அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, June 04, 2008

இஸ்லாமும் பிற மதங்களும்...!

................................................. - டாக்டர். ஜாகிர் நாயக்

உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.

பதில்:

1) இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:

எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

2) உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ) இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.
எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ) இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.
இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ) திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:

'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)

'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா? இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ) இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

3) மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ) வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ) இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ) பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ) ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ) இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ) வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

எ) அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில் 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 x 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ) இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4) மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.

.
.
.
.

Friday, May 02, 2008

தாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...?

பைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு !
------------------------------------------------- - அபூ இப்ராஹீம்

இந்த மனிதசமுதாயத்திற்கு நல்வழிக் காட்ட வந்த இறைத்தூதர்களான தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் பற்றி வரும் சம்பவங்களின் இடையிடையே - சில அபத்தமான - ஆபாசமான - அசிங்கமான வர்ணனைகளுடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பைபிளில் நிறைந்துக் காணப்படுகின்றன. காரணம் அதைப் பாதுகாக்க வேண்டிய யூதர்கள் தங்கள் மனோஇச்சைப்படி தீர்க்கதரிசிகள் மீதே அபான்டமான - பொய்யான கதைகளை இட்டுக்கட்டியதால் தான் இப்படிப்பட்ட ஆபாசக் கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.

யூதர்களின் இப்படிப்பட்ட அவதூரான கதைகளுக்கும், அபத்தமான வரலாற்று திரிபுகளுக்கும் பலியான நல்லேர்களில் தாவீது தீர்க்கதரிசியும் ஒருவர். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று தாவீதை மையப்படுத்தி இயேசுவை அறிமுகப்படுத்தும் அளவுக்கு தாவீது ஒரு மிகச் சிறந்த தீர்க்கதரிசியாக அன்னைறய மக்களால் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும் போது 'இவர் ஒரு மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்றும் ஒழுக்க சிலர்களான நல்லோர்களில் ஒருவர்' என்றும் சாண்று பகர்கிறது.

'தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் - அதற்கு அவ்விருவரும்: 'புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 27:15)

இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார். (அல்குர்ஆன் 38:17)

இப்படிப்பட்ட பல நற்பெயருக்கு சொந்தக்காரரான - பரிசுத்தரரான - தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி யூத எழுத்தாளர்கள் செய்துள்ள கற்பனைக் கதையையும் அதனால் அது இடம் பெற்றுள்ள பைபிலின் புத்தகங்களுடைய புனிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் சற்று அளசுவோம்.

தாவீது ஒரு தரங்கெட்ட - ஒழுக்கங்கெட்ட செயலைச் செய்தார் என்று ஒரு கதை பைபிளில் வருகின்றது.

1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். 2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான் அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். (2 சாமுவேல் 11 : 1 - 5)

ஒரு தீர்க்கதரிசி - மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவர் - இறைவழியில் ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சியாளர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரின் பெயரில் யூத எழுத்தாளர்கள் இட்டுக்கட்டியுள்ள கதையைப் பார்த்தீர்களா கிறிஸ்தவர்களே!

ஒரு அன்னியப்பென்ணை - அதுவும் தனக்காக - தனது நாட்டுக்காக - தான் அனுப்பிய படையில் - எதிரி நாட்டவரை எதிர்த்து போரிட சென்ற ஒரு உன்மையாக போர்வீரனுடைய மனைவியை - தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அப்பெண்னை தவறான கண்னோட்டத்தோடு பார்த்தது மட்டுமல்லாமல் அவளை அழைத்து விபச்சாரமும் செய்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர்.

ஒரு புனிதர் மீது அபாண்டமான - இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையை இந்த யூத எழுத்தாளர்கள இதோடு நிருத்தினார்களா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் (?) செய்தாகவும் எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள் :

6. அப்பொழுது தாவீது: எத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான் அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9. ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான் அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான். (2 சாமுவேல் 6 - 12)

நல்லோர்களிள் ஒருவரான தாவீது மேலும் மேலும் தவறு செய்ததாக பைபிளில் இந்த வசனங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.

தனது படைவீரனின் மனைவியை வேண்டுமென்றே தெரிந்தும் அவளோடு விபச்சாரம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் தாவீதால் கற்பம் அடைந்து விட்டால் என்று தெரிந்ததும் அதை மறைப்பதற்காக - போர்க்களத்தில் இருந்த அவளின் கனவனான உரியாவை அழைத்து வந்து அவளோடு உடளுறவு கொள்ள வைத்து, அதன் மூலம் தாவீதால் உன்டான குழந்தை - உரியாவுக்கு பிறந்ததாக சொல்வதற்கு சூழ்சி செய்த ஒரு கொடியவர் என்றும் இதை அறியாத உரியா தாவீதுக்கு மிகவும் விசுவாசியாக இருந்தாகவும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதன் பிறகு தாவீது என்ன செய்தார்? அதையும் யூத எழுத்தாளர்கள் இப்படி கதை எழுதி வைத்துள்ளனர்:

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான். 14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள் ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ? 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான் நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27. துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது. (2 சாமுவேல் 11: 13-27)

இந்த அளவுக்கு ஒரு கொடுமையாமையான ஆட்சியாளராக - கொடூரமணம் படைத்தவராக - சூழ்ச்சிக்காராக - தனக்காக போர்க்களத்திற்குச் சென்ற ஒரு உன்மையான வீரனின் மனைவியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அதை மறைப்பதற்காக செய்த சூழ்ச்சியில் அவன் கணவன் விழவில்லை என்பதால் அவனை மீண்டும் போர்களத்திற்கு அனுப்பி கொல்லப்பட வைத்த கொலைகாராகத் தான் இந்த பைபிள் - கர்த்தரால் மக்களுக்கு நல்வழிப்படுத்த வந்த தாவீது தீர்க்கதரிசியைக் - காட்டுகின்றது. இன்றைய நடையில் சொல்வதென்றால் இ.பி.கோ சட்டத்தின் படி விபச்சாரம், கற்பழிப்பு, சதிதிட்டம் தீட்டுதல், கொடூரமாக கொலை செய்தல், நாட்டுக்கு துரோகம் செய்தல், தான் எடுத்துள்ள இரகசிய காப்பு பிரமானத்துக்கு மாறாக நடத்தல் இன்னும் எத்தனைவிதமான குற்றங்கள் இருக்கின்றதோ அவை அனைத்து குற்றத்தையும் ஒரு சேர செய்த கொடியவராகவும், இப்படிப்பட்டவருக்கு எவ்வளவு கொடுமையான தண்டனைக் கொடுத்தாலும் அது தகும் என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை தவறுகளையும் ஒரு தீர்க்கதரிசி - கடவுளின் பெயரால் மக்களைத் நல்வழிப்படுத்த வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தார் என்று எழுதிவைத்துள்ளனர்.

இந்த தீர்க்கதரிசி செய்த இந்த அநாகரிகமான - கொடூரமான செயல் - கடவுளின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததாகவும் பைபிலிலேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11:27)

கடவுளுக்கு இந்த செயல் பொல்லாப்பாகத் தெரிந்ததாக சொல்லப்பட்டுள்ளதே அப்படிப்பட்ட இந்த கேடுகெட்ட செயல்களையெல்லாம் உன்மையிலேயே தாவீது செய்திருப்பாரோயானால் இந்த கொடுஞ்செயலுக்கு அன்றையக்காலத்தில் என்ன தண்டனை இருந்ததோ அந்த தண்டனையின் படி தாவீது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

அன்றைய காலத்தல் ஒருவன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை என்று பைபிளே சொல்கின்றது :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10)


கடவுள் மாமா வேலை செய்பவரா?தாவீது பற்றிய இந்தக் கதை உன்மை என்றால் கடவுளின் - பைபிளின் - க்குற்றவியல் சட்டத்தின்படி கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்த தவீதுக்கு கடவுள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனை என்ன?

அதையும் பைபிளே சொல்கின்றது?

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

எந்த அளவுக்கு கடவுளை கேடுகெட்டவராக - தரம் தாழ்ந்தவராக - மாமா வேலைப் பார்ப்பவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா? தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு (?) கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய தண்டனையான மரணத்தண்டனையை கடவுள் நிறைவேற்றாதது மட்டுமின்றி அதற்கு வேறு ஒரு தண்டனையின் மூலம் கடவுள் - தாவீதின் மகள்களைக் மற்றவனுக்கு கூட்டிக்கொடுக்கும் தண்டனையை கொடுப்பதாகச் சொன்னார் என்ற சொல்கின்ற அளவுக்குத் துணிந்தவர்கள் தான் இந்த யூத எழுத்தாளர்கள்.

ஆதாவது தாவீது செய்த இந்தச் செயல்களுக்கான தண்டனையாக, ஊரார் முன்பாக தாவீதுடைய மகள்களை கடவுளின் ஆணைப்படி சிலர் கற்பழிப்பார்கள் என்று கடவுள் சொன்னாராம். எந்த அளவுக்கு கடவுளை கேவளமானவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

ஒரு குற்றவியல் சட்டம் - அதுவும் கடவுளால் வழங்கப்பட்ட - அன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்க - அதற்கு மாற்றமாக அந்தச்சட்டங்களை கேளி செய்வது போல் அசிங்கமான செயலை செய்ய கடவுள் தூண்டினார் - கூட்டிக்கொடுக்கும் ஒரு சட்டத்தை சொன்னார் - என்று எழுதிவைத்துள்ளனர். இதை எப்படி எழுத மணம் வந்தது இவர்களுக்கு? ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு? கிறிஸ்தவ சகோதரர்கள் இதை சிந்திக்க வேண்டும். இந்த ஆபாபசமான - அபாண்டமான வரலாற்றுத் திரிபுகளை தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் கிறிஸ்தவ சகோதரர்களே. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, முதலிலே தாவீது தீர்க்கதரிசியின் மீது கலங்கம் கற்பித்த யூத எழுத்தாளர்கள் கடைசியில் கடவுளின் வேதத்திலேயே கடவுளை கேவலப்படுத்தி எழுதியிருப்பதை பார்த்தீர்களா கிறிஸ்தவ சகோதரர்களே!

இந்தக் கதை பொய் என்று எப்படி சொல்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் எழழாம். இந்தக் கதை உன்மையிலேயே கடவுளால் அருளப்பட்டதாக இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அதை பைபிள் ஒளியிலேயே சற்று அளசுவோம்.

காரணம் 1 : ஒரு பரிசுத்தமான தீர்க்கதரிசி - மக்களுக்கு நல்வழிக்காட்ட வந்த தீர்க்கதரிசி - இறைவனுடைய சட்டத்தின் படி ஆட்சி செய்த தீர்க்கதரிசி இந்த இழிவான காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் இன்றைக்கும் பைபிளிலேயே ஒரு புனித புத்தகமாக இருக்கும் அளவுக்கு ஒரு பரிசுத்தர் இந்த அளவுக்கு கொடியவராக இருந்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இது சிலரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். இது முதல் காரணம்.

காரணம் 2 : நாம் மேற்கூறியுள்ள படி ஒருவன் அடுத்தவன் மனைவியிடம் விபச்சாரம் செய்தால் அவன் கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம் அன்றைய காலத்தில் இருந்த குற்றவியல் சட்டம் (பார்க்க லேவியராகமம் - 20:10) ஆனால், அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டது - தனது படையிலேயே தனக்காக போரிடசென்றவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தது - தனது படைவீரனுக்கு துரோகம் செய்தது, விபச்சாரத்தின் மூலம் தாவீதால் பிறக்கப்போகும் குழந்தையை உரியாவின் தலையிலேயே கட்ட நினைத்தது, இந்த சூழ்சிக்கு பலியாகாத உரியாவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்து அதை நிறைவேற்றியது போன்ற - கடும் குற்றத்தை செய்த தாவீதுக்கு - எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட தண்டனையான மரணத் தண்டனையை கடவுள் கொடுக்க வில்லை என்பது போல் இந்த சம்பவத்தின் மூலம் காட்டப்படுகின்றது. (அதாவது கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், தனக்கு வேண்டாதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் நடந்துக் கொள்வர் என்பது போல் காட்டப்படுகின்றது.) தாவீது இந்தத் தவறைச் உன்மையிலேயே செய்திருந்தால் கண்டிப்பாக அந்த சட்டத்தின் படி கடவுள் தண்டித்திருக்க வேண்டுமே. அவ்வாறு செய்யாமல் அவரை கடவுள் தப்பவிட்டதாக காட்டப்படுகின்றது. இது இரண்டாவது காரணம்.

காரணம் 3: கடவுள் வழங்கியுள்ள குற்றவியல் சட்டங்கள் என்பது சக்தியும் பலமும் உள்ளது என்பது பைபிளின் சான்று. (சங்கீதம் 19:7) அவரது சட்டங்கள் மனித சமுதாயத்தில் குற்றங்களை ஒழித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளின் சட்டங்களை கேளிக்குறியவை என்பது போல் இங்கே காட்டப்படுவடுவதுடன், 'கடவுள் மாமா வேலைப்பார்ப்பவர் - கூட்டிக்கொடுப்பவர்' என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் சாத்தானின் தூண்டுதலால் திரித்து எழுதப்பட்டிருக்குமே யொழிய கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பதுதான் மறக்க முடியாத உன்மை.

காரணம் 4 : 2 சாமுவேல் 12: 11 - 12 வசனங்களின் மூலம் கடவுளைத் தரங்கெட்டவராகவும் - மாமா வேலைப்பார்ப்பவராகவும் - கூட்டிக்கொடுப்பவராகவும் காட்டப்படுகின்றது. அதாவது ஒரு விபச்சாரத்திற்குரிய தண்டனையால் அந்த விபச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு பதிலாக பல விபச்சாரகர்களை ஏற்படுத்தி கேவலமான - நகைப்பிற்குறிய சட்டங்களை கொடுப்பவர் தான் கடவுள் என்று காட்டப்படுகின்றது. இது போன்ற வசனங்களை கடவுள் அறிவிக்க மாட்டார் என்று பைபிளே சொல்கின்றது.

சங்கீதம் 33:4 : கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

For the word of the LORD is right; and all his works are done in truth. (kjv)

அது மட்டுமல்ல இது போண்ற அசிங்கமான சட்டங்களை துன்மார்க்கன் தான் சொல்வான் என்றும் பைபிளே சான்று பகர்கின்றது.

துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும். அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது (சங்கீதம் 33 : 1-2)

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த சம்பவம் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தாவீது தீர்க்கதரிசியின் மீது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணம்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கேவலமான கதையால் பைபிளே கேள்விக்குறியாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.

'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - (உபாகமம் 23:2)

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, அவரது மகன் சாலமோன் மற்றும் அவரின் சந்ததியின் மூலம் பிறந்த இயேசு உட்பட பரிசுத்தவான்கள் யாவரும் கடவுளுடைய சபைக்கு வரமுடியாதாம் - அதாவது அவர்களெல்லாம் பரிசுத்தவானாக - கடவுள் ஊழியம் செய்தத் தகுதியற்றவர்களாகிவிடுவர் என்கிறது பைபிள். விபச்சாரம் செய்பவருக்குப் பிறக்கும் ஒருவர் இருவரல்ல.. பத்து தலைமுறை யானாலும் வரமுடியாது என்கிறது பைபிள். இந்த தாவீது எழுதின புனித புத்தகங்கள் பைபிளில் உள்ளது. அவரது மகன் சாலமோன் எழுதிய புனித புத்தகங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. உபாகமம் 23:2 ன் படி இவர்களே பரிசுத்தவான்களாக முடியாது எனும் போது இவர்கள் எழுதிய புத்தகங்கள் எம்மாத்திரம். தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றல்லவா?

தாவீது பற்றிய இந்தக் வரலாற்றுத் திரிபை நம்பினால் கிறிஸ்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். அந்த ஒரு கதையை தூக்கி எறிகின்றீர்களா? அல்லது பைபிலையே ஒதுக்கித்தள்ளப்போகின்றீர்களா? நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Wednesday, April 30, 2008

விக்கிரக வழிபாட்டை விமர்சிப்பதேன்?

கேள்வி : ஹிந்து கிறிஸ்துவ மதத்தினர் மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகங்களை வைத்துள்ளனர். மற்றபடி விக்கிரகத்தின் வழியே ஏக இறைவனையே வணங்குகின்றனர். அதை ஏன் குறை காண்கிறீர்கள்?

பதில் : பொதுவாக ஆட்களில் அல்லது பொருட்களில் காணக்கூடிய உருவமைப்புகள் வணக்கத்திற்குரிய பொருளாயுள்ள ஒரு சிலை விக்கிரகமாகும். சிலைகளுக்கு முன் வணக்கச் செயல்களை செய்கின்றவர்கள் உண்மையில் தங்கள் வணக்கம் அந்த சிலை குறித்துக் காட்டும் கடவுளுக்குச் செலுத்தப்படுகிறதென சொல்கின்றனர். சிலைகளை இவ்வாறு பயன்படுத்துவது இஸ்லாமல்லாத அனைத்து மதங்களிலும் வழக்கமாயுள்ளது.

கிறிஸ்தவ பழக்கத்தை குறித்து, நியூ கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா (1967 Book VII, Page 372) கூறும் பொழுது: 'ஒரு சிலைக்கு செலுத்தப்படுகிற வணக்கம் அது குறித்து நிற்கும் அந்த ஆளிடம் போய் சேர்ந்துவிடுவதால், அந்த ஆளுக்குச் செலுத்த வேண்டிய அதே வகையான வணக்கத்தை அந்த ஆளைக் குறித்து நிற்கும் அந்த சிலைக்குச் செலுத்தலாம்' என்றுள்ளது.

இறைவனை நினைவில் கொள்ளவும், மனதை ஓர்மைப்படுத்தவும் விக்கிரகங்களை வைத்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார். ஆனால் இது ஏற்புடையவாதமல்ல காரணம்:

1. உலகமத கிரந்தங்களை ஆராய்வோமானால் அவையனைத்தும் ஏக இறைவனை எவரும் கண்டதில்லை என்றே கூறுகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை' (அதர்வவேதம் 32:3)

ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்ல. அசூரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல' (பகவத் கீதை 10:14)
- என்று இந்து வேத இதிகாசங்கள் கூறுகிறது.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1 : 18)
- என்று கிறிஸ்துவ வேதம் கூறுகிறது.

அப்படியிருக்க காணாத ஒரு வஸ்துவுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்?

உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் ஒரு நாயை அல்லது பூனையை போன்ற உருவம் வடித்து வைத்து இது தான் நீங்கள் என்று கூறுவார்களானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய பாரத பிரதமரை காணாத ஒருவர் அவரை நினைவில் நிறுத்த ஒரு குரங்குச் சிலையை வடித்து வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வரா? மாட்டார். ஏன்? குரங்கும், நாயும் மனிதனை விட தரம் தாழ்ந்தது என்று நாம் கருதுவதால் ஆகும்.

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்? படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம்தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா? ஆகவே அது கூடாது என்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறது இஸ்லாம்.

2. விக்கிரங்களுக்கு புனிதம் கற்பிப்பதில்லை. அதன் வழியே ஏக இறைவனையே வணங்குகிறோம் என்று ஒரு சாரார் கூறுவதும் ஏற்புடைய வாதமல்ல. விக்கிரகங்களுக்கு புனிதம் கற்பிக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். விக்கிரகங்களைச் செதுக்கும் போது விரதம் இருப்பதும். விக்கிரகத்தை நிறுவும் போது சிறப்ப வழிபாடுகள் செய்வதும் அதற்கு சந்தனமும், பூவும் சாத்துவதும், பாலாபிஷேகமும், பன்னீர் அபிஷேகமும் செய்வதும், பஞ்சாமிர்தமும், அரவணையும் படைக்கப்படுவதும் புனிதம் கற்பிக்கப்படுவதையே பறைசாற்றுகிறது. அதனால் தான் ஒரு விக்கிரகத்தை மாற்றி மற்றொரு விக்கிரகத்தை நிறுவ எவரும் முன் வராததை நடைமுறை உலகில் காண்கிறோம்.

3. இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதை இறைவன் தான் கற்றுத்தர வேண்டும். ஆனால் உலகில் காணப்படும் எந்தவொரு வேதகிரந்தமும் இறைவனுக்கு விக்கிரகம் வடித்து வைத்து வணங்குங்கள் அது உங்கள் மனதை ஓர்மைப்படுத்த உதவும் என்று கற்பிக்கவேயில்லை.

'யட்சத்து சான பஷ்யதி ஞான சஷ்யம் சிலஸ் யதி
பிரம்மத்துவம் வித்தி நேதம் ஏகிதம் முபாஸதே'


(கண் கொண்டு காண சாத்தியமில்லாதது எவனையோ அவனே படைத்த இறைவனாவன். அவனே கண்களுக்கு பார்வை சக்தியை வழங்குகிறவன். இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு காணும் வஸ்துக்கள் யாவும் இறைவனில்லை) என்று கேனே உபநிஷத் 1 : 6 கூறுகிறது.

'மேலே வானத்திலும கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்குமஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்' என்று பைபிளும் (யாத்திரகாமம் 20:1-5) கூறுகிறது.

எனினும் அவைகள் ஏட்டளவில் இருப்பதாலும் இன்னும் உருவம் கற்பித்து வணங்குவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சலோகங்களையும், வசனங்களையும் அவ்வேதங்கள் இடைச் சொறுகல்களாக உட்கொண்டிருப்பதாலும் இந்து கிறிஸ்தவர்கள் விக்கிரக வழிபாட்டை விட்டுவிடத் தயாரில்லை. ஆனால் இறைவன் தன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் திட்டவட்டமாக கடுமையாக விக்கிரக வழிபாடு கூடாது என்கிறான்.

விக்கிரகம் தான் மனதை ஓர்மைப்படுத்துகிறது என்பது ஏற்புடைய வாதமல்ல முஸ்லிம்கள் எந்த ஒரு விக்கிரகமும் வைக்காமல் மனதை ஒர்மைப்படுத்தியே ஏக இறைவனை நேரடியாக வணங்குகின்றனர். இன்னும் சொல்வதானால் விக்கிரக வழிபாடுடையவர்கள் தாம் தங்கள் வழிபாட்டின் போத மனதைச் சிறகடிக்கும் வகையில் மணி அடித்தும், கொட்டடித்தும் இசைக்கருவிகளை இசைத்தும் கொண்டுதான் விக்கிரகங்களை வணங்குகின்றனர். ஆகவே மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகம் வைத்திருக்கிறோம் என்பதும் ஏற்புடைய விதமல்ல.

இன்னொரு கோனத்திலும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நேற்று வரை ஒரு கல் சாதாரனமாக இருந்துக்கொண்டிருக்கும். அல்லது அது மேல் எத்தனையோ மனிதர்களாலோ அல்லது மிருங்களாலோ அசிங்கம் செய்யப்பட்டிருக்கும். அடுத்த நாள் அந்தக் கல்லை ஒரு சிற்பி எடுத்து இவர்கள் விரும்புவது போல் இவர்கள் விருப்பப்பட்ட சிலையை வடித்துக்கொடுத்ததும் அந்தகல்லுக்கு சக்தி வந்துவிடுவதாகவும், உடனே அதை வணங்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

அந்தக் கல் நேற்றுவரையிலும் கேட்பாறற்று கிடந்ததே! அப்பொழுதெல்லாம் அதை தெய்வமாக பார்க்காத மனிதன், அதை அவர்கள் விரும்புவதுபோல் சிலையாக வடிக்கப்பட்டதும் உடனே வணங்குவதைத்தான் தவறென்று கூறுகிறது இஸ்லாம். அது ஒரு கல் அவ்வளவு தான். அது எந்தவிதத்திலும் வணங்குவதற்கு தகுதியற்றது என்பதே இஸ்லாத்தின் ஆணித்தரமான வாதம்.

இந்த இடத்தில் மனிதனை இந்த விக்கிரக வழிபாடு ஓர்மைப்படுத்துகின்றதா? அல்லது அவனது பகுத்தறிவுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறதா? இதைத்தான் ஒரு கவிஞன் சொன்னான் :

மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது............... என்றான்

உலகத்தில் எல்லா மதக்கிறந்தங்களும் விக்கிரக வழிபாட்டை எதிர்க்கின்றன. ஆனால் அந்த மதங்களால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அது முடியவும் முடியாது. காரணம் அந்த மதங்களில் வேறு ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடுகள் நுழைந்துவிடும். அது இந்துமதமானாலும், கிறிஸ்தவ மதமானாலும் அல்லது புத்தமதமானாலும் இன்னும் எத்தனையோ மதமானாலும் இதே நிலைத்தான். ஆனால் இஸ்லாம் மட்டும் தான் உலகத்தில் வேறு எந்த மதத்தைக் காட்டிலும் விக்கிரக வழிபாட்டை நியாயமான காரணங்களுடன் எதிர்ப்பதுடன் அதை 1400 ஆண்டுகளாக இன்றும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுவே இஸ்லாம் தான் 'சத்திய மார்க்கம்' என்பதற்கு சிறந்த சாண்று.
.
.
.
.

Friday, April 18, 2008

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்

நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.

இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.

நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.

இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.

தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.

அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

தொடரும் இறைவன் நாடினால்...
.
.
.

Wednesday, April 16, 2008

இஸ்லாம் என்றால் என்ன? (பாகம் - 1)

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல் இறவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம். இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.

இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.

இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?

துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4:1)

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2 - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்? செல்ல இங்கே அழுத்தவும்.
.

Saturday, April 12, 2008

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)

.................................................................. - அபு இப்ராஹீம், சென்னை

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் - குழப்பங்களையும் பற்றி தொடர்கட்டுரையை வெளியிட்டு வருகின்றோம். அதன் முதல் பாகத்தை பின்வரும் தலைப்பில் படிக்கவும்.

'இயேசுவின் வம்சாவளியும் பைபிளின் குளறுபடியும்' (பாகம் - 1) க்குசெல்ல இங்கே அழுத்தவும்...

இதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி...

சாலாவின் தந்தை யார்?

லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா?


Image and video hosting by TinyPic
மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா?

(இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.)

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா?

இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது.

'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3)

இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6 (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்)

அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் 'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5)

இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.

'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை.

இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6) , தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும்.

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி?

தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்?

கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்?

ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் :

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17

அதாவது அந்த வேதவசனங்கள் :

1. உபதேசத்திற்கும்
2. கடிந்துக்கொள்ளுதலுக்கும்.
3. சீர்திருத்தலுக்கும்...
4. நீதியைப் படிப்பித்தலுக்கும்...

உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில்.

பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)

வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3)

இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா?

அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக.

விளக்கங்கள் தொடரும்.. இறைவன் நாடினால்...
.
.
.

Thursday, April 10, 2008

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)

............................................................................... - அபு இப்ராஹீம், சென்னை

உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16

புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது.

ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் :

...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison)

...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு)

இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ:
இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் :

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன்.

இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது.

இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்?

ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்?

மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்...

Image and video hosting by TinyPic
(அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்)

ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார்.

Image and video hosting by TinyPic
மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்?

இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்..

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் :

'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்'

'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'.

மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது.

தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்?
Image and video hosting by TinyPic
தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன?

1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும்.

இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.

எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

சொருபாபேலின் மகன் யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா?

அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா?

கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம்.

சொருபாபேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி?

சாலத்தியேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்?

மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்?

இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா?

இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா?

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா?

இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ :

லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும்.

அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்?

அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் :

'[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098)

இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம்.

அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை.

அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது.

அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதன் பாகம் - 2 அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்...
...
.
.
.

Tuesday, April 08, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.
.
.
.