வெட்ட வெளிச்சமாகும் பைபிளின் முரண்பாடுகள்!
முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்த பைபிளை இறைவேதம் என்று நம்பியதன் விளைவு அதன் தெளிவான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியதும் அதை நடுநிலைக் கண்னோட்டத்தோடு சிந்திக்க மனமில்லாமல், அதற்கு பதில் என்றப் பெயரில் எதையாவது எழுதி தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் திருப்திபடுத்தியாக வேண்டும் என்றக் கட்டாய நிலைக்குத் சில கிறிஸ்தவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு தற்போது நமக்கு பதில்(?) என்றப் பெயரில் அவர்கள் எழுதும் பதிவுகளே சாட்சி. நாம் எடுத்துக்காட்டிய ஒரு முரண்பாட்டை சமாளிப்பதற்காக இவர்கள் எத்தனை எத்தனை முரண்பாடுகளை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அவர்களின் பதிவுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
காரணமின்றி பைபிளோடு திருக்குர்ஆனை இணைத்து, திருக்குர்ஆனில் வரலாற்றுத் பிழைகள் இருப்பதாக ஒரு கிறிஸ்தவர் எழுதியதற்கு அவரது அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டி தெளிவாக விளக்கமளித்ததுடன், இவர்கள் எந்த பைபிளை - எவருடைய பெயரை வைத்து குர்ஆனில் தவறுகள் இருப்பதாக எழுதினார்களோ அதே பைபிளின் அதே யோவான் ஸ்னானனின் வரலாற்றில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.
எங்கேயாவது - எந்தத் தளத்திலாவது நமது கட்டுரைக்கு பதில் கிடைக்குமா? என்று தேடி அலைந்தவர்கள், தற்போது ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து ஒருவருக்கு பதிலாக எழுதியிருந்த மழுப்பலான பதிலை மொழி பெயர்த்து ஏகத்துவத்திற்கு பதில் என்று வெளியிட்டுள்ளனர். நாம் முன்பு பைபிளில் உள்ள அறுவருக்கத்தக்க ஆபாசமான வசனங்களை சுட்டிக்காட்டியபோது சம்பந்தமில்லாமல் அவை எல்லாம் உவமையாக சொல்லப்பட்டது என்று சொல்லி சமாளித்து தப்பித்துக்கொண்டது போல், இதையும் ஒரு வகை உவமையாக சொல்லப்பட்டதுதான் என்று சமாளித்து தப்பித்துக்கொள்வார்களோ என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்படி சமாளிப்பதாவது எவ்வளவோ மேல் என்று எண்ணும் அளவுக்கு இவர்களின் இந்த பதில் பதிவு அமைந்துள்ளது என்பது தான் நகைச்சுவையான விஷயம்.
நமக்கு பதில் என்றப்பெயரில் பதிவு போட்ட கிறிஸ்தவர் சுயமாக பதில் ஏதும் எழுதவில்லை. போகட்டும். மற்றவர் யாராவது இதற்கு பதில் எழுதியிருக்கின்றார்களா? என்று தேடியவர், கிடைத்த அந்த மழுப்பலான பதிலை மொழிப்பெயர்த்து வெளியிடும் முன் அந்த மறுப்பு சரியானதுதானா? என்று சற்று படித்துப் பார்த்திருக்க வேண்டாமா? ஏதோ குறுட்டுத்தனமாக எதையாவது எழுதி 'இதுதான் மறுப்பு' என்று போட்டுவிட்டால் அவை எல்லாம் மறுப்புகளாகிவிடுமா? இப்படி குருட்டுத்தனமாக மறுப்பு என்றப் பெயரில் எதையாவது எழுதுவதால் உங்கள் பைபிளில் முரண்பாடுகள் இருப்பது உறுதி என்பது படிப்பவர்களுக்குத் தெரிந்துவிடாதா? என்பதை எல்லாம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏகத்துவத்துக்கு பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ளனர். சரி விளக்கத்திற்கு வருவோம்.
நாம் ஏகத்துவம் தளத்தில் மிகத் தெளிவாகவே பைபிளின் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்? யோவானா? அல்லது வேறு ஒருவரா? என்று பைபிள் ஆதாரங்களை வைத்து கேள்வி எழுப்பியதுடன், இயேசு யோவான் ஸ்னானன் தான் எதிர்ப்பர்க்கப்பட்ட அந்த எலியா என்று சொல்லியிருக்க (பார்க்க மத்தேயு 17:10-13, 11:14) அதற்கு நேர் மாற்றமாக 'நான் எலியா அல்ல' என்று யோவான் மறுத்தார் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க யோவான் 1:19-22) இது பைபிளில் சொல்லப்பட்ட யோவானின் வரலாற்றில் உள்ள தெளிவான முரண்பாடு என்று சில விளக்கங்களுடன் எழுதியிருந்தோம்.
இதற்கு அந்த கிறிஸ்தவர் ஒரு விசித்திரமான பதிலை எழுதியிக்கிறார்:
//அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.//
அதாவது இயேசு சொன்னதும் சரியாம். யோவான் சொன்னதும் சரியாம். அது தான் 'இல்லை... மற்றும் ஆம் என்பதாகும்' என்பது தான் இவர் சுருக்கமாக சொல்லவரும் பதில். என்ன குழப்பமாக இருக்கின்றது என்று யோசிக்கின்றீர்களா? பைபிளை ஒருவர் இறைவேதம் என்று ஏற்றுக்கொண்டால் இது தான் நிலைமை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு வாதத்திற்காக இவரது 'ஆம்' மற்றும் 'இல்லை' என்ற பதிலை எடுத்துக்கொள்வோம். அதையாவது சற்று தெளிவாக குழப்பமில்லாதவகையில் சொன்னாரா என்றால் அதுவும் இல்லை. மாறாக ஒரு முரண்பாட்டைக் களைகின்றேன் என்றப் பெயரில் எத்தனை முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றார் என்று பாருங்கள்.
அந்த கிறிஸ்தவர் எழுதுகின்றார்:
//எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி, அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).//
இயேசு மிகத் தெளிவாகவே எலியா என்பவர் தனக்கு முந்தி வரவேண்டும், அது போல் அவர் (தனது முதல் வருகையின் போதே) வந்தாயிற்று என்று சொல்கின்றார். முதலில் பைபிளில் அவர் சொல்லியுள்ளதை நன்றாக கவனியுங்கள் :
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)
இங்கு இயேசு சொல்லியுள்ள வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் :
எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று
Elias truly shall first come, and restore all things. But I say unto you, That Elias is come already
அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்.
and they knew him not, but have done unto him whatsoever they listed.
நமக்கு மறுப்பெழுதிய கிறிஸ்தவர் சொல்வது போல் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்றால், ஏன் இயேசுவிடம் அவரது சீடர்கள் 'உங்களுக்கு முன்பே எலியா வந்தாக வேண்டுமா? என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று பதில் அளித்ததுடன், எலியா வந்தாயிற்று (That Elias is come already) என்றும் அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள் என்றும் இறந்த கால வினையில் சொல்லவேண்டும்? சற்று சிந்திக்க வேண்டாமா? ஆங்கிலத்தில் வரும் 'already' என்ற வார்த்தை உங்களின் பார்வையில் ஒரு வேலை எதிர்காலத்தைக் குறிக்குமோ? இயேசுவுக்கு முந்தியே எலியா என்பவர் வந்துவிட்டார் என்று சொன்னதோடு அவரை துன்புறுத்தி வேதனை செய்தார்கள், என்றும் அவர் தான் யோவான் என்றும் சொல்கின்றார். அப்படி இருக்க இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று நீங்கள் சொல்வது முரண்பாடாக தெரியவில்லையா?
அடுத்து, 'இது போல் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்' என்று இயேசு தன்னைப் பற்றி எதிர்கால வினையுடன் சொல்கின்றார். இந்த எதிர்காலத்தில் நடக்க இருக்கும் வார்த்தையும் இறந்த காலத்தில் 'எலியா வந்து விட்டதாக' சொன்ன வார்த்தையும் எப்படி சரிசமமாகும்?
அது மட்டுமல்ல இந்த எதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்று இயேசு மிகத்தெளிவாக மற்றொரு வசனத்தில் சொல்கின்றார்:
'நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் (மத்தேயு 11:14)
And if ye will receive it, this is Elias, which was for to come.
'வருகிறவனாகிய எலியா இவன் தான்' என்றால் என்ன அர்த்தம்? வந்துவிட்டான் என்று தானே அர்த்தம்!
எதிர்ப்பார்க்கப்பட்ட எலியா யோவான் தான் என்றும் இதற்கு மேல் வேறு ஒருமுறை எலியா வரமுடியாது என்றக் கருத்திலும் இந்த வசனத்தில் இயேசு சொல்லியிருக்க, அவரின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்று சொல்வது எப்படி சரியாகும்?
இந்த வசனத்தை WBTC பைபிளின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:
எல்லா தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமானமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்க தரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமானமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் என்று சொல்கின்றன. என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள். (மத்தேயு 11:13-15)
இந்த வசனங்களை நன்றாக கவனிக்க வேண்டும். இயேசு சொல்கின்றார்: முன்னறிவிப்புகளெல்லாம் யோவானின் வருகை வரைக்கும் என்றும் நியாயப்பிரமானத்திலும் தீர்க்கதரிசிகளாலும் எதிர்காலத்தில் வருவார் என்று சொல்லப்பட்ட எலியா என்பவர் இந்த யோவானே என்றும் கூறுகின்றார். இதில் சொல்லப்பட்ட வார்த்தைகளை நன்றாக கவனிக்க வேண்டும். 'யோவானின் வருகை வரைக்கும்' என்றால் யோவான் எப்பொழுது வந்தாரோ அது வரைக்கும் என்று தான் அர்த்தம். யோவான் எப்பொழுது வந்தார்? இனிமேல் நடக்க இருப்பதாக சொல்லப்படும் (?) இயேசுவின் இரண்டாம் வருகையின் போதா அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த அவரின் முதல் வருகையின் போதா? இந்த கிறிஸ்தவர் சொல்லும் மறுப்பு எப்படி இருக்கின்றது என்றால் 'நாளைக்கு நான் சாப்பிட்டேன், நேற்று நான் ஊருக்கு போக இருக்கின்றேன்' என்று சிலர் உளறுவார்களே அது போலல்லவா இருக்கின்றது.
அடுத்து 'நீங்கள் நம்பினால் யோவானே எலியா என்பதையும் நம்புவீர்கள்' என்றும் இயேசு சொல்கின்றார். அப்படி இருக்கையில் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட கருத்திற்கு மாற்றமாக, யோவானுக்குப் பிறகு (பைபிளின் படி) பல ஆயிரம் வருடங்கள் கழித்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் எலியா வருவார் என்பது எப்படி சரியாகும்? இந்த வசனங்களில் வரும் யோவான் வரைக்கும் என்ற கருத்திற்கு உங்கள் கருத்து முரண்படுகிறதா இல்லையா? இப்படி நீங்கள் மாற்றிச் சொல்லுவதால் 'என் பேச்சைக் கேட்பவர்களே கவனியுங்கள்' என்று இயேசு சொன்னதற்கு மாற்றமாக எழுதுகின்றீர்கள் என்பது விளங்குகின்றதல்லவா? இது தான் கிறிஸ்தவர்களின் நிலை.
அடுத்து இயேசுவின் இரண்டாம் வருகையின் போதுதான் எலியா வருவார் என்று மல்கியா அதிகாரத்தை வைத்து இந்த கிறிஸ்தவர் எழுதுகின்றார். இந்த மல்கியா அதிகாரத்தை வைத்து 'எலியா தனது இரண்டாவது வருகையின் போதுதான் வருவார்' என்று இயேசு எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மாறாக 'எலியா வந்துவிட்டார்' என்றும் 'எலியா வருவதெல்லாம் யோவான் வரைக்கும் தான் அதற்குள்ளே வந்துவிடுவார், அந்த எலியாதான் யோவான்' என்றும் சொல்கின்றார். இதை வைத்து பார்த்தால் இயேசுவின் வார்த்தைகள் மல்கியாவின் 4 அதிகாரத்தில் உள்ள வசனங்களுக்கு முரண்பாடாகவே அமையும். இது முரண்பாடு இல்லை என்று சமாளிப்பதாக இருந்தால் ஒன்று மட்டுமே வழி. அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசுவின் முதல் வருகையையே இரண்டாம் வருகையாக கணக்கிட வேண்டும். அப்படியே இந்த முரண்பாட்டைக் களைவதற்காக அவரின் முதல் வருகையை இரண்டாம் வருகை என்று எடுத்துக்கொண்டால், அவரின் முதல் வருகை பற்றி வரும் வசனங்களும் இரண்டாம் வருகை பற்றிய வசனங்களும் மற்றுமொரு முரண்பாட்டைக் கொண்டுவரும். எனவே ஒரு வசனத்தின் முரண்பாட்டை களைய நினைத்தால் மற்றொரு வசனம் குறுக்கே நின்று முரண்பாட்டை ஏற்படுத்தும். மொத்த பைபிளுக்கும் இது தான் நிலைமை என்பதை கவனத்தில் கொண்டு சிந்தியுங்கள் கறிஸ்தவர்களே!
அடுத்து அவர் எழுதுகின்றார்:
// இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: 'அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும்.//
அதாவது, எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் (லூக்கா 1:17) என்று யோவான் ஸ்னானனைக் குறித்து தேவதூதன் முன்னறிவிப்புச் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுகின்றார். அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார்' என்று அந்த பைபிள் வசனத்திற்கே மாற்றமாக தனது சுயகருத்தை திணிக்கின்றார். ஆனால், உன்மையில் அந்த லூக்கா வசனத்தில் எலியாவின் ஆவியும், பலமும் என்று எலியாவுடைய ஆவியைப் பற்றி தெளிவாக சொல்லியிருக்க, அந்த வசனத்திற்கு மாற்றமாக அடுத்த வரியிலேயே 'எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவி' என்று மாற்றி சொல்லும் துணிவு எப்படி இவருக்கு வந்தது? 'ஏற்ற ஒரு ஆவி' என்றால் வேறொரு ஆவி என்றல்லவா அர்த்தம். ஆனால் லூக்கா 1:17ல் எலியாவின் ஆவி என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது? இப்படி இவர்கள் மாற்றிக்கூற காரணம் என்ன? எப்படியாவது சமாளித்து இந்த முரண்பாட்டை களைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானே? நாம் கேட்கின்றோம் எலியாவின் ஆவியா அல்லது எலியாவின் பலத்திற்கு ஏற்ற வேறு ஒரு ஆவியா? இதன் மூலம் இவரை சாத்தானின் ஆவி ஆட்டிப்படைக்கின்றது என்று மட்டும் புரிகின்றதல்லவா?
அடுத்து அவர் எழுதுகின்றார்:
//ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). //
எழுத்தின் படியாக என்றோ அல்லது சரீரத்தின் படியாக என்றோ எங்கே பைபிளில் சொல்லப்பட்டுள்ளது? மொத்தத்தில் பைபிளில் எலியா வருவார் என்றும் அவர் வந்துவிட்டார் என்றும் இயேசு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்க அவருக்கு மாற்றமாக - எழுத்து, சரீரம் என்று மாறுபட்டு சொல்லும் துணிவு உங்களுக்கு எப்படி வருகின்றது? இது தான் நீங்கள் இயேசுவை மதிக்கும் லட்சனமோ?
அடுத்து அவர் எழுதுகின்றார்:
//பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா? இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும்.//
இந்த இடத்தில் இவர் சொல்வது போல் யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்கு ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது' என்று ஒரு தவறான தகவலைத் தருகின்றார்.
இவர் சொல்வது போல் யோவானால் 'வகை செய்யப்பட்டது' என்றால் அதற்கு ஏற்றார் போல் 'முந்தி வரவேண்டிய எலியா நான் தான்' என்றோ அல்லது 'எலியாவுடைய ஆவியின் பலத்தைக் கொண்டு உங்களிடம் வந்துள்ளேன்' என்றோ ஒத்துக்கொண்டிருக்க வேண்டியது தானே? அக்கால மக்கள் கிறிஸ்துவுக்கு முன்பாக எலியா என்பவர் வந்தாக வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதையே இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் கேள்வியாகவே வைக்கின்றனர் (மத்தேயு 17:10-13) அதை இயேசுவும் ஒத்துக்கொண்டு 'எலியா வந்தாயிற்று' என்றும் சொல்கின்றார். ஆனால் இயேசுவால் எலியா என்று சொன்ன யோவான் 'நான் எந்த வகையிலும் எலியாவுடம் சம்பந்தப்பட்டவன் இல்லை' என்று மறுக்கின்றார். இப்படி 'நான் எலியா இல்லை' என்று மறுத்தால் இன்னும் எலியா வரவில்லையோ என்று மக்கள் தவறாக எண்ணுவதுடன் இயேசுவையும் ஏற்க நியாயமான தடையும் இந்த யோவானால் தான் ஏற்படுகின்றது. யோவான் 'நான் தான் எலியா' என்று ஒத்துக்கொண்டிருந்தால் இவர் சொல்வது போல் 'முதல் வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்யப்பட்டது' என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவர் சொல்வது போல் நடக்க வில்லையே?
அது மட்டுமல்ல, இவர் சொல்வது போல் 'யோவான் வகை செய்தார்' என்றால் இயேசுவை அந்த கால மக்கள் ஏராளமானோர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே? ஆனால் குறிப்பிட்ட சிலரே தவிர பெரும்பாலோர் அவரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவரின் 12 சீடர்களில் ஒருவனே அவரைக் காட்டி கொடுத்ததோடு, அக்கால மக்களாலும் அவர் துன்புறுத்தப்பட்டு கொள்ளப்பட்டதாக பைபிள் சொல்கின்றது. இப்படி இருக்க எப்படி யோவானின் வருகை 'வகை செய்தது' என்பது சரியாகும்?
எனவே, நீங்கள் எந்தவகையில் பைபிளின் முரண்பாடுகளுக்கு மறுப்பு என்று பதில் எழுதினாலும் அவை அத்தனையும் வேறு ஒரு வகையில் முரண்பாட்டை கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்துமே யொழிய தீர்வைத்தராது நன்பர்களே!
இந்த இடத்தில் நாம் ஏகத்துவம் தளத்தில் எழுதியதை மீண்டும் ஒருமுறை பதிவுசெய்கின்றோம்:
எதிர்ப்பார்க்கப்ட்ட எலியா தனது முதல் வருகையின் போதே வந்தாயிற்று, அவர் தான் யோவான் என்று இயேசு சொன்னார்:
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். (மத்தேயு - 17:10-13)
நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப்போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன் கேட்கக் கடவன். (மத்தேயு 11:14)
ஆனால் இயேசுவால் எலியா என்று அடையாளம் காட்டப்பட்ட யோவானோ 'நான் எலியா இல்லை' என்று மறுக்கின்றார்:
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:19-22)
இந்த வசனத்தில் நீ கிறிஸ்துவா என்று கேட்டதற்கு 'நான் அல்ல' என்று பதில் அளித்த அந்த யோவான் தான், நான் எலியாவும் அல்ல என்று பதில் அளிக்கின்றார். எந்த அளவுககு என்றால், நான் எப்படி எதிர்ப்பார்க்கப்பட்ட கிறிஸ்து அல்லவோ அதே போல் நான் எதிர்ப்பார்க்கப்பட்ட எலியாவும் அல்ல என்று மிகத்தெளிவாக அவரே மறுக்கின்றார். இந்த முரண்பாட்டிற்கு எத்தனை மூன்றாவது புத்தகத்தை எடுத்தாலும் மேலும் மேலும் முரண்பாட்டைத்தான் கொண்டுவருமே யொழிய இந்த முரண்பாட்டைக் களைய எந்த ஒரு தீர்வும் கிடைக்காது என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம்.
அடுத்து மற்றொரு இடத்தில் இயேசு தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்பது போல் எழுதியுள்ளார். இவர் பைபிளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளைப் பற்றித்தான் தெரிந்துள்ளாரே யொழியை பைபிளை சரியாக படிப்பதில்லை என்பது மட்டும் இந்த கருத்தின் மூலம் தெரிகின்றது. விரைவில் மிக விளக்கமாக இயேசு இறைவனா? மற்றும் திரித்துவக் கோட்பாடு சரியானதா? என்பது பற்றிய கட்டுரைகள் நமது தளத்தில் வர இருக்கின்றது இறைவன் நாடினால்.
(இவர் காட்டும் மல்கியா வசனங்கள் சம்பந்தமாக இன்னும் ஏறாளமான முரண்பாடுகள் பைபிளில் இருக்கின்றது. கட்டுரை நீண்டக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம். தேவை ஏற்படின் பின்னர் விளக்குவோம் இறைவன் நாடினால்...)
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.