புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1
பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களை நாம் தெடராக கண்டுவருகின்றறோம். இன்ஷா அல்லாஹ் அவை மேலும் தொடர்ந்து வெளியிடப்படும்.
அதற்கு முன்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களையும் இங்கே நாம் பார்த்துவிட்டால் பைபிள் எந்த அளவுக்கு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அதில் எவ்வளவு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அது எந்த அளவுக்கு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவிடும்.
அடுத்து இங்கே இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது ரோமன் கத்தேலிக்கர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளின் உள்ள பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்களும், புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளில் அதிலிருந்து 7 புத்தகங்கள் நீக்கப்பட்டு 39 புத்தகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. காரணம் அவை அப்போகிரிஃபா (Appocrypha) என்ற தள்ளுபடி ஆகாமங்கள் என்று சொல்லப்பட்டு அந்த 7 புத்தகங்களை நீக்கியுள்ளனர் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். (இன்ஷா அல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும்)
ஆனால் இதே போன்று இன்னும் பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத உன்மைகள். புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ளியுள்ளனர் கிறிஸ்தவ திருச்சபையினர்.
இப்படி ஒதுக்கித்தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்படுகின்றது தெரியுமா? அவற்றில் உள்ள வசனங்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது என்று சந்தேகம் எழுந்ததால் அவை ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று காரணம் கற்பிக்கின்றது கிறிஸ்தவ திருச்சபை.
ஒரு புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதற்கு சொல்லப்படும் மிக முக்கியமான காரணம், அவற்றில் உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகவும், குழப்பங்களாகவும் இருந்ததாலும், தெளிவில்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்ததாலும், அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பலவீனங்களை உடைய ஒரு புத்தகம் கண்டிப்பாக தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது, மாறாக கள்ள அப்போஸ்தலர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும், சாத்தானின் தூண்டுதலாலும் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும், எனவே அவற்றை தள்ளுபடி செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கின்றனர். அதை 'இந்திய வேதாகம இலக்கியம்' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'மேய்ப்பனின் கோல்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறப்படுகின்றது:
ஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மை: தேவ ஏவுதலால் எழுதப்பட்டதின் மற்றொரு முத்திரை அதன் நம்பத்தகுந்த ஆதாரமாகும். சத்தியத்துக்கு புறம்பான அல்லது (முந்தைய வெளிப்படுத்தலின்படி தீர்க்கப்பட்ட) கோட்பாட்டில் தவறுடைய எந்தப் புத்தகமும் தேவனால் ஏவப்பட்டிருக்க முடியாது. அவரது வார்த்தைகள் சத்தியமானதாயும் முரண்பாடானதாயும் இருக்க வேண்டும். - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4
மற்றொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:
முந்தைய வெளிப்படுத்தலோடு எளிதாக ஒத்துப்போவதால் மட்டும் ஒரு போதனை ஏவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால், முந்தைய வெளிப்படுத்தலோடு முரண்பாடு காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் போதனை ஏவப்பட்டதல்ல என்று அது காட்டிவிடும். பொரும்பான்மையான பகுதிகள் நம்பத்தக்கவையல்ல என்ற அடிப்படைக் கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டன. அவைகளின் வரலாற்று ஒழுங்கின்மை, மதக் கோட்பாட்டைப் பற்றிய முரண்பாடான கொள்கைகள், அவை அதிகாரமுடைய அமைப்பிலிருந்தாலும் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கின்றன. அவை தேவனிடமிருந்து வந்தால் அதே வேளையில் தவறுடையதாகவும் இருக்க முடியாது. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4
இப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும், தெளிவற்ற வசனங்களும் இருந்தால், அவை கண்டிப்பாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருக்க முடியாது என்று முடிவு செய்து, அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாக கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.
இதை சற்று தெளிவாக மற்றோர் இடத்தில் இதே புத்தகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:
ஒரு தீர்க்கதரிசனப் புத்தகத்தை முற்றிலும் போலியானது என்று நம்பிக்கையற்ற ஆதாரத்தினால் முடிவெடுக்க முடியுமா? தேவன் அருளிய ஒரு புத்தகமும் போலியானதாயிருக்க முடியாது. தீர்க்கதரிசன புத்தகம் என்று உரிமை கொண்டாடும் ஒரு புத்தகத்தில் மறுக்கமுடியாத பொய்மை காணப்படுமானால், தீர்க்கதரிசன சாட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவன் பொய் சொல்லுபவரல்ல. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 7
இப்படி தெளிவாக, ஒரு புத்தகம் முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் காணப்படுமானால், அவை கண்டிப்பாக தேவனால் அருளப்பட்டிருக்காது, ஏனெனில் தேவன் பொய் சொல்லுபவர் அல்ல, என்று கண்டறிந்து அந்த புத்தகங்களை பைபிளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மிஷினரிகள் வாதிடுகின்றன.
ஆனால் இதே போன்று எண்ணற்ற முரண்பாடான, குழப்பம் நிறைந்த, தெளிவற்ற போதனைகளை உடைய, பொய்கள் நிரம்பிய புத்தகங்களும் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றதே! அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை? அவற்றை ஏன் போலி அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது என்று முடிவெடுக்கவில்லை?
கிறிஸ்தவ திருச்சபையினர் தங்களுக்கு சாதமாக பைபிளில் பல புத்தகங்களை சேர்த்தும் நீக்கியும் இருப்பதற்கு முரண்பாட்டை ஒரு காரணமாக சொல்லும் போது, அதே காரணத்தை கொண்ட இன்றைய பைபிளையும் ஏன் ஒதுக்க முன்வரவில்லை என்பது தான் எமது கேள்வி என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப்பட்ட பெரும் பெரும் முரண்பாடுகள் புதிய ஏற்பாட்டில் மலிந்து கிடக்கின்றது என்பதை இனி தொடராக நாம் காண்போம்.
முரண்பாடு 1:
புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிலும், மூன்றாவது புத்தகமான லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாற்றைப் பற்றி கூறப்படுகின்றது. இவற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளை ஆய்வுப்பூர்வமாக 'இயேசுவின் வச்சாவளியும் பைபிளின் குளறுபடிகளும்' என்றத் தலைப்பில் இரண்டு பாகங்களாக ஏற்கனவே எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்:
இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)
இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)
இறைவன் நாடினால் தொடரும்...
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here