின் வரிசைக்கும் இடையே ஏராளமான மாற்றங்கள் இருந்தன.

உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆல இம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித் தோழர்கள் பல வரிசைப் படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப் படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை.

எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவது தான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.
.
சமுதாயத்தின் அங்கீகாரம்
.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.

இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளிலேயே குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)

நபிகள் நாயகத்தின் உள்ளத்தில்

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டது என்பதை முன்னுரையில் விளக்கியுள்ளோம். திருக்குர்ஆன் எவ்வாறு தொகுத்து பாதுகாக்கப்பட்டது என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்ப கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச்
சொல்லப்பட்டது. (திருக்குர்ஆன் 75:16, 20:14)

''திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.

இன்னொரு வசனத்தில் ''உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

நபித்தோழர்களின் உள்ளத்தில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ, அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.

பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காண்கிறோம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.

எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.

23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சர்வ சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்து விட முடியும்.

மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள். ''முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பி நடத்துகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.

திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலையும் ஏற்பட இது உதவியாக இருந்தது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களை சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.

இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக நபி வழித் தொகுப்பு நூல்களில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி 0006, 1902, 3220, 3554, 4998)

இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

குறிப்பாக
அபூபக்ர் (ரலி)

உமர் (ரலி)

உஸ்மான் (ரலி)

அலீ (ரலி)

தல்ஹா (ரலி)

ஸஅது (ரலி)

இப்னு மஸ்வூத் (ரலி)

ஹுதைஃபா (ரலி)

ஸாலிம் (ரலி)

அபூஹுரைரா (ரலி)

இப்னு உமர் (ரலி)

இப்னு அப்பாஸ் (ரலி)

அம்ர் பின் ஆஸ் (ரலி)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முஆவியா (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி)

ஆயிஷா (ரலி)

ஹஃப்ஸா (ரலி)

உம்மு ஸலமா (ரலி)

உபை பின் கஅபு (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி)

ஸைத் பின் தாபித் (ரலி)

அபூதர்தா (ரலி)

மஜ்மா பின் ஹாரிஸா (ரலி)

அனஸ் பின் மாலிக் (ரலி)

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது. (திருக்குர்ஆன் 29:49)

எழுத்து வடிவில்
கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயத்தில் இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

முன்னுரை

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
(பார்க்க: குர்ஆன் 14:4.)

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.

இதற்கான சான்றுகளை 1155, 1178 பக்கங்களில் காண்க.
மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

அரபு மொழியில் ஏன் அருளப்பட்டது?

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபு மொழி தான் தேவ மொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும், உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.


குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும், எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற் பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.

இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25 வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25 ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.
  • ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
  • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
  • நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபு மொழி தான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.
இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.
எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள 'ஹிரா' எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.
பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.
இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள்.
அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'ஓது' எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் அவர் 'ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ''படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக'' என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார்.
(இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது)
இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.
''இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்'' என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.
ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்ட கதீஜா அவர்கள் தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.
''நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்; உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார்.
(நூல்: புகாரி 2)
இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாகச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.
(திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது என்பது குறித்தும், எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது குறித்தும் முழு விபரம் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு எனும் தலைப்பில் 1115ஆம் பக்கத்தில் காண்க.)

இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களும்

டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களிடம் இஸ்லாம் பற்றி
மாற்று மதத்தவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு :


டாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு
.
.

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும்
பொதுவான கேள்விகள்.
.
.
.
.
.
.
இஸ்லாம்பற்றிய மாற்று சமயத்தவர்களின் சந்தேகங்களுக்கு
மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு :
.
.
..
.
.
.
.
.
.
.
.

இஸ்லாம்பற்றிய மாற்று சமயத்தவர்களின் சந்தேகங்களுக்கு மற்ற இஸ்லாமிய சகோதரர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு :
.


.


மற்றதளங்களில் வந்த இஸ்லாம் சம்பந்தமான கட்டுரைகளுக்கு மறுப்புகள் :

Friday, February 01, 2008

மறுபிறவி இருப்பது உண்மையா?

கேள்வி: மறுபிறவி இருப்பது உண்மையா?
மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

பதில்: நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை, நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

இருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது, கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்? இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது? இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.
ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.